பிறந்த வீட்டை நம்பி...புகுந்த வீட்டை இழந்து..!
##~## |
என் துயரத்தை காலத்தின் கோலம் என்பதா, என் தவறு என்பதா... தெரியவில்லை!
'வேலைக்குப் போற பெண்தான் வேண்டும்’ என்ற தங்களின் நிபந்தனைக்கு ஏற்றவளாக இருந்ததால், என்னை மணம் முடித்தனர் என் புகுந்த வீட்டார். என் வருமானத்தை வைத்தே வாழ்க்கையை நகர்த்தி வந்த என் பெற்றோரின் நிலை, என் திருமணத்துக்குப் பின் சிரமத்துக்கு உள்ளானது. இங்கோ, என் மாமியாரும் கணவரும்... சம்பளம் கைக்கு வரும் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டுமே என்னிடம் கரிசனத்துடன் இருப்பார்கள். மிகக் கஷ்டமான சூழ்நிலையில்கூட, பிறந்த வீட்டுக்கு நான் சல்லிக்காசு கொடுக்க அனுமதிக்க மாட்டார்கள்.
இன்னொருபுறம், தன் சம்பளத்தில் மட்டுமில்லாது... என் சம்பளத்திலும் தன் தங்கையின் குடும்பத்துக்கு வாரி இறைப்பார் என் கணவர். அவசியத் தேவை என்பதுபோக, என் நாத்தனாரின் ஆடம்பரச் செலவுகளுக்கும் பிறந்த வீட்டில் இருந்தே கொடுக்க வேண்டும் என்பது மாமியாரின் கொள்கை. அந்தச் சமயங்களில் எல்லாம் கணவரிடம், ''எங்க அப்பா, அம்மாவுக்கும் கொஞ்சம் பணம் அனுப்பலாமா..?'' என்று கேட்டால், ''என்ன போட்டி போடுறியா..? ஒரு அண்ணனா நான் என் தங்கைக்கு செய்ய வேண்டியது கடமை. நீ பொம்பள. உன் அப்பா, அம்மாவுக்குத் செய்யத் தேவையில்லை'' என்பார்.

இந்தப் பிரச்னையிலேயே எங்களுக்குள் விரிசல் விழுந்து, ஒரு கட்டத்தில் போராட்டமாக மாறியது. 'என்னைப் படிக்க வெச்சு ஆளாக்கின பெற்றோரைத் தவிக்க விட்டுட்டுதான் வாழணும்னா... இந்த வாழ்க்கையே வேண்டாம்!’ என்று முடிவெடுத்து, பிறந்த வீட்டுக்கே திரும்பிவிட்டேன்.
வயதான தாய் - தந்தை, வேலைக்குப் போகாத தம்பி, வயது முதிர்ந்த தங்கை... இதுதான் என் பிறந்த வீட்டின் கதி. அப்போதைய என் வருகை அவர்களுக்கு தெம்பூட்டும்படியாக இருந்தது. நல்ல வரன் பார்த்து தங்கையின் திருமணத்தை முடித்தேன். அடுத்த இரண்டு வருடங்களில் தம்பிக்கும் வேலைக்கு ஏற்பாடு செய்து, அவன் திருமணத்தையும் முடித்தேன். பெரும் பொறுப்புகள் முடிந்த திருப்தியும் நிம்மதியும் கிடைத்தது. ஆனால், அது நெடுநாள் நீடிக்கவில்லை.
சில மாதங்கள் ஓடின. ஒரு கட்டத்தில், நான் வீட்டிலிருப் பதை தம்பியின் மனைவி விரும்ப வில்லை. தம்பியும் அதையே சூசகமாகச் சொன்னான். மனம் வெதும்பி அப்பா, அம்மாவிடம் கண்ணீர்விட, ஆண்பிள்ளை மீது கொண்ட அளவு கடந்த அன்பினாலும், தங்களின் எதிர்காலம் கருதியும் தம்பிக்கே சப்போர்ட் செய்தனர். ''நீ எதுக்காக புருஷனை விட்டுட்டு வந்தே..?'' என்கிறாள் என் தங்கையும் அலட்சியமாக!
இப்போது வயது தளர்ந்து, அவ்வளவாக சம்பாதிக்க முடி யாத நிலை எனக்கு. 'உறவுகள் எல்லாம் பொய்' என்கிற பேருண் மையை உணர்ந்து நிற்கும் எனக்கு, என்ன இருக்கிறது எதிர்காலம்?!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு
என் டைரி 287ன் சுருக்கம்

''கணவன் - மனைவிக்குள் ஒளிவுமறைவு கூடாது என்ற என் கருத்தின்படி, அன்றாட நடவடிக்கைகளை ஒன்றுவிடாமல் என் கணவரிடம் சொல்லிவிடுவது வழக்கம். அப்போதுதான் அவருக்கு உண்மையாக இருக்கிறோம் என்கிற நிம்மதி எனக்கு. இந்நிலையில், 'கிளீன் ஹேபிட்ஸ், கை நிறைய சம்பளம்' என்றிருக்கும் ஒரு பையனை தான் காதலிக்கும் விவரத்தை என் மகள் என்னிடம் சொல்ல, எனக்கும் பிடித்திருந்தது. கல்யாணத்தை நிதானமாக முடிக்கலாம் என்று மிக தெளிவாக சொன்ன மகள், 'அப்பாவிடம் சொல்ல வேண்டாம்' என்று கெஞ்சினாள். ஆனால், பேச்சு சுவாரசியத்தில் விஷயத்தை அவரிடம் நான் சொல்லிவிட... மகளை அடித்து நொறுக்கியதோடு அந்தப் பையனின் வீட்டுக்கும் சென்று பிரச்னை ஏற்படுத்திவிட்டார். மகளின் காதலை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். குற்ற உணர்ச்சியில் தவிக்கும் நான், மகள் விரும்பிய வாழ்க்கையை ஏற்படுத்தித் தரவும், கணவரை சமாதானப்படுத்தவும் வழி சொல்லுங்கள் தோழிகளே..!''
வாசகிகள் ரியாக்ஷன்...
காலம் மாற்றி வைக்கும் !
காதல் என்பது உலக மகா குற்றமல்ல; காதலிப்பவர்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் இருக்க வேண்டுமே தவிர... சாதி - மதம் ஒரு பொருட்டே அல்ல. இதை உங்கள் கணவருக்கு சந்தர்ப்ப சூழ்நிலை பார்த்து புரிய வைத்திருக்க வேண்டும். நேரம் காலம் பார்க்காமல் சொன்னதால் வந்த வினை இது. இப்போதும் ஒன்றும் ஆகி விடவில்லை. எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது மாதிரி, நல்ல சூழ்நிலை வரும்போதெல்லாம் உங்கள் கணவரிடம் பேசுங்கள், நிச்சயம் சம்மதிப்பார். எதையுமே காலம் மாற்றி வைக்கும்தானே!
- சத்யா முத்து ஆனந்த், வேலூர்
மகள் முக்கியம்!
ஒரு பெண் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தெளிவான மனநிலையில் முடிவெடுக்க வேண்டும் என்பதை ஊருக்கே உணர்த்திவிட்டது உங்கள் செயல்பாடு. கணவரை விடுங்கள்... இளவயதிலிருக்கும் மகள் முக்கியம். அவளுடைய வாழ்க்கை உங்கள் கையில்தான் இருக்கிறது. நிதானமாக எடுத்துச்சொல்லி பிரச்னைக்கு தீர்வு காண்பது முக்கியம். 'பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்’ என்பதை மனதில் ஏற்றிக்கொண்டு களத்தில் இறங்குங்கள்... வெற்றி நிச்சயம்'
- ராஜேஸ்வரி கண்ணன், மணப்பாறை