என் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்!
##~## |
காலகாலமாக பெண்களால் பெண்களுக்கு நேரும் பிரச்னைதான் எனக்கும்!
என் கணவர், காவல் துறையில் உதவி ஆய்வாளர். நான்கு பெண் களுக்கு தகப்பன். இந்த நிலையில், தன் மூத்த மகளின் வயதுடைய ஒரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துகிறார். வேறொருவரின் மனைவி யான அந்தப் பெண்ணுக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
அவ்வப்போது அங்கு சென்று வருவதாக இருந்தவர், சில வருடங்களுக்கு முன் நிரந்தரமாகவே தங்கிவிட்டார். வீட்டுச் செலவுக்குப் பணம் தருவதில்லை. நான்கு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு... படிப்பு, சாப்பாட்டுச் செலவுக்கு என பணமில்லாமல் நான் தவித்த தவிப்பு கொஞ்சநஞ்சமில்ல. என் குடும்பத்துக்கு எதுவும் செய்யாமல்... அடுத்தவர் மனைவிக்கும், அவளுடைய மகனுக்கும் செலவு செய்யும் கணவரைப் பற்றி காவல்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தேன். அவரை அழைத்துப் பேசியதும், 'இனி அப்படிச் செய்ய மாட்டேன்' என்று உறுதி அளித்தார். ஆனால், சில நாட்களிலேயே பழையபடி அந்தப் பெண்ணிடமே சரணடைந்துவிட்டார்.
இதற்கிடையே அவரிடம் சண்டைபோட்டு, அவருடைய ஏ.டி.எம். கார்டை வாங்கினேன். அதையும் அவர் 'லாக்’ செய்துவிட்டார். என் அப்பா சப்போர்ட் இருந்ததால், என் மூன்று பெண்களுக்குத் திரு மணத்தை முடித்துவிட்டேன். அதற்குகூட விருந்தினர்போல்தான் வந்து சென்றார்.

இப்படிப்பட்ட சூழலில், கணவருடைய சர்வீஸ் முடிய இன்னும் ஒரு வருடம்தான் இருக் கிறது. எங்களுக்குச் சொந்தமாக வீடு, வேறு சொத்து எதுவும் கிடையாது. பேங்க் பேலன்ஸ்கூட இல்லை. ஏற்கெனவே ஒருமுறை 'ஜி.பி.எஃப்’-ல் இருந்த 50 ஆயிரம் ரூபாயையும் எடுத்து அந்தப் பெண்ணுக்கே கொடுத்துவிட்டார். இந்த விஷயம் எனக்குத் தெரியாது. அவருடன் வேலை பார்த்தவர்கள் சொல்லித்தான் தெரியும்.
திருமணம் செய்துகொடுத்த பெண்களுக்குப் பிறந்த வீட்டு முறை செய்ய முடியாமல், வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு மணம் முடிக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், ரிட்டயர் ஆகும் இந்த வயதிலும் எந்த உறுத்தலும் இல்லாமல், அந்தப் பெண்ணுடனேயே இருக்கும் அவரை நினைத்தால், பற்றிக் கொண்டு வருகிறது. 'என்னதான் இருந்தாலும், தாலி கட்டிய கணவன்' என்று மனதின் ஓரத்தில் இத்தனை நாட்களாக இருந்த துளி பிணைப்பும், இப்போது தீர்ந்துவிட்டது. அவரைக் கடுமையாகத் தண்டிக்கும் தைரியமான முடிவுகள் எடுக்க என் மனம் துணிந்துவிட்டது.
என்ன செய்யட்டும் தோழிகளே?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 277ன் சுருக்கம்

''திருமணம் முடிப்பது, குழந்தை பெற்றுக் கொடுப்பது, வீட்டுத் தேவைக்கு பணம் கொடுப்பது... என பத்து வருட இல்லற வாழ்வில், இயந்திர கணவனாகவே நடந்து கொள்கிறார் என்னவர். இருவருமாக வெளியிடங்களுக்குப் போனதே இல்லை. எனக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில்கூட, அன்பாக விசாரிக்காத ஜடம் அவர். அதேசமயம், அத்தனை ஜாலியான மனிதராக இருக்கிறார் நண்பர்களிடம்.
வீட்டுப் பொறுப்பு, குழந்தையின் படிப்பு என எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்து, தான் நல்லவன் என்பதை ஊருக்குக் காண்பித்துக் கொண்டிருக்கும் அவரிடம், ஒரு மனைவியின் எதிர்பார்ப்பே... அன்பு ப்ளஸ் அந்யோன்யம்தான் என்பதை எப்படி புரிய வைப்பது..?''
வாசகிகளின் ரியாக்ஷன்...
கல்லும் கரையுமே தோழி!
சில ஆண்கள், மனைவியிடம் வெளிப்படையாக அன்பையோ... காதலையோ காட்டிக் கொள்ள மாட்டார்கள். 'இதென்ன சினிமாவா?' என்கிற எண்ணம் அவர்களுக்குள் இருக்கலாம். உங்களவர் வளர்ந்த விதம், அவர்களுடைய அப்பா, அம்மாவின் நடவடிக்கைகள் போன்ற பல சூழல்கள்தான் அவர் இப்படி நடப்பதற்கு காரணமாக இருக்கலாம். அதனால் அவரை ஒரேடியாக ஒதுக்காமல், அவர் இயந்திரத்தனமாக நடப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க பாருங்கள். முடியவில்லையா... சிம்பிள், அவர் சோபாவில் உட்கார்ந்திருந்தால்... நீங்களாக அருகில் சென்று உட்கார்ந்து அவருடன் கைகோத்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த ஜோக்குகளை அவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். தாம்பத்ய வாழ்க்கையில் அவர்தான் இறங்கி வரவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்? ஈகோவை விட்டு ஒழித்துவிட்டு, நீங்களாக அவரிடம் சென்று உங்கள் அன்பை காண்பியுங்கள்.
கரைப்பார் கரைத்தால், கல்லும் கரையுமே தோழி!''
- வரலஷ்மி முத்துசாமி, சென்னை-37
ஆடுற மாடு... பாடுற மாடு !
நண்பர்களிடம் இயல்பாகவும்... மனைவியிடம் கறாராகவும் நடந்து கொள்ளும் போக்கு, பல ஆண்களிடமும் இருக்கிறது. அத்தகையோரில் ஒருவர்தான் உன் கணவர். மனைவியிடம் பாசமாக நடந்து கொண்டால், தன் தலையில் ஏறி உட்கார்ந்து விடுவாள் என்று நினைக்கும் இவர் மாதிரி ஆட்களை எல்லாம், அவர்கள் வழியில்தான் போய் திருத்த வேண்டும். 'ஆடுற மாட்டை, ஆடித்தான் கறக்கணும்... பாடுற மாட்டை பாடித்தான் கறக்கணும்' என்பதை மனதில் கொண்டு, நீங்களும் அவர் பாணியில் இயந்திரத்தனமாக நடந்து கொள்ளுங்கள். இறுதியில் எல்லாம் சுபமாகும்!
- ரமா, கோயம்புத்தூர்