மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 284

என் டைரி - 284

 வாசகிகள் பக்கம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 284

100

##~##

உறவுகளின் பிரியம் அறுபடுவதால் ஏற்படும் துன்பம் போன்று, கொடுந்துன்பம் வேறு ஏதுமில்லை. அதுதான் நிகழ்ந்திருக்கிறது இப்போது எனக்கு! திருமணமான சில ஆண்டுகள் இனிமையாகக் கழிந்தன. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில், கணவருக்கு மனநலக் கோளாறு ஏற்பட, அது எங்களுக்குள் இருந்த அந்யோன்யத்தை உலுக்கிப் போட்டு விட்டது. பல ஆண்டுகள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு, உடல் பிரச்னை எதுவும் இல்லை. என்றாலும், பொம்மையாகத்தான் இருக்கிறார் கணவர். காலையில் எழுவார், குளிப்பார், சாப்பிடுவார், அவரது வேலைகளைச் செய்வார்... அவ்வளவுதான். என்னிடமோ... மகளிடமோ அன்பு, அக்கறை, கோபம், உரிமை என்று எந்தப் பிணைப்பும் இல்லை. தாம்பத்ய வாழ்க்கை எப்போதோ மரித்துவிட்டது.

'இனி, மகள்தான் நம் உலகம்' என்று, கணவருக்கான அன்பு அனைத்தையும் மகளுக்கே கொட்டி வளர்த்தேன். என் வாழ்க்கையின் பயன் அவள்தான் என இருந்தேன். அவள் சந்தோஷத்தில் நான் மகிழ்ந்தேன். கல்லூரி செல்லும் வரைகூட, சாப்பாட்டை ஊட்டிவிட்டால்தான் மனம் நிறையும் எனக்கு.

இத்தகைய சூழலில்... ஓர் ஆணிடம் காதல் வயப்பட்டு வந்து அவள் நிற்க... எனக்கோ அதிர்ச்சி. அதிலும், அந்தப் பையனின் குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பது இன்னும் அதிர்ச்சி. மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற அக்கறையுள்ள தாயாக, 'அவன் வேண்டாம்' என்று பக்குவமாகப் பேசினேன். 'உன்னைவிட அவன்தான் முக்கியம்’ என்று முகத்திலடித்தாற்போல சொல்லிவிட்டு, அவனுடன் சென்றுவிட்டாள்.

என் டைரி - 284

துயரக்கடலில் தத்தளிக்கும் நிலையிலும், 'அவளுக்கு வீடுகூட பெருக்கத் தெரியாதே, பாத்திரமெல்லாம் கழுவியதே இல்லையே, சாப்பாடுகூட பார்த்துப் பார்த்துக் கொடுக்க வேண்டுமே, அவள் எப்படி வசதி குறைவான வீட்டில் வாழ்க்கையை நகர்த்துவாள்..?’ என்று அவளைப் பற்றிய எண்ணங்களே மனதை ஆக்கிரமித்திருக்கின்றன. அவளோ, என்னைப் பற்றி துளி நினைப்பு கூட இல்லாதவளாகிவிட்டாள்.  

எனக்குக் கிடைக்க வேண்டிய கணவரின் அன்பு, இல்லையென்றாகிவிட்டது. நான் அன்பு செலுத்திய மகளும் இல்லை என்றாகிவிட்டாள். 'வாழ்க்கையே அர்த்தமற்றதாகிவிட்டது... இனி, நமக்கு என்ன இருக்கிறது இந்த வாழ்க்கையில்?' என்கிற கேள்வியே என்னைத் துரத்துகிறது!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி - 284

என் டைரி 283-ன் சுருக்கம்

''பஸ்ஸில் பழக்கமான ஒரு பெண்ணை, அவளுடைய காதலனுடன் சேர்த்து வைக்க திட்டம் தீட்டிய என் அண்ணன், கல்யாணத்துக்கு நாள் குறித்தான். கடைசி நேரத்தில் அவளுடைய காதலன் வராமல் போகவே, அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். என் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் முடிந்துவிட்டது. 'அந்தப் பெண் வந்த நேரம், நம் வீட்டில் சுபிட்சம் பொங்குகிறது' என்று புகழ்கிறார்கள் என் பெற்றோர். எதிர்காலம் பற்றிய ஏகப்பட்ட கனவில் இருக்கும் என் அண்ணனோ... 'இது பொருந்தா கல்யாணம்... காலம் முழுவதும் கலங்க நான் தயாரில்லை' என்றபடி அப்பெண்ணை விவாகரத்து செய்ய நினைக்கிறான். இவனுக்காக பரிந்து பேசுவதா... அந்தப் பெண்ணுக்காக பரிதாபப்படுவதா...?

வழிகாட்டுங்களேன் தோழிகளே!''

வாசகிகள் ரியாக்ஷன்...

முதலில் அதிர்ச்சி விலகட்டும்!

நடந்தது, நடந்துவிட்டது. என்றாலும்... இந்த அதிர்ச்சியிலிருந்து முதலில் விடுபட, உன் அண்ணனுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கிக் கொடுங்கள். அதையடுத்து, வாழ்க்கை என்றால் என்ன என்பதை மெள்ள உணர ஆரம்பிப்பான். இப்போதே அந்தப் பெண்ணிடம் பாசம், இவள்தான் வாழ்க்கைத் துணை என்கிற எண்ணமெல்லாம் அவனுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நடந்ததை மறப்பதற்கு போதுமான நேரத்தை எடுத்துக் கொள்ளட்டும். நிச்சயம் மனம் மாறுவான். அந்தப் பெண்ணும் உங்கள் அண்ணனுக்கு ஒரு நல்ல துணையாக இருப்பாள். 'விவாகரத்து' என்கிற முடிவை தற்காலிகமாக மறந்து, வேலை மற்றும் பொருளாதாரம் தொடர்பான எதிர்கால கனவுகளை நனவாக்கும் முயற்சியில் அவனை ஈடுபடச் சொல்லுங்கள். அதன்பிறகு, அனைத்துமே சுபமாகும் என்று நம்பிக்கை வையுங்கள்!

- ராஜி குருசாமி, சென்னை-88

தாமதம் ஏன்?

ஆழமான காதல் என்று சொல்லிக் கொண்டு மணம் முடிக்கும் ஜோடிகளே... சர்வ சாதாரணமாக பிரிந்துவிடும் காலம் இது. இந்நிலையில், சூழ்நிலை காரணமாக நடந்த கட்டாய திருமணம் எந்த வகையில் நிம்மதியைத் தரும் என்பது கேள்விக்குறிதான்! இப்போதே, 'நம் கனவுகளை முறிக்க வந்தவள்' என்கிற எண்ணம் உன் அண்ணனுக்குத் தலைதூக்கிவிட்டது. இதே எண்ணத்துடன் காலத்தை ஓட்ட ஆரம்பித்தால்... வாழ்க்கையில் வெறுப்புதான் மேலிடும்! இது அந்தப் பெண்ணுடைய வாழ்க்கையையும் சீரழித்துவிடும். எனவே, உன் அண்ணனின் முடிவே சரியானது!

- எஸ்.சத்யாமுத்துஆனந்த், வேலூர்

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

தெரிந்தோ தெரியாமலோ... உன் அண்ணனும் நடந்த தவறுக்கு உடந்தைதான். எனவே... 'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்கிற வாசகத்தை உங்கள் அண்ணன் மனதில் ஏற்றுங்கள். 'வீட்டில் பார்த்து வைத்தாலும், அவளும் எங்கிருந்தோ வரப்போகும் ஒரு பெண்தானே' என்பதை புரிய வையுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்!

- பி.எஸ்.கேத்தரின், சேலம்