தடுமாறினேன்... தவறினேன்...தவிக்கிறேன் !
வாசகிகள் பக்கம்
##~## |
'நல்ல சம்பந்தம்... ஃபாரின் மாப்பிள்ளை... கண்ணை மூடிட்டு நம்ம பொண்ணைக் கட்டிக் கொடுக்கலாம்!’ என்று என்னை அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். ஆனால், திருமணத்துக்குப் பிறகு, அவர் வெளிநாடு செல்லவில்லை. வெளிநாட்டில் சம்பாதித்து வங்கியில் சேமித்த பணத்திலிருந்து கிடைக்கும் வட்டியில்தான் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது.
ஏழு வருடங்கள் உருண்டுவிட்ட நிலையில், இரண்டு குழந்தைகளும் வந்துவிட்டனர். ஆனால், இருக்கும் தொகையை வைத்து, இங்கு ஒரு தொழிலைத் தொடங்கக்கூட தகுதி இல்லாதவராக இருக்கிறார். தன்னிச்சையாக ஒரு முடிவை எடுக்கவோ, தன்னம்பிக்கையுடன் ஒரு செயலில் இறங்கவோ அவரால் முடியவில்லை. இன்னொரு புறம், என்னுடைய இயல்பான தாம்பத்ய விருப்பங் களையும் நிவர்த்தி செய்யும் ஆர்வமோ... உடல் தகுதியோ அவரிடம் இல்லாதிருப்பதை எண்ணி, பல இரவுகளை கண்ணீரோடு கழிக்கிறேன்.

இந்நிலையில், அன்றாட குடும்பச் செலவுக்காக வாரத்தில் இரண்டு நாட்கள் பேங்க் சென்று திரும்பும் சந்தர்ப்பங்களில் அங்கு வந்து போகிற ஒருவரைச் சந்தித்தேன். திருமணமாகாத அந்த நபர், என்னுடைய வேதனைகளுக்கு ஆறுதல் சொல்பவராக வந்து, ஒரு கட்டத்தில் தனியே சந்திக்கும் அளவுக்கு நெருங்கிவிட்டார். சரியா, தவறா என ஆராய்ந்து பார்க்கக்கூடிய மனநிலை அப்போது இல்லாததால், நானும் உடன்பட்டு விட்டேன். இந்நிலையில், 'குடும்ப நெருக்கடி’ என்று சொல்லி, வேறொரு பெண்ணை அவர் திருமணம் செய்துகொள்ள, நானும் அவருடைய நட்பை முற்றிலுமாக முடித்துக் கொண்டேன்.
ஆனால், எங்களுக்குள் இருந்த நட்பை ஆரம்பம் முதலே அறிந்திருந்த அந்த நண்பரின் உறவுக்காரனின் மிரட்டலால்... தற்போது தவித்துக்கிடக்கிறேன். 'அவனுக்குத்தான் திருமணம் முடிந்துவிட்டதே!’ என்று ஆரம்பித்து, 'என் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தால்... உங்களுடைய கதை அத்தனையையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிடுவேன்!’ என்று மிரட்டி, போனில் தினமும் என்னை டார்ச்சர் செய்கிறான்.
தோழிகள், உறவினர், கணவர் என்று யாரிடமும் பகிர முடியாத இப்பிரச்னை, என்னை வதைக்கிறது. காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ ஆலோசிக்கலாம் என்றால், 'விஷயம் வெளியில் தெரிந்துவிடுமே' என்று உயிர் உறைகிறது. அவனோ, 'வெளியில் யாரிடமாவது சொன்னால்... நீதான் என்னை தொந்தரவு செய்வதாக கதையை மாற்றி விடுவேன்!’ என்று கூடுதலாக மிரட்டுகிறான்.
இந்தச் சிக்கலில் இருந்து மீள என்ன வழி..?!
- பெயர் வேண்டாமே... ப்ளீஸ்!
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 281ன் சுருக்கம்
''கணவரை இழந்ததோடு... தள்ளாத வயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் பெண்மணி நான். ஆசிரியையாக இருந்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தோம். ஆனால், வேறு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த மருமகன், அதைத் தட்டி கேட்ட என் மகளை கொன்றுவிட்டான். தன்னுடைய பணபலத்தால் வெளியே வந்துவிட்டவன், சகல செல்வாக்கோடு திரிகிறான். ஆள், அதிகாரம் என இருக்கும் அவனை எதிர்க்க முடியாது என்று ஒதுங்கி கொண்டார்கள் என் மகன்கள். அவனைத் தண்டிக்க தனி மனுஷியாக போராடிக் கொண்டிருக்கிறேன். நீதி கிடைக்குமா?''
வாசகிகள் ரியாக்ஷன்...
உறுதிக்கு சல்யூட்!
72 வயதிலும் மகளுக்கு நியாயம் கிடைக்கப் போராடும் உங்கள் உறுதி கண்டு வியந்து போகிறேன். ஆதரவற்ற தனி மனுஷி கண்ணகிதான், பாண்டிய மன்னனையே எதிர்த்து போராடினாள். இந்த ஓர் உதாரணம் போதாதா உங்கள் போராட்டம் தொடர..! இலவச சட்ட உதவி மையத்தை நாடி, தேவையான சட்ட உதவிகளையும், ஆலோசனைகளையும் பெறுங்கள். சூது கவ்வினாலும் தர்மம் ஒரு நாள் வெளிப்படும் என்பதை நம்புங்கள்!
- அ.யாழினி பர்வதம், சென்னை-78
தெய்வத்திடம் ஒப்படையுங்கள்!
உங்கள் மகன்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது..! இந்தக் காலத்தில் சட்டம், காவல்துறை என்று அனைத்தும் சாமானியர்களுக்கு துணைவருவதில்லையே... சண்டாளர்களுக்குத்தானே துணை நிற்கின்றன! இந்நிலையில், அவனை எதிர்த்து போராடுவது என்பது... எந்தவிதத்தில் நமக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை யோசியுங்கள். அதிலும் தள்ளாத வயதில் உங்களையும் நீங்கள் வருத்திக் கொள்ளத்தான் வேண்டுமா? இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, ஓய்வாக இருங்கள். நிச்சயமாக தெய்வம் அந்தக் கொடியவனை தண்டிக்கும் என்கிற நம்பிக்கையோடு இருங்கள்!
- ராஜி குருசாமி, ஆதம்பாக்கம்
'நிஜ குற்றவாளி தப்ப முடியாது!’

இது தொடர்பாக திருச்சியிலிருக்கும் 'பேரன்ட்ஸ் டிரஸ்ட்' எனும் அமைப்பின் மேலாண் இயக்குநரும் வழக்கறிஞருமான தி.ஜெயந்திராணியிடம் பேசிய போது, ''மகள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு போராடி வருகிறார் இந்த மூதாட்டி. நீதிமன்றத்தைப் பொறுத்தவரை சாட்சியங்கள் முக்கியமானது. இந்த வழக்கில் போதுமான சாட்சியங்கள் இல்லாததால், குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அதன் அடிப்படையில்தான் கீழ்கோர்ட்டில் அவருடைய மருமகன் விடுதலை செய்யப்பட்டிருக் கிறார் என்றே தெரிகிறது. எனவே, மேற்கொண்டு ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டு, இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அதிலும் சரியான தீர்ப்பு கிடைக்காவிட்டால்... உச்ச நீதிமன்றம் வரை போகலாம். கீழ்கோர்ட்டில் குற்றவாளி இல்லை என்று சொன்னதாலேயே ஒரு நிஜ குற்றவாளி தப்பித்துவிட முடியாது. எனவே, நம்பிக்கையோடு முறையீடு செய்யலாம். அவருக்கு உதவி செய்ய நான் காத்திருக்கிறேன்'' என்று சொன்னார்.
வழக்கறிஞரை தொடர்புகொள்ளும்படி சம்பந்தப்பட்ட முதிய தோழிக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.