மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 277

காசு பணம் கொடுப்பது மட்டுமே கணவனின் இலக்கணமா ?

##~##

கல்லூரி காலத்திலேயே, எனக்கு வரப்போகும் என்னவர்... என்னோடு கைகோத்து நடக்க வேண்டும், இருவரும் சேர்ந்து சந்தோஷமாக வெளியிடங்களுக்குச் சென்று வரவேண்டும், பிறந்த நாள், திருமண நாளுக்கு ஆசையாக பரிசுகள் தந்து அசத்த வேண்டும், ஊரும் உறவினர்களும் 'சூப்பர் ஜோடி!’ என்று பாராட்ட வேண்டும்... வேண்டும்... வேண்டும் எனப் பல கனவுகள் எனக்கு!

ஆனால், அத்தனைக்கும் முரணாக எனக்கு அமைந்தார் கணவர்.

திருமண நாளன்று எடுத்த புகைப்படத்தில் என் அருகில் நின்றதோடு சரி... அதற்குப் பின் இந்த 10 வருட வாழ்க்கையில் வீட்டு ஹாலில்கூட அருகருகில் இருவரும் அமர்ந்தது இல்லை. தாம்பத்யம் என்பது அவருக்குக் கடமை. ரொமான்ஸ், அன்பு, அரவணைப்பு என்றால் என்னவென்றே தெரியாத ஜென்மம். இதுவரை என்னை எந்த வெளியிடத்துக்கும் அழைத்துப் போனதில்லை. எனக்காக எந்த ஒரு பொருளும் வாங்கித் தந்ததில்லை. எனக்கு உடம்பு சுகமில்லாத நேரங்களில் அனுசரணையாக இரண்டு வார்த்தைகள்கூட பேசியதில்லை. அலுவலகம், நண்பர்கள் என்று அவர் உலக விஷயங்களை துளியும் என்னுடன் பகிர்ந்ததில்லை.

என் டைரி - 277

'ஒரு ஜடத்துக்கு வாழ்க்கைப்பட்டு விட்டோம்... சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும்' என்று சமாதானமாக முடியவில்லை என்னால். காரணம், அவர் நண்பர்களுடன் இருக்கும்போது அவரைவிட ஒரு ஜாலியான ஆள் உலகத்தில் இல்லை எனுமளவுக்கு அத்தனை சந்தோஷமாக, கலகலவென, ஏழு வயதுக் குழந்தைக்கு அப்பா என்று நம்பமுடியாத அளவுக்கு இளமைத் துள்ளலுடன் இருக்கிறார். ''அவனை மாதிரி ஒரு ஹுயூமர்சென்ஸ் உள்ள பெர்சனை பார்த்ததில்லை!'' என்று அவருடைய நண்பர்கள் என்னிடம் சொல்லும்போது, இதுவரை அவர் என்னிடம் ஒரு முறைகூட சிரித்துப் பேசியதோ, என்னைச் சிரிக்க வைத்துப் பேசியதோ இல்லை என்கிற உண்மை, எந்தளவுக்கு என்னைக் கொல்லும் என்று யோசித்துப் பாருங்கள்.

உறவினர், நண்பர் ஜோடிகள் எல்லாம் சிரிப்பும் சந்தோஷமுமாக, ''அவர்தான் எனக்கு உலகம்'', ''அவதான் என் உயிர்'' என்றெல்லாம் சொல்லி சந்தோஷிப்பதைப் பார்க்கும்போது எனக்கு எத்தனை ஏக்கமாக இருக்கிறது தெரியுமா? பிள்ளைகளிடமும் பாசம் காட்டாமல், இல்லறத்தை ஒரு கடமையாகச் சுமக்கும் அவரை நான் எப்படி சகிக்க?

அரசு வேலையில் இருப்பது, சம்பளத்தை என் கையில் கொடுப்பது... வீடு, மளிகை, குழந்தைகள் படிப்பு என்று எல்லாவற்றையும் என் பொறுப்பில் ஒப்படைத்திருப்பது... இதெல்லாம் ஒரு கணவருக்கான நல் இலக்கணம் என வாதிடும் அவருக்கு, காசு, பணத்தைவிட அன்பையும் அந்யோன்யத்தையும் மனைவி எதிர்பார்ப்பாள் என்பதை உணர்த்துவது எப்படி தோழிகளே..?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு....

 என் டைரி 276ன் சுருக்கம்

''என் தம்பி, ரொம்பவும் ரிசர்வ்டு டைப். உறவினர்கள், நண்பர்கள் என யாருடனும் அதிகம் பழகமாட்டான். இந்நிலையில், இன்டர்நெட் மூலமாக அறிமுகமான ஒரு பெண், மெள்ள... அவனைக் காதலிப்பதாகச் சொல்லிஇருக்கிறாள். அதை நம்பி இவனும் பழக ஆரம்பித்திருக்கிறான். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு, இவனை தவிக்கவிட்டு விலகிப் போய்விட்டாள்!

என் டைரி - 277

'நீ சரியில்லைனு சொல்லிஇருந்தாகூடப் பரவாயில்லைக்கா. உன்னைவிட அவன் (புதிய பாய் ஃப்ரெண்ட்) பெட்டரா இருக்கான். ஸோ ஸாரி... டேக் இட் ஈஸிடா!னு சொல்லிட்டுப் போயிட்டா. உண்மையான காதலை அவ புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானாக்கா..?’ என்று என்னிடம் அனுதினமும் அழுகிறான்.

வேலை, உடல்நலம் என்று எதிலும் அக்கறையில்லாமல், வாழ்க்கையிலேயே பிடிப்பில்லாத அளவுக்குச் சிதைந்து போயிருக்கும் அவன், 'எனக்கு கல்யாணமே வேண்டாம்' என்று புலம்பிக் கொண்டே இருக்கிறான். இத்தகைய கொடுமையான சூழலில் இருந்து அவனை நான் எப்படி மீட்டெடுக்க?''  

வாசகிகளின் ரியாக்ஷன்...

அப்போதே விலகாதது தப்பு!

பெண்களின் கண்ணீரை மட்டுமே இதுநாள் வரை பார்த்து வந்த 'என் டைரி'யில்... ஓர் ஆணின் கண்ணீருக்குத் தீர்வு கேட்டு நின்றது ஆச்சர்யமே! பழகும்போதே, வேறு ஒருவரை காதலிப்பதாக அவள் கூறியிருக்கிறாள். அதை மனதில் வைத்து, அப்போதே அவளிடமிருந்து விலகியிருந்தால்... இந்த நிலை வந்திருக்காது. 'எனக்கு புருஷனாக வர்றவன், உன்னை மாதிரியே இருந்தா சந்தோஷம்' என்று அவள் கூறியதை நம்பி, நப்பாசையில் மனதை பறிக்கொடுத்தது தம்பி செய்த மாபெரும் தவறு.

சரி... நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி, அதைப் பற்றி பேசி பயனில்லை. நிச்சயமாக, நம் மனதுக்கு ஏற்ற பெண் கிடைப்பாள் என்கிற நம்பிக்கையோடு... மனதை திடப்படுத்திக் கொண்டு, ஒரு நல்ல வாழ்க்கையைத் தேர்ந்து எடுப்பதுதான் புத்திசாலித்தனம். இதை தம்பிக்கு நன்றாக புரிய வையுங்கள்!

- தாராபாய் ராமசாமி, சென்னை-19

நல்லவேளை... தப்பித்தார்!

காதலின் புனிதம் தெரியாத.., 'உன்னைவிட அவன் பெட்டர்’ என்கிற கேவலமான புத்தி கொண்ட பெண்ணிடம் இருந்து, நல்லவேளை உங்கள் தம்பி தப்பிவிட்டார். இதற்காக, உங்கள் குடும்பமே முதலில் கடவுளுக்கு நன்றி கூறுங்கள். இம்மாதிரி பெண்கள் திருமணத்துக்குப் பின்னும் ஸ்திரபுத்திஅற்றவர்களாகவே இருப்பார்கள். நம்மை புறக் கணித்தவர்கள், அவமானப்படுத்தியவர்கள் முன்... அவர்கள் பொறாமைப்படும்படி வளர்ந்தும், வாழ்ந்தும் காட்டுவதுதான் நாம் அவர்களுக்கு கொடுக்கும் நிஜமான அடி.

கொஞ்சமும் தகுதியில்லாத பெண்ணை நினைத்து, தம்பி சிதைந்து போக ஒருபோதும் அனுமதியாதீர்கள். தேவையெனில் நல்லதொரு மனநல ஆலோசகரின் உதவியை நாடுங்கள். தகுதியுள்ள ஒரு நல்ல பெண்ணை தேர்ந் தெடுத்து முதலில் தம்பிக்கு மணம் முடியுங்கள். அவர் தன் அன்பை, அக்கறையை உண் மைக் காதலை தன் மனைவிக்கு வாரி வாரி வழங்கட்டும். நல்ல வாரிசுகளை பெற்றெடுத்து அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்!

- எம்.காந்திமதி கிருஷ்ணன், சென்னை-49