மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 275

வீட்டுக்காரியாக வந்தேன்... வேலைக்காரியாகி போனேன் !வாசகிகள் பக்கம்

##~##

பெண் இனத்தின் பொதுப் பிரச்னைதான்  எனக்கும். மனைவியை நேசிக்காத, மதிக்காத, வெறுக்க மட்டுமே செய்யும் கணவர் வாய்த்திருப்பதுதான் என் சாபம். 'பெரிய கம்பெனியில் மேனேஜர்; கை நிறைய சம்பளம்; நல்ல வரன்' என்று நம்பித்தான் என்னை மணமுடித்துக் கொடுத்தனர் பெற்றோர். ஆனால், போகப் போகத்தான் தெரிந்தது... அது கெட்ட வரன் என்பது!

ஆதியில் இருந்தே அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை. 'ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்’ என்பார்கள். ஆனால், அந்த நாட்களில்கூட என்னிடம் அன்பாகவோ, ஆசையுடனோ அவர் இருந்ததில்லை. 'நாம் என்ன தவறு செய்தோம்?’ என்று புரியாமல் தவித்த நான், ஒரு கட்டத்துக்கு மேல்தான் உணர்ந்து கொண்டேன்... 'மோசமான ஆணாதிக்கவாதிக்கு வாக்கப்பட்டுவிட்டோம்' என்கிற விஷயத்தை! திருமணமான இந்த 10 ஆண்டுகளில் அவரிடம் நான் கண்டதெல்லாம் கண்ணீர்தான்.

என் டைரி - 275

நான் மாஸ்டர் டிகிரி படித்திருந்தபோதும், 'வேலைக்குப் போகக் கூடாது’ என்று கட்டுப்பாடு விதித்தார். சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது... இவை என் அன்றாடப் பணிகள் ஆயின. நானும் நல்ல இல்லத்தரசியாக இருக்கவே  நினைத்ததால், இதையெல்லாம் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், மாலையில் வீடு திரும்பியதும், தனக்காக மனைவி என்பவள் காத்திருக்கிறாள் என்கிற அன்பு இருக்காது அவருக்கு. மாறாக, 'காபி ரெடியாக இருக்கிறதா, வீடு 'நீட்’டாக இருக்கிறதா, டின்னர் தயாராகிக் கொண்டிருக்கிறதா’ என்று, ஏதோ ஒரு முதலாளி மனோபாவத்துடன்தான் நடப்பார். இதையெல்லாம் சம்பளமில்லாமல் அவருக்குச் செய்துகொடுக்கும் வேலைக்காரியாகவே என்னை நினைப்பார்.

ஏதாவது ஒரு வார்த்தை ஆசையாக பேச மாட்டாரா என்று நான் ஏங்கிக்கொண்டிருக்க, அவரோ வீட்டுக்கு    வந்த பின்னும் மடிக்கணினியுடன் பொழுதுகளை கழிப்பார். 'திருமணம் என்பது ஒருமுறைதான், அது இவரோடு நடந்து முடிந்துவிட்டது' என்று என்னை     நானே சமாதானப்படுத்திக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினேன்.

காலப்போக்கில் ஆண், பெண் என்று இரு குழந்தைகளைப் பெற்றெடுத்தேன். அந்தக் குழந்தைகளிடமும் அவர் அன்பில்லாமல் இருக்கும் அதிர்ச்சியை, வேதனையைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்போது பார்த்தாலும் எங்களிடம் வெறுப்பை உமிழ்கிறார். 'நேரத்துக்கு நேரம் சாப்பிட்டு கொழுப்பெடுத்துப் போயிருக்க... ஒடம்பு வீங்கினதுதான் மிச்சம்’ என்பது போன்ற வார்த்தைகள் எனக்குப் பழகிவிட்டன. ஆனால், குழந்தைகளின் ரசிக்க வேண்டிய குறும்புகளுக்குக்கூட, 'நீங்கள்லாம் உருப்படவே மாட்டீங்க’ என்று அவர்களை வெறுப்பதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. அப்படி என்னதான் செய்தோம் இவருக்கு நானும் என் குழந்தைகளும் என்று அழுத அழுகை, இப்போது ஆத்திரமாக மாறியுள்ளது.

இந்த அன்பில்லாத முரடனைத் திருத்த வழி சொல்லுங்கள். அல்லது, 'நரக வாழ்க்கை வேண்டாம். அவனிடமிருந்து விலகிவிடு’ என்று ஒருமனதாக வழிகாட்டுங்கள்!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

 சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி - 275

என் டைரி 274ன் சுருக்கம்

''நான், டாக்டருக்கு படிக்கும் போது, சீனியரைக் காதலித்து கைபிடித்தவள். வாழ்க்கைக்கு வரமாக பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. சிறு வயதிலிருந்தே தோழிகள், நண்பர்கள் வட்டம் எனக்கு அதிகம். இதெல்லாம் அவருக்கு பிடிக்கவில்லை என்பதால், மெள்ள விலகிவிட்டேன்.

இந்நிலையில், போனில் ஒரு ராங் கால் வர, அதிலிருந்தே சந்தேகப் புயல் வீச ஆரம்பித்தது. சினிமா ஸ்டைல் சித்ரவதைகளுக்கெல்லாம் ஆளாக்கப்பட்டு, அவரைப் பிரிந்து பெற்றோருடன் வாழ்கிறேன். தற்போது, மன்னிக்கும்படி கெஞ்சுகிறார். கல்லூரியில் படிக்கும் மகளை, எனக்குத் தெரியாமல் சந்திக்கிறார். 'பொண்ணுக்கு, சமூக அந்தஸ்தோட திருமணத்தை முடிக்க, அவரோட சேர்றதுதான் சரி’ என்று அட்வைஸ் செய்கிறது என் சுற்றம்.

வாஸ்தவம் என்று ஒரு கணம் மன்னிக்க நினைக்கிறேன். மறுகணமே... 'காதலின் அருமை புரியாமல், இத்தனை சித்ரவதை செய்தவரை மன்னிக்கவே கூடாது' என்று அதை மறுக்கிறேன். நான் என்ன முடிவெடுக்கட்டும் தோழிகளே..?''

வாசகிகள் ரியாக்ஷன்...

மீண்டும் ஒரு வாய்ப்பு கொடு!

பழங்கதையை விட்டுத் தள்ளுவோம். காதல் கணவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பது நல்லது என்றே தோன்றுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் மகளின் சம்மதமும் முக்கியம். அவள் 'ஓ.கே’ சொல்லிவிட்டால்... நீங்களும் தலையாட்டுங்கள். அதேசமயம், கணவரை மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்று கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளச் செய்வது முக்கியம். அதுதான், எதிர்காலத்தில் மீண்டும் பிரச்னை வெடிக்காமல் இருக்க உதவும்!

- விஜயலஷ்மி, மதுரை

பெரியவர்கள் பக்கத்தில் இருக்கட்டும்!

உன் டைரியை படித்ததும், 79 வயது மூதாட்டியான எனக்கு, 'சந்தேகக் கோடு... அது சந்தோஷக் கேடு...’ என்கிற பாடல்தான் நினைவுக்கு வந்தது. உன் கணவர், உன்மீது வைத்திருக்கும் அதீத அன்புதான் இந்தப் பிரச்னைக்கு காரணம் என்று நினைக்கிறேன். நீயும்கூட அவர்மீதுள்ள பாசத்தால்தான், அத்தனை  கொடுமை களையும் தாங்கிக் கொண்டு, காவல்நிலையத்தில்கூட அவரை காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கிறாய்!

'இவள் எனக்குப் பிறக்கவில்லை' என்று ஒரு காலத்தில் சொன்னவர், இன்று ரகசியமாக அவளை சந்திக்கிறார் என்பதிலிருந்தே... அவர் திருந்திவிட்டார் என்பதை புரிந்துகொள். மறுபடியும் சேர்ந்து வாழ சம்மதித்துவிடு!

கூடவே, ஒரு விஷயத்தில் கவனமாக இரு. அவருடைய பெற்றோரோ... அல்லது, உன்னுடைய பெற்றோரோ... உங்கள் கூடவே இருக்கும்படி பார்த்துக்கொள். பெரியவர்கள், வீட்டில் இருப்பது எதற்குமே கைகொடுக்கும்.

- ஆர்.பட்டம்மாள், சென்னை-82

எல்லை மீறிய பின், ஏது சமாதானம்?

சந்தேகம், சண்டை என்பது பல குடும்பங்களில் இருப்பதுதான். ஆனால், எல்லை மீறி கொலை முயற்சி வரை சென்ற பிறகு, சமாதானம் சாத்தியமே இல்லை. உன் மகளிடம் மனம் விட்டுப்பேசு. அவளுடைய பிறப்பையே சந்தேகப்பட்ட, அப்பாவின் முகமூடியைக் கிழித்தெறி. 'அப்பா துணை இருந்தால்தான், மகளின் கல்யாணம் நடக்கும்' என்று காலகாலமாக இருக்கும் வாதத்தை உடைந்தெறிந்து, உன் முயற்சியால் அவளுக்கு திருமணத்தையும் நடத்திக் காட்டு! உன் போல பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும் இது ஒரு வழிகாட்டுதலாகவும் இருக்கும்!

- எஸ்.கௌரிலஷ்மி, ஸ்ரீரங்கம்