மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 274

சந்தேகப் புயலில் சரிந்த சந்தோஷம் !

வாசகிகள் பக்கம்

##~##

நான் ஒரு டாக்டர். மருத்துவக் கல்லூரியில் படித்தபோது, என்னுடைய சீனியரைக் காதலித்தேன். இருவரின் பெற்றோர்களையும் சமாதானப்படுத்தி, ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்தோம். இருவரும் இணைந்து கிளினிக் ஆரம்பித்து, கடுமையாக உழைத்து, பெரிய ஹாஸ்பிட்டல் கட்டினோம். எங்கள் வாழ்க்கைக்கு வரமாக பெண் குழந்தை பிறந்து எங்களை சந்தோஷக்கடலில் மிதக்க வைத்தது. ஆனால், எங்களுக்கு இடையில், 'சந்தேகப் புயல் அடிக்கும்' என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை!

எனக்கு சிறு வயதில் இருந்தே தோழிகள், நண்பர்கள் அதிகம். ஆனால் திருமணத்துக்குப் பின், கணவருக்கு அது பிடிக்கவில்லை என்பதால், அவர்களின் தொடர்புகளை விட்டு விலகினேன். இந்நிலையில், ஒரு நாள் இரவு லேண்ட் லைன் நம்பருக்கு ராங் கால் வந்தது. அதில் பேசியவன் ஆபாசமாகப் பேசினான். நான் கண்டித்து தொடர்பை துண்டித்தேன். ஆனால், அதிலிருந்து எங்கள் வீட்டுக்கு ராங் கால் வருவது வாடிக்கையாக, போலீஸில் புகார் கொடுத்தோம். அவர்களும் அந்த ராங் கால் பொறுக்கியைக் கண்டுபிடித்து கண்டித்து அனுப்பினார்கள். ஆனால், சம்பந்தமே இல்லாமல் இதற்கு என் பால்ய நண்பர்கள்தான் காரணம் என்றார் கணவர். அதிலிருந்து என்னை சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து சினிமாத்தன சித்ரவதைகளுக்கு நான் ஆளாக்கப்பட்டேன். உச்சபட்சமாக... ஒரு நாள் இரவு ஹாஸ்பிட்ட லில் இருந்து வந்த கையோடு கிச்சனுக்குள் நுழைந்தேன். பின்தொடர்ந்தவர், ''ஏன் லேட்?'' என்றார். ''ஒரு டெலிவரி கேஸ் முடிச்சுட்டு வர லேட் ஆயிடுச்சு'' என்றேன். ''எவன்கூட சுத்திட்டு வர்றே..?'' என்று கேட்டவாறே திடுதிப்பென்று அருகில் இருந்த மண்ணெண்ணெயை என் மேல் ஊற்றி, பற்ற வைத்துவிட்டார். என் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவர, தீக்காயங்களுடன் ஒருவழியாக உயிர் பிழைத்தேன். அன்றிலிருந்து அவரைப் பிரிந்து, பெற்றோரின் அரவணைப்பில் வாழ்கிறேன்.

என் டைரி - 274

இப்போது, 'மன்னிப்பு’ என்கிற போர்வை யில் மீண்டும் அவருடைய பிரச்னை ஆரம்பமாகியுள்ளது. மகளைக் கைகாட்டி 'இவள், எனக்குப் பிறக்கவில்லை’ என்று நாகூசாமல் சொல்லிப் பிரிந்தவர், இப் போது வந்து தன்னை மன்னித்து விடும்படி என்னிடம் கேட்கிறார். என் மகளை எனக்குத் தெரியாமல் கல்லூரியில் சந்திக் கிறார். என் அப்பா, அம்மாவைத் தேடி வந்து, என்னை அவருடன் அனுப்பி வைக்குமாறு கெஞ்சுகிறார். ''கல்யாண வயசுல நிக்கிற பொண்ணுக்கு, சமூக அந்தஸ்தோட திரு மணத்தை முடிக்க, நீ அவரோட சேர்றதுதான் சரி'' என்கிறது என் சுற்றம்.

'மகளின் வாழ்க்கையை நினைத்து, அவரை மன்னித்துவிடுவோம். இனி, நமக்கென்ன பெரிதாக வாழ்க்கை' என்று ஒரு கணம் நினைக்கிறேன். மறுகணமே... 'நாம் காதலித்துதான் மணமுடித்தோம். ஆனால், அந்தக் காதலின் அருமை புரியாமல், நம்மை இத்தனை அநியாயமாக சித்ரவதை செய்த அந்த நபரை மன்னிக்கவே கூடாது' என்று அதை வெறுக்கிறேன்.

இந்த இக்கட்டான சூழலில் நான் என்ன முடிவெடுக்கட்டும் தோழிகளே..?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 273-ன் சுருக்கம்

''ஆரம்பத்தில் கஷ்டத்தை அனுபவித்தாலும், இன்று நல்ல நிலைமையில் இருக்கும் தம்பதி நாங்கள். இந்நிலையில், தன் கல்லூரி கால தோழி பற்றி அடிக்கடி பேசும் என் கணவர், 'எனக்கு வேலை கிடைப்பதற்கே அவள்தான் காரணம். தற்போது அநாதையாக இருக்கிறாள். நாம் உதவி செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்' என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்துள்ளார். 22 வருட திருமண வாழ்வில் தன் தோழி பற்றி வாய் திறக்காதவர், திடீரென இப்படி சொல்வதை எப்படி நம்ப முடியும்? 'உதவி' என்கிற பெயரில் அந்தத் தோழியை வீட்டுக்கே அழைத்து வந்துவிடுவாரோ என்றும் பயமாக இருக்கிறது. எச்சரிக்கும் என் மனசாட்சிக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்..?''

வாசகிகள் ரியாக்ஷன்...

அடியோடு தவிர்த்துவிடு!

இத்தனை நாள் இல்லாமல் திடீரென எங்கிருந்து முளைத்தார் தோழி? உங்கள் கணவர் ஏதோ கிறக்கத்தில் இருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன். அது எத்தனை ஆபத்தானது என்பதை அவருக்குப் புரிய வைப்பது முக்கியம். இதையே, உங்களுடைய ஆண் நண்பருக்கு, நீங்கள் செய்யத் துணிந்தால்... கணவர் ஒப்புக் கொள்வாரா? திருமணத்துக்குப் பிறகு வரும் இதுபோன்ற கிறக்கங்கள்... ஆபத்தையே தரும். இதனால் உங்களுடைய மகளின் திருமணம் உள்ளிட்டவையும் பிரச்னையில் சிக்கிவிடும் என்பதை கணவருக்குப் புரிய வையுங்கள். இன்றைக்கு பண உதவி செய்ய அனுமதி கேட்பவர், நாளைக்கு வீட்டில் தங்க வைக்க அனுமதி கேட்க மாட்டார் என்று என்ன நிச்சயம்?

- நளினி, கோவை

அனுமதிக்கலாம்... ஆனால்..?

''தோழிக்கு பண உதவி செய்ய வேண்டும் என்கிற நிலையில்தான் உன்னிடம் சொல்கிறார். இதிலிருந்தே அவர் உனக்கு உண்மையானவராக இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. இதை, உன்னிடம் சொல்லாமல் கூட அவர் செய்திருக்க முடியுமே? 'பழைய கதை தேவையில்லை' என்பதற்காக முன்பு உன்னிடம் சொல்லாமல் விட்டிருக்கலாம். அதற்காக அதீத சந்தேகம் தேவையில்லை. அவருக்கு வேலை கிடைக்க காரணமே அந்தத் தோழிதான் என்பது உண்மை என்றால், உதவுவதில் தவறில்லை. நீ, மகள் மற்றும் கணவர் மூவரும் வீட்டிலிருக்கும்போது அந்தத் தோழியை வீட்டுக்கு அழைத்து அறிமுகம் செய்துகொள். உன் குடும்பத்தின் சூழலை பாதிக்காது எனும்பட்சத்தில் உதவி செய்! அதேசமயம், இந்த விஷயம் ஒரு அளவை மீறிவிடாமல் பார்த்துக் கொள்வதும் உன் கையில்தான் இருக்கிறது. இந்த சமுதாயம் எத்தகைய பார்வையை வீசும் என்பதை கணவருக்குப் புரிய வைத்துவிட்டால், எச்சரிக்கையோடு நடந்து கொள்வார்!

- ராஜேஸ்வரி வெங்கட், சென்னை-82