மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி 280

கணவனா...குழந்தையா..?ஒரு கண்ணீர் போராட்டம்

வாசகிகள் பக்கம்

##~##

'அம்மா!’ என்கிற அழைப்புக்கு ஏங்கும் பல பெண்களின் துயரம்தான் எனக்கும்!

திருமணம் ஆகும் வரை குழந்தைகள் பற்றிய ஆசை, பெரிதாக எனக்குள் இல்லை. திருமணத்துக்குப் பின் ஆறு மாதத்தில் கருத்தரித்தபோது, அந்தப் பரவசத்தை உணர்ந்தேன். விளம்பரங்களில் வருகின்ற அழகுக் குழந்தைகள் எல்லாம் என்னை வசீகரிக்க ஆரம்பித்தார்கள்.

இதற்கு நடுவே, மாமியாருடன் ஏற்பட்ட பிரச்னையில் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குக் கிளம்பினேன். பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது, என் வாழ்வின் சாபம் நிகழ்ந்தது. ஆம்... நான் சுமந்து கொண்டிருந்த கரு கலைந்தது. உலகமே சூன்யமானது.

ஒருவழியாக மீண்டு, அடுத்த குழந்தைக்காகக் காத்திருந்தேன். ஆனால், அது நடக்கவில்லை. கூடவே, ஒவ்வொரு மாத பீரியட்ஸின்போது தாங்க முடியாத வலி ஏற்பட, உடல் நொந்தது. அது இப்போதும் தொடர்கிறது. இந்த ஏழு வருடங்களாக பார்க்காத மருத்துவர்கள் இல்லை. 'அம்மிக் கல்லை அடி வயிற் றில் கட்டிக் கொண்டால் குழந்தை பிறக்கும்' என்று யாராவது பேச்சுக்கு சொன்னால்கூட, அதையும் செய்கிற மனநிலைக்குச் சென்றுவிட்டேன். ஊர் பேச்சுக்குப் பயந்து, நான் சுருங்கு வதைப் பார்த்த கணவர், வெளி மாநிலத்துக்கு வேலை மாற்றல் வாங்கிக்கொண்டு என்னையும் அழைத்து வந்துவிட்டார்.

என் டைரி 280

இத்தனை வருடங்களாக என்  உடல், மன வலிகளை அறிந்தவர், புரிந்தவர் என் கணவர். என்னிடம்தான் பிரச்னை என்று தெரிந்தும், கோபத்தில்கூட அதை குத்திக் காட்டியதில்லை. எனக்கு ஆறுதலையும்,   'குழந்தை பிறக்கும்’ என்கிற நம்பிக்கை யையும் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார். அவரின் கனி விலும் அன்பிலும்தான் என் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

தற்போது, 'எங்களுக்கு இனி குழந்தை பிறக்காது' என்பதை நான் தீவிரமாக நம்பத் துவங்கியிருக்கிறேன். அதனால், ஒரு குழந்தையை தத்தெடுக்க நினைக்கிறேன். அவருக்கோ... அது அறவே பிடிக்கவில்லை. 'கடைசிவரை இப்படியே இருந்துவிடுவோம்’ என்று அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படியே போனால் நிச்சயம் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும், அல்லது கழிவிரக்கமே என்னைக் கொன்றுவிடும். இது சம்பந்தமாக இந்த மூன்று மாதங்களாக எனக்கும் என் கணவருக்கும் சண்டை வலுக்கிறது. இதனால் என்னையே ஒரு குழந்தைபோல் பார்த்துக் கொண்ட கணவரின் அன்பை இழந்துவிடுவேனோ என்று அச்சமாக இருந்தாலும், 'குழந்தை வேண்டும்' என்கிற என் பித்துநிலையையும் என்னால் விடமுடியவில்லை.

என் தவிப்பை, நியாயத்தை, நிதர்சனத்தை என் கணவருக்கு எப்படிப் புரியவைக்க?! விடை சொல்லுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 279ன் சுருக்கம்

என் டைரி 280

''ஒரே வீட்டில் அண்ணன், தம்பிக்கு என் அக்காக்களை திருமணம் செய்து வைத்தார்கள் பெற்றோர். கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையாக இருப்பார்கள் என்று நாங்கள் நினைக்க, பொறாமையின் உச்சத்தில் தனிக்குடித்தனம் போனதோடு, இருவரும் பேசிக் கொள்வதே இல்லை. இந்நிலையில் அந்த வீட்டின் கடைசி பையனுக்கு என்னைத் திருமணம் செய்து வைக்க இரண்டு வீட்டு பெரியவர்களும் விரும்புகிறார்கள். ஏற்கெனவே சின்னாபின்னமாகி இருக்கும் குடும்பத்தில், நானும் நுழைந்து சண்டைக் கோழியாக விரும்பவில்லை. 'இந்த வரன் வேண்டாம்' என்று வெளிப்படையாக சொல்லிவிட்ட பின்னரும்... கட்டாய திருமணம் செய்து வைக்க முயல்கிறார்கள் என் பெற்றோர். என்ன செய்யட்டும் நான்..?!''

வாசகிகள் ரியாக்ஷன்...

ஐந்து விரல்களும் ஒன்றா?

ஐந்து விரல்களும் ஒன்றாக இருக்கின்றனவா தோழி? உன் அக்காக்களைப் பற்றி கவலைப்படாதே. உனக்கு அந்தப் பையனை பிடித்திருக்கிறதா? அவருடன் இணைந்தால், உன் வாழ்க்கை மனதளவிலும், பொருளாதார ரீதியாகவும் நன்றாக இருக்குமா என்று யோசித்துப் பார். சரியாக இருக்கும் என்று தோன்றினால்... எந்த சஞ்சலங்களும் இல்லாமல், உடனடியாக திருமணத்துக்கு சம்மதம் சொல். திருமணம் முடிந்த பிறகு, நீ விரும்பினால்... உன் கணவரின் உதவியோடு இரு அக்காக்களையும் இணைக்கும் வேலையை செய்யலாமே? என்றாலும், இப்போதைக்கு உன் திருமணமே முக்கியம் என்பதை நினைவில் கொண்டு செயல்படு. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!''

- பிரபா டாக்கர், ஹைதராபாத்

அது முடிந்துபோன கதை!

மனதில் முதன் முதலில் உதிக்கிற எண்ணங்கள், எப்போதும் சரியாகவே இருக்கும் என்பது என் கருத்து. 'இந்த திருமணம் வேண்டாம்' என்று எப்போது உன் மனதில் சஞ்சலம் வந்துவிட்டதோ... அப்போதே அது முடிந்துபோன கதை. பெற்றோர்களிடம் சண்டை போட்டு இந்த விஷயத்தைப் புரிய வைப்பதைவிட, அமைதியாகவே பேசி, புரிந்து கொள்ளச் செய். 'நாட்டில் ஒரே ஒரு மாப்பிள்ளை மட்டும் இல்லை’ என்பதையும் புரிய வை. பெரியவர்கள் அத்தனை சீக்கிரம் இறங்கி வர மாட்டார்கள். ஆனால், 'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்' என்பதுபோல, உன் பேச்சால் அவர்கள் மனதை மாற்றி, வேறு சம்பந்தம் தேடச் சொல். எப்போதுமே நம் வாழ்க்கை நம் கையில் என்பதை மறந்துவிடாதே!

- பாரதி, மதுரை