மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 285

மகளே... மன்னிக்க மாட்டாயா ? !வாசகிகள் பக்கம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 285

100

##~##

ஒரு தாய்க்கு உரிய அக்கறையில் இருந்து தவறியதால், இன்று மகளின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள அம்மா நான்!

சில வருடங்களுக்கு முன், நாங்கள் காரைக்குடி அருகே ஒரு குக்கிராமத்தில் இருந்தோம். நான்கு பிள்ளைகள். என் கணவர், தினக்கூலி. கஷ்ட ஜீவனம்தான். அந்நேரத்தில், ''சென்னையில் ஒரு வீட்டில் வேலைக்கு ஆள் தேவை, உன் மூத்த பெண்ணை அனுப்பி வைக்கிறாயா..?'' என்று என்னிடம் கேட்டார் உறவினர் ஒருவர். ''வயசுப் பொண்ணை அனுப்ப வேண்டாம்...'' என்றார் என் கணவர். ''போகவே மாட்டேன்'' என்றாள் மகளும். இருந்தாலும், ''அவள் அங்கு சென்று வேலை பார்த்தால், நல்ல சாப்பாடு, துணிமணி என்று அவளுக்குக் கிடைப்பதுடன், சம்பளப் பணம் மற்ற குழந்தைகளை வளர்க்க உதவுமே'’ என்று, நான் கணவரையும் மகளையும் சமாதானப்படுத்தி, ஒரு கட்டத்தில்... கட்டாயப்படுத்தி அவளை அனுப்பி வைத்தேன்.

என் டைரி - 285

வீட்டுக்காரர்கள் மாதாமாதம் சம்பளத்தை எனக்கு அனுப்பினர். அது எங்கள் குடும்பக் கஷ்டத்தை பெருமளவு போக்கியது. ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு, பணம் வரவில்லை. பதிலாக, அந்த வீட்டுக்காரர்கள் போன் செய்தார்கள். ''உங்க மக நேத்து நைட் வீட்டை விட்டு எங்கயோ போயிட்டா. அவளைக் காணோம்னு போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுக்கப் போறோம். உங்க வீட்டுக்கு வந்தா, எங்களுக்குத் தெரியப்படுத்துங்க. அப்படியே வந்துட்டாலும் மறுபடியும் எங்க வீட்டுக்கு அனுப்ப வேண்டாம். வயசுப் பொண்ணை கண்காணிக்கறது எங்க வேலை இல்ல'' என்றனர்.

குடும்பமே பதறிவிட்டது. அழுதோம்... தவித்தோம்.... தேடினோம்... அவமானப்பட்டோம். கணவரும் குழந்தைகளும் என்னைத் திட்டினார்கள். 'காணாமல் போனவள்... வருவாள் வருவாள்' எனக் காத்திருந்து காலங்கள் ஓடியதுதான் மிச்சம். சென்ற ஆண்டு என் கணவர் இறந்துவிட்டார். மற்ற குழந்தைகள் ஓரளவு வளர்ந்துவிட்டனர். இந்நிலையில் சின்ன மகளின் படிப்பு சம்பந்தமாக சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தபோது, அந்தச் சம்பவம் நடந்தது.

என் மூத்த மகளை தி.நகரில் பார்த்தேன். அருகில் சென்று கரம் பற்றி, ''போனதெல்லாம் போகட்டும். இப்போவாவது கிடைச்சியே. வாம்மா எங்ககூட'' என்று அழைத்தேன். அவளோ, ''ச்சீ... கைய விடு. வேண்டாம் வேண்டாம்னு சொல்லியும் என்னை வலுக்கட்டாயமா அனுப்பி வெச்சியே... அன்னிக்கே நான் உன்னை தலைமுழுகிட்டேன். இப்போ எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நானே அமைச்சுக்கிட்டேன். நீ உன் வேலையைப் பார்த்துட்டுப் போயிடு. இதுக்கு மேலயும் என்கூட ஏதாச்சும் பேசினா, கழுத்தை நெரிச்சு உன்னைக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனாலும் போவேன்... உன்கூட வரமாட்டேன்!'' என்று கத்த, நான் நிலைகுலைந்து நிற்க, கூட்டத்தில் மறைந்துவிட்டாள்.

தவறே செய்திருந்தாலும், இந்த தாய்க்கு மன்னிப்பில்லையா? என் மகள் எனக்கு மீண்டும் கிடைக்கவே மாட்டாளா..?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 284-ன் சுருக்கம்

என் டைரி - 285

''திருமணம், ஒரேயரு பெண் குழந்தை என்று இருந்த என் வாழ்க்கை, கணவருக்கு மனநலம் சரியில்லாமல் போனதால் புயலடிக்க ஆரம்பித்துவிட்டது. பாசம், பரிவு, தாம்பத்யம் எல்லாம் அற்றுப்போய், மகளுக்காக மட்டுமே வாழத் துவங்கினேன். கல்லூரி வயது வரை, நான் ஊட்டிவிட்டால்தான் சாப்பாடே இறங்கும் என்கிற அளவுக்கு செல்லமாக வளர்ந்தவள்... 'காதலன்தான் முக்கியம்' என நொடியில் என்னை உதறிவிட்டுப் போய்விட்டாள். வாய்த்திருப்பவன் பரம ஏழை என்பதால், 'மகள், கஷ்டப்படுவாளோ...' என்றே தினமும் தவிக்கிறேன். 'கணவர், மகள் என யாருடைய அன்பும் இல்லை என்றாகிவிட்ட சூழலில்... ஏன் இந்த வாழ்க்கை?' என்று குமுறும் என் மனதுக்கு என்ன பதில் சொல்ல தோழிகளே!''

வாசகிகள் ரியாக்ஷன்...

அன்பு அல்ல... ஆளுமை!

கணவரின் அன்பு உங்களுக்குக் கிடைக்காத சூழலில், அதற்கு வடிகாலாக கூடுதல் பாசத்தைக் கொட்டி மகளை வளர்த்தெடுத்திருக்கிறீர்கள். இதன் பெயர் அன்பல்ல... ஆளுமை. அதனால்தான் சுதந்திரமான ஓர் அன்பு கிடைத்ததும் பறந்துவிட்டாள். அது அவளுடைய வாழ்க்கை, அவளுடைய முடிவு, அவளுடைய உரிமை என்பதை முதலில் நீங்கள் உணருங்கள்! அவளை மனதால் வாழ்த்தியபடியே விலகியிருப்பதுதான் நல்லது. உங்களுடைய மன அமைதிக்காக அடிக்கடி அனாதை இல்லங்களுக்குச் செல்வது, தையற்கலை, எம்ப்ராய்டரி போன்றவற்றில் ஈடுபடுவது என கவனத்தைத் திருப்புங்கள். என்றாவது மகள் நாடி வந்தால்... முன்புபோல பாசத்தைக் கொட்டி, மீண்டும் வருத்தத்தில் சிக்கிவிடாமல் இருக்கும் வகையில்... தள்ளியிருந்தபடியே முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். காலம் உங்களை கலங்காமல் வாழ வைக்கும்!

- விஜயலட்சுமி, மதுரை

உங்களுக்காக ஒரு வாழ்க்கை!

கணவருக்காக, மகளுக்காக என்று இதுகாலம் வரை வாழந்த நீங்கள்... இனி, உங்களுக்காக வாழுங்கள். உங்களுக்கு எவையெல்லாம் சந்தோஷம் தருமோ... அவற்றையெல்லாம் தாராளமாகச் செய்யுங்கள். மற்றவர்கள் பற்றிய கவலையை விடுங்கள். அதேசமயம், 'கஷ்டம்' என்று மகள் வந்து நின்றால், ஈகோ பார்க்காமல் அவளுக்கு உதவுங்கள். உங்கள் வாழ்க்கை அமைதி பெற வாழ்த்துக்கள்!

- உஷா, சென்னை-4

தாயாகும்போது தானாகப் புரியும்!

ஒவ்வொரு பெண்ணும், தான் தாயாகும் நேரத்தில்தான், தன் தாயின் அருமை, பெருமைகளை பற்றி நிஜமாகவே உணர்கிறாள். என்னதான் காதலனுக்காக உங்களை உதறினாலும், நிச்சயம் உங்கள் அருமை அவளுக்குப் புரியும் நேரமும் வரும். மற்றபடி, இன்றைய தலைமுறையினர்... மிகச் சாதுர்யமானவர்கள் என்பதால், கஷ்டங்கள் சூழும்போது கரையேறுவது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். வீண் கவலைகளை விட்டுத் தள்ளுங்கள்!

- பிரியா, கோவை