காதலிக்கும் மகள்...கலங்கடிக்கும் கணவன் !
வாசகிகள் பக்கம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
##~## |
கணவன் - மனைவிக்குள் ஒளிவுமறைவு இருக்கக் கூடாது என்று நினைப்பவள், அதன்படி நடப்பவள் நான். அதுவே, இன்று எனக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்திவிட்டது!
கணவர், தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்ப்பவர். ஒரு மகள், மகன் என அழகான குடும்பம். வீட்டுக்குள் பூனை வந்து பாலை குடித்தது தொடங்கி... என் அம்மா என்னிடம் போனில் பேசியது வரை அத்தனையையும் அவரிடம் ஒப்பிப்பதை, திருமணமான நாளிலிருந்தே வழக்கமாக வைத்திருக்கிறேன். அவருக்கு உண்மையாக இருக்கிறோம் என்கிற நிம்மதி எனக்கு.
பிள்ளைகளுடன் தோழியாகத்தான் பழகுவேன். எனவே, நண்பர்கள், பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள் என அவர்களின் எல்லா விஷயங்களையும் என்னிடம் பகிர்ந்துகொள்வார்கள். சமயங்களில் காபி ஷாப், தியேட்டர், ஃப்ரெண்ட்ஸ் வீடு என்று அவர்கள் சென்றதை எல்லாம் மறைக்காமல் என்னிடம் சொல்ல, கணவரிடம் வழக்கம்போல் ஒப்பித்துவிடுவேன். அவரோ... என்னிடம் விஷயங்களைக் கறந்துவிட்டு, பிள்ளைகளைத் திட்டி மனதை நோகடிப்பார். இப்படி பல முறை நடந்திருக்கிறது. என்றாலும், தற்போது நடந்திருப்பது, சோகத்தின் உச்சம்.

தான் காதலிக்கும் பையனைப் பற்றி, ஒரு தடவை என்னிடம் சொன்னாள் மகள். ஸ்மார்ட் லுக், கிளீன் ஹேபிட்ஸ், கை நிறைய சம்பளம் என அந்தப் பையனை எனக்கும் பிடித்துப் போனது. ''அப்பா, சாதியை பெரிய பிரச்னையாக்குவார். நல்ல வேலையில் சேர்வதுதான் இப்போதைக்கு என் குறிக்கோள். அப்பாகூட இப்போவே போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டாம். அதனால இந்த விஷயத்தை அவர்கிட்ட நிதானமா சொல்லிக்கலாம். இப்போ கல்யாணத்துக்கு அவசரமும் இல்ல... நான் ஓடிப்போகவும் மாட்டேன்'' என்று என்னிடம் சொன்னவள், ''இவ்வளவு தெளிவா சொல்லியும் வழக்கம்போல அப்பாகிட்ட சொல்லிடாதேம்மா...'' என்று வேண்டுகோளும் வைத்தாள்.
ஒருநாள் கணவரிடம் பேச்சு சுவாரசியத்தில் விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டேன். அவ்வளவுதான். கொந்தளித் தவர், அந்தப் பையனின் வீட்டுக்கே சென்று பிரச்னை செய்ததோடு, மகளையும் அடித்து நொறுக்கிவிட்டார்.
'இதற்கெல்லாம் நீதான் காரணம்' என்று, என்னை எதிரி போலவே பார்க்கும் மகள், என்னிடம் பேசுவதே இல்லை. ''அக்காவோட வாழ்க்கையை சீரழிச்சுட்டீங்களேம்மா..?'' என்று கல்லூரி படிக்கும் மகனும் என்னை வெறுத்தே பேசுகிறான். கணவரோ... என் மகளின் காதலை முற்றிலுமாக உடைக்க வழி தேடிக் கொண்டிருக்கிறார்.
குற்ற உணர்ச்சி காரணமாக தவிக்கும் நான், இதிலிருந்து விடுபடும் வகையில்... மகள், விரும்பிய வாழ்க்கையைத் தரவும், கணவரை சமாதானப்படுத்தவும் வழி என்ன? சொல்லுங்கள் தோழிகளே..!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு
என் டைரி 286ன் சுருக்கம்

''நிறத்திலும், அழகிலும் என் கணவரையும், நாத்தனாரையும்விட நான் குறைவானவள். இந்த ஒரு காரணம் போதாதா.. என் மாமியார், வார்த்தைகளாலேயே என்னை எரிக்க! இதில், அவ்வப்போது நெய் வார்ப்பதுபோல 'ராஜகுமாரன் மாதிரி உன் மகனுக்கு இப்படி ஒரு பொண்ணா?' என்று அக்கம்பக்கத்தினர் தீ மூட்டிவிடும் கொடுமை வேறு. குழந்தை இல்லாததும் கூடுதல் குறையாகிப் போய்விட... தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிறேன். இந்நிலையில், வீடு தேடி வந்து மாமியாருடன் பேசிக் கொண்டிருந்த சிலர், என்னை ஆத்திரப்படுத்த... பதிலுக்கு திட்டித் தீர்த்துவிட்டேன். இது பெரிய பிரச்னையாக உருவெடுத்துவிட்டது. என் மீது அன்பாக இருக்கும் கணவர்கூட 'உனக்கு இங்கிதமே தெரியாதா?’ என்று திட்டித் தீர்க்க... மனதளவில் மிகவும் உடைந்துவிட்டேன்.
இப்படி இம்சை கொடுக்கும் மாமியாரை சமாளிக்க வழி சொல்லுங்களேன் தோழிகளே!''
வாசகிகள் ரியாக்ஷன்...
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்!
அழகு என்பது நிறத்தைப் பொறுத்தது அல்ல. நம்மை எப்படி பிரசன்ட் செய்கிறோம் என்பதே. நம்முடைய தோற்றம் நமக்கே பெருமையாக இருக்கும்போதுதான்... தன்னம்பிக்கை மேலோங்கும். எனவே, உன் தோற்றத்தில் சின்னச் சின்ன திருத்தங்களை செய்துகொள்வதில் தவறில்லை. அடுத்து... 'வீட்டில்தானே இருக்கிறோம்' என்கிற நினைப்பை முதலில் தூக்கிப்போடு. தையல் கலையில் மேற்கொண்டு படி. உன் கலையில் அதிகமாக சம்பாதிக்க முயற்சிகள் எடு. இதெல்லாம் அமைந்தாலே... மன அமைதி கிடைக்கும். மாமியாரும் தானாக அடங்குவார்!
- சுதா, நெல்லை
பயந்து ஓடாதே!
நாம் பயந்து ஓடுகிறவரை, நம் மீது கல் எறிபவர்களின் கைகள் ஓயாது. நீ வருத்தப்படுவதும், வேதனைப்பட்டு முடங்கிப் போவதையும் தான் உன் மாமியாரும், அக்கம் பக்கத்தினரும் விரும்புகிறார்கள். முதலில் குழந்தை பிறப்பதற்கான மருத்துவ முயற்சிகளில் கவனம் செலுத்து. இதுதான் பல பேர் வீட்டில் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதற்கு தீர்வு கண்டாலே... உன் வாழ்க்கை அமைதியான ஓடமாக மாறிவிடும்.
- சக்தி சரயு அருண்மொழி, திருச்சி
ஓவர் ரியாக்ஷன் வேண்டாமே!
உங்களுக்குக் கிடைத்திருக்கும் அன்பான கணவரே, நிற விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அசட்டை செய்கிறார். அப்படியிருக்க... மற்றவர்கள் அதை கையில் எடுக்கிறார்கள் என்பதற்காக, நீங்கள் ஏன் வம்படியாக அதை உங்களோடு கட்டிக் கொண்டு திரிகிறீர்கள்? உங்களுடைய ஓவர் ரியாக்ஷனே... எதிரிகளின் பலம். எனவே, எதிர் விமர்சனங்களை. 'ஜஸ்ட் லைக் தட்' கடந்து நடைபோடுங்கள்... அத்தனையும் தானாகவே மறைந்துவிடும்!
- எம்.விஸ்வதா, திண்டுக்கல்