கலங்கடிக்கும் கணவனின்
வாசகிகள் பக்கம்
##~## |
இப்போதெல்லாம் என் கணவர், தன் தோழி ஒருத்தியைப் பற்றி அதிகம் பேசுகிறார். ''அவள் என் கல்லூரி காலத்தோழி. எனக்கு இந்த நிலையான வேலை கிடைப்பதற்குக் காரணமே அவள்தான். ஆரம்பகாலத்தில் நிறைய உதவிகள் செய்திருக்கிறாள். பாவம், இப்போது அநாதையாக இருக்கிறாள்'’ என்றும் அடிக்கடி வருத்தப்படுவது வழக்கமாகிவிட்டது.
'சரி, கல்லூரி நினைவுகளில் மூழ்கி ஏதோ கலங்கிக் கொண் டிருக்கிறார்' என்றே நான் இதை கடந்து கொண்டிருக்க... சமீப நாட்களாக, ''அவளுக்கு நாம் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும். அதற்கு நாம் கடமைப்பட்டிருக் கிறோம். நீ என்ன சொல்கிறாய்..?'' என்று கேட்டு, விஷயத்துக்குள் என்னையும் இழுக்கிறார்.

'அவள் யார், எந்தவிதத்தில் எல்லாம் ஆரம்பக் காலத்தில் உதவிகள் செய்தாள், இப்போது ஏன் அநாதையாகி விட்டாள்?' என்று அவளைப் பற்றி விவரங்கள் கேட்டால், சரியான பதில் சொல்லாமல் மழுப்புகிறார். எங்கள் 22 வருட திருமண வாழ்க்கையில், இதுவரையில் ஒரு நாள்கூட இந்தத் தோழி குறித்து அரசல்புரலாகக் கூட எதுவுமே பேசியதில்லை. அப்படி இருக்க.... திடீர் என்று சில மாதங்களாக, 'என் தோழி ஒருத்தி, உதவிகள் செய்தாள்’ என்று அவர் பேசுவதும் நம்பும்படியாக இல்லை. இந்த நிலையில், 'அவளுக்கு உதவி செய்யலாம்' என்று நான் எப்படி சம்மதம் சொல்வது என்று கலங்கிப் போய் நிற்கிறேன்.
என் மூத்த பெண் திருமண வயதில் இருக்கிறாள். இந்நிலையில், 'உதவி' என்கிற பெயரில் அந்தத் தோழியை இவர் வீட்டோடு அழைத்து வந்துவிட்டால்... ஊருக்கும், உறவுக்கும் நான் என்ன பதில் சொல்வது? என்னை எச்சரித்துக் கொண்டே இருக்கும் மனசாட்சிக்கு நான் என்ன பதில் சொல்வது..?
என்ன செய்யட்டும் தோழிகளே?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 272ன் சுருக்கம்

''வசதியாக இருக்கும் என் தங்கையைப் போலவே, தானும் வாழ ஆசைப்படுகிறாள் என் மனைவி. என் தங்கை நகை வாங்கினால், இவளும் வட்டிக்கு கடன் வாங்கி நகை வாங்குகிறாள். இதனாலேயே எங்களுக்குள் தினமும் சண்டை வலுக்கிறது. இந்த பிரச்னைகள் தெரியாமலே வெளியூரில் படிக்கிறார்கள் என் பிள்ளைகள். இத்தனைக்கும் சொந்த வீடு, தேவையான வருமானம் என கௌரவமாகவே இருக்கிறேன். இவளுடைய ஆடம்பரம் பற்றி எடுத்து கூறினால் 'ஒண்ணுமில்லாதவனைக் கட்டிகிட்டது என் தப்புதான்’ என்று என்னையே காயப்படுத்துகிறாள். இந்த சிக்கலில் இருந்து அவளை மீட்க வழி சொல்லுங்கள்'' என்றபடி என்னிடம் வந்தார், என் தோழியின் கணவர். அவருக்கு உதவ, எனக்கு உங்கள் உதவி தேவை தோழிகளே..!''
வாசகிகள் ரியாக்ஷன்... அதிரடியே அவசியம்!
தன் கணவர், வருமானத்துக்குள் வாழ்கிறாரே என்று சந்தோஷப்படாமல், ஊருக்காக வாழ நினைக்கிறார் உன் தோழி. இந்த எண்ணமே அவசியமில்லாதது, ஆடம்பரம்பானது. மனைவியினால் ஏற்பட்ட தொல்லைகளை எல்லாம் இத்தனை காலம் உன் தோழியின் கணவர் தாங்கிக் கொண்டார் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. பொறுமைக்கும் ஓர் அளவுண்டு. ''இனிமேலும் இப்படியெல்லாம் நடந்து கொண்டால், என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒன்றுமில்லாத என்னைக் கட்டிகிட்டு நீ ஏன் கஷ்டப்படுறே... பேசாம உன் அம்மா வீட்டுக்கு போய்டு'' என்று மிரட்டலாகவே சொல்லிப் பார்க்கச் சொல். சிலசமயங்களில் அகிம்சை கை கொடுக்காது. ஒருவேளை, இதுவே கடைசி அஸ்திரமாக அமைந்து, உன் தோழி உண்மை உலகத்தைப் புரிந்து கொண்டு மீள்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
- ஆர்.வசந்தி, போளூர்
திருடன் கையில் சாவி!
இதுவரை வரவு-செலவு கணக்குகளை உங்கள் தோழியின் கணவர்தான் கவனித்து வந்திருப்பார் என்று தெரிகிறது. சிம்பிள் ஐடியா சொல்கிறேன். திருடன் கையில் சாவி கொடுத்த கதையாக... இனி, மாத சம்பளம் துவங்கி... பிள்ளைகள் படிப்பு வரை உங்கள் மனைவியிடம் ஒப்படைக்கச் சொல்லுங்கள். 'பிள்ளைகளின் படிப்பு, திருமணம், நம்முடைய வயதான காலத்துக்கான சேமிப்பு எல்லாவற்றுக்கும் போக, மீதியிருக்கும் பணத்துக்கு நகை உள்ளிட்ட அனைத்தையும் வாங்கிக் கொள்’' என்றும் கண்டிப்பாகச் சொல்லிவிடச் சொல்லுங்கள். சொகுசாக இருக்கும் வரை மட்டும்தான் மற்றவர்களை ஏய்க்க தோன்றும். உங்கள் தோழி சொகுசாக இருக்கிறார்... அவ்வளவே. அவரை சுறுசுறுப்பாக மாற்றினால், பிரச்னை தீர்ந்துவிடும்!
- எஸ்.ஜம்பகலட்சுமி, சென்னை-45