மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி 283

காதல் இல்லை...கல்யாண தொல்லை !

 வாசகிகள் பக்கம்

##~##

சில நேரங்களில் திரைப்படத்தை மிஞ்சும் திருப்பங்கள் வாழ்வில் ஏற்படும். அப்படியரு திருப்பத்தால் நிலை குலைந்து போயிருக்கிறான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் என் அண்ணன்! அதை நினைத்தே வேதனையில் விம்மிக் கொண்டிருக்கும் அவனைப் பார்க்கும்போதெல்லாம்... வேதனை பொங்குகிறது!

இன்ஜீனியரிங் படிப்பு, நல்ல நண்பர்கள், அன்பான பெற்றோர் என சென்று கொண்டிருந்தன அவனுடைய நாட்கள். ஆண், பெண் என பாரபட்சமில்லாமல் அவனுக்கு நட்புகள் அதிகம். அப்படித்தான் கல்லூரிக்குச் செல்லும்போது பஸ்ஸில் பழக்கமானாள் ஒரு பெண். ஒரு நாள், 'நான் என் மாமாவ லவ் பண்றேன். ஆனா, வீட்டுல ஒப்புக்க மாட்டேங்கறாங்க. ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க நீதான் ஹெல்ப் பண்ணணும்’ என்று அவள் கேட்க... இவனும் தலையாட்டிவிட்டான்.

நண்பர்களுடன் சேர்ந்து வியூகங்கள் வகுத்து, அவளுடைய மாமாவிடம் பேசினார்கள். உள்ளூரில் பிரச்னை ஏற்படும் என்பதால், வெளியூர் கோயிலொன்றில் திருமணத்துக்கு நாள் குறித்தனர். அவளும் வீட்டைவிட்டு வெளியேறி வந்தாள். ஆனால், கோயிலில் மாலை வரைக் காத்திருந்தும் அவளுடைய மாமா வரவில்லை. மொபைலோ ஸ்விட்ச்டு ஆஃப். என்ன செய்வது என்றே புரியவில்லை. அவளோ, 'இனி என்னால வீட்டுக்குத் திரும்பப் போக முடியாது’ என்று சொல்லிவிட... என் அண்ணனுக்கு தலைவலி ஆரம்பமானது. அன்று இரவு லேடீஸ் ஹாஸ்டல் ஒன்றில் தங்க வைத்தவன்... மறுநாள் காலை நண்பர்களை அனுப்பி விசாரிக்கச் சொன்னான்.

என் டைரி 283

முதல் நாள், பக்கத்து வீட்டுக்கும், அவளுடைய மாமா வீட்டுக்கும் ஏற்பட்ட தகராறு... ரத்தம் பார்க்கும் அளவுக்குப் பெரிதாகி, அவளுடைய மாமா மற்றும் அண்ணன் என குடும்பத்தாரை போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்துவிட்டது. 'இன்று வெள்ளிக்கிழமை என்பதால், ஜாமீன் கிடைத்து வெளியில் வர திங்கள்கிழமை வரை ஆகிவிடும்' என்று போலீஸார் கூறியுள்ளனர். தோழியோ, 'பரவாயில்ல... திங்கட்கிழமை கல்யாணம் செய்துக்கலாம். அதுவரைக்கும் நான் வீட்டுக்குப் போக மாட்டேன்’ என்று ஹாஸ்டலிலேயே தங்கினாள்.

இதற்கிடையில், அவளைக் காணாமல் தேடிய அவளுடைய வீட்டாருக்கு... என் அண்ணனுடன் அவள் சென்ற விஷயம் தெரியவர, 'அவளை கூட்டிட்டு ஓடினது இவன்தான்’ என்று ஒரே கலவரமாகிவிட்டது. 'இனி, அவ எங்களுக்கு வேணாம்...’ என்று அந்தக் குடும்பத்தார் கை கழுவிவிட்டனர். அதுகூட அதிர்ச்சியில்லை.. 'உன்னோட ஓடிப்போயிட்டதா ஊரே பேசின பொண்ணு, இனி எனக்கும் வேண்டாம்’ என்று அவளுடைய மாமாவும் அதிர்ச்சி கொடுக்க... உடைந்து போய்விட்டான் என் அண்ணன். இந்நிலையில், அடுத்த இடியை இறக்கினாள் அந்தத் தோழி. 'இந்த வார்த்தைகள் சொன்ன மாமா என் மனசுல செத்துப் போயிட்டார். நீயே என்னை கல்யாணம் பண்ணிக்கோ’ என்று கூலாக சொல்லிவிட்டாள்.

பஞ்சாயத்து என் அப்பா, அம்மாவிடம் வந்தது. 'ஊர் வாயை மூட முடியாது. பேசாம நீ அவளையே கல்யாணம் பண்ணிக்கோ’ என்றார்கள். ஆனால், இதில் துளியும் விருப்பமில்லாத அண்ணன், தான் ஒரு மாய வலையில் சிக்கிக் கொண்டவனாகவே உணர்ந்தான். ஆனால், அவனுக்கு அவகாசம் ஏதும் தராமலேயே... திருமணத்தை முடித்துவிட்டனர்.

இருவருமே கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதால், கொஞ்சம் சமாதானமாகி, மகளை தங்கள் வீட்டில் வைத்துக் கொள்ள சம்மதித்துள்ளனர் அவளுடைய பெற்றோர். 'அவள நீ கல்யாணம் பண்ணின நேரம், பிசினஸ்ல நமக்கு பெரிய லாபம். அந்தப் பொண்ணு அதிர்ஷ்ட தேவை!’ என்று அண்ணனிடம் புகழ்பாடும் என் பெற்றோர்... படிப்பு முடிந்தபின் அவளை எங்கள் வீட்டுக்கு அழைத்துவர ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆனால், சூழ்நிலைகளால் மனைவியான அவளை அண்ணனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மேலும், சாதிக்க வேண்டிய வயதில் தன் வாழ்க்கையைப் பாழாக்கி, திருமணம் குறித்த பல கனவுகளுடன் இருந்த தன் விருப்பங்களுக்கு சமாதி கட்டியவள் என்று அவள் மீது வெறுப்பும் கோபமும்தான் அவனுக்கு எந்நேரமும் பெருகுகிறது. 'அவளை விவாகரத்து செய்யப் போகிறேன்' என்றே சொல்லிக் கொண்டிருக்கிறான்.

இவனுடய பக்கமிருக்கும் நியாயங்களை நினைக்கும்போது... 'விவகாரத்து சரி' என்றே சொல்லத் தோன்றுகிறது. ஆனால், ஏதோ ஒரு வேகத்தில் வீட்டை விட்டு ஓடி வந்து, அடுத்தடுத்து வழி தெரியாமல் முடிவுகளை எடுத்துவிட்ட அந்தப் பெண்ணை நினைக்கும்போது பரிதாபமாகவும் இருக்கிறது! ஏதாவது ஒரு வழி காட்டுங்களேன் தோழிகளே?!

- பெயர் வேண்டாமே... ப்ளீஸ்!

 ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி 283

100

 சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 282ன் சுருக்கம்

என் டைரி 283

''வெளிநாட்டில் சம்பாதித்ததை, இந்தியாவில் வைத்து வீணாக்கிக் கொண்டிருப்பவர் என் கணவர். சொந்தமாக முடிவெடுக்க தெரியாத அவரால், தாம்பத்ய வாழ்க்கையிலும் திருப்தியற்றே இருக்கிறேன். இந்நிலையில், என் வேதனைகளுக்கு வடிகாலாக விளங்கியவரின் வலையில் சிக்கி.... என்னை இழந்தேன். ஆனால், குடும்ப நெருக்கடி காரணமாக அவர் விலகிவிட, நானும் ஒதுங்கி விட்டேன். இந்நிலையில் எங்கள் நட்பை அறிந்து வைத்திருக்கும் அந்த நபரின் உறவுக்காரன், 'உன் கதையை அம்பலப்படுத்தப் போகிறேன்' என்றபடி இப்போது டார்ச்சர் செய்ய ஆரம்பித்துவிட்டான். அவனிடம் இருந்து மீள்வது எப்படி?''

வாசகிகள் ரியாக்ஷன்...

போலீஸிடம் செல்!

''இப்போதுதான் நீ துணிவுடன் செயல்பட வேண்டும். போனில் உன்னை டார்ச்சர் செய்யும் அவன், மறுபடியும் அப்படி பேசும்போது, அதை ரெக்கார்ட் செய்துகொள். இப்படி இரண்டு, மூன்று தடவை ரெக்கார்ட் செய்து கொண்டு, நம்பிக்கையான தோழி ஒருத்தியின் துணையோடு... துணிச்சலோடு அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு சென்று புகாராகக் கொடு. அதன் பிறகு பார், அவனுடைய பிளாக்மெயில் ஆட்டம் அடியோடு க்ளோஸ் ஆகிவிடும். உடனே காரியத்தில் இறங்கு!''

- எஸ்.உமாதேவி, திருவண்ணாமலை

நடந்ததை மற!

''தவறு செய்யும்போது எவருமே விழிப்பதில்லை. உன் நிலையும் அப்படித்தான் இருந்திருக்கிறது. நடந்ததை மறக்க முயற்சி செய். அதற்கு முன் காவல்துறையில் புகார் செய். உனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதே. அவர்களின் எதிர்காலம் உன்னுடைய நடத்தையை பின்பற்றியே அமையும் என்பதையும் மறக்காதே. புது வாழ்வை துவங்கு... உன் பிள்ளைகளுக்காக. ஏதாவது வேலைக்கு செல்... அதுவே உனக்கு மன நிம்மதியைக் கொடுப்பதோடு... குடும்பத்தை தூக்கி நிறுத்தவும் உதவி செய்யும்!''

- சுமிதா, பெங்களூரு