மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி 290

நல்ல நண்பன்... வேண்டுமென்று!

##~##

வயது நாற்பதாகிறது எனக்கு. என் வாழ்க்கையில் நல்ல தோழிகள் கிடைக்கவில்லை என்ற ஏக்கமே... இப்போது என் பெரும் கவலையாக இருக்கிறது. 'இதெல்லாம் ஒரு பிரச்னையா?' என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அதுதான் உண்மை.

நானும், என்னைவிட 10 வயது மூத்த என் அண்ணனுமாக எங்கள் வீட்டில் வளர்ந்தபோது, வயது வித்தியாசத்தினாலேயே எங்களுக்குள் நெருக்கம் இல்லாதுபோனது. என் அழுகை, கோபம், சந்தோஷம் என எதையும் அவரோடு ஷேர் செய்யவில்லை என்பதைவிட, என் அண்ணன் அதை விரும்பவில்லை என்றே சொல்ல வேண்டும். பள்ளி, கல்லூரி... என என் மனதை புரிந்துகொண்டு பழகியவர்கள், ஒன்றிரண்டு பேரே. ஆனால், அவர்களும் வாழ்க்கை முழுக்கத் தொடரும் நட்பாக என்னை நினைக்காமல், 'ஹாய்’, 'பை’ என்று படிப்பு முடிந்ததோடு பிரிந்து போனார்கள்.

காலச்சக்கரம் சுழன்று, இன்று திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருக்கிறேன். 'இளம் வயதில்தான் நண்பர்கள் இல்லை. கணவரையாவது உற்ற நண்பனாக்கி கொள்ளலாமே' என்று நான் எடுத்த அத்தனை முயற்சிகளுமே, தோல்வி. திருமணமான புதிதில், ஒரு நண்பனிடம் பேசுவதைப்போல தினமும் அவரிடம் அனைத்தும் பகிர்ந்தேன். ஆனால், ''வேலை டயர்ட். என்னைக் கொஞ்சம் ஃப்ரீயா இருக்க விடுறியா...'' என்பது போன்ற வார்த்தைகளால், முற்றிலுமாக தவிர்த்துவிட்டார்.

என் டைரி 290

இப்போது, விடலைப் பருவத்திலிருக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் ஒரு ஃப்ரெண்ட்லி மதராக இருக்க எவ்வளவோ முயல்கிறேன். ஆனால், அவர்கள் வயதின் தேவை, அவர்கள் வயது நண்பர்களாகவே இருக்கின்றனர். என்னை 'அம்மா’ என்ற வட்டத்துக்குள்ளேயே நிறுத்துகிறார்கள். தன் நண்பர்களை, தோழிகளை வீட்டுக்கு அழைத்து வரும்போதெல்லாம் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. ஆனாலும், எனக்குக் கிடைக்காத நட்பு, அவர்களுக்கு கிடைத்திருக்கிறதே என்று சந்தோஷப்படவே செய்கிறேன்.

எங்கள் அபார்ட்மென்டில் என் வயதையட்டிய பெண்கள் யாரும் இல்லை. மற்ற வயதினரிடம் பழகவோ, சேர்ந்து ஜோக்கடிக்கவோ, மனம் திறந்து பேசுவோ என் மனம் ஒப்பவில்லை. ஒருவேளை, எனக்குத் தோழிகள் அமையாமல் இருப்பதற்கு என் இயல்பில் ஏதேனும் தடை உள்ளதோ என்று நினைத்தால், பதில் தெரியவில்லை. ஆனால், நல்ல நட்புக்காக தொடர்ந்து ஏக்கத்திலேயே இருக்கிறது என் மனம்!

கிடைக்குமா அந்த ஆசீர்வாதம் எனக்கு..?!

- பெயர் வெளிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு

என் டைரி 289ன் சுருக்கம்

என் டைரி 290

''நிச்சயதார்த்தத்துக்கும், திருமணத்துக்கும் 6 மாத இடைவெளி இருக்கையில், பலரைப் போல எங்களுக்கும் அலைபேசிதான் கைகொடுத்தது. விபத்தில் சிக்கி தனக்கு கால் உடைந்தது, பிளேட் பொருத்தியிருப்பது, இதையெல்லாம் என்னிடம் சொல்லச் சொல்லியும் அவருடைய பெற்றோர் மறைத்தது என எல்லாவற்றையும் பகிர்ந்தபோது, அவர் மீதான பிரியம் இன்னும் அதிகரித்தது. திருமணத்துக்குப் பிறகு... வயதான மாமனார், மாமியாரை கவனிப்பதற்காகவே நான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறினேன். ஆனால், அவர்களோ... 'ஓராண்டாகியும் குழந்தை இல்லையே' என்று கரித்துக் கொட்டுவதோடு, ஊர் முழுக்க குறை சொல்கிறார்கள். எனக்கும் அவருக்கும் சிறுசிறு குறைகள் இருப்பது டாக்டர் மூலம் உறுதிப்பட்ட நிலையில், தனிக்குடித்தனம் சென்றுவிடலாம் என்று அவர் அழைக்கிறார். ஆனால், வயதான பெற்றோரிடமிருந்து மகனை பிரிப்பது பாவம் என்று மறுத்துவிட்டேன். குழந்தை பிறக்கும் வரை மாமனார் - மாமியார் வெறுக்காதிருக்க நான் செய்யட்டும்?''

வாசகிகள் ரியாக்ஷன்...

நம்பிக்கை வை... நல்லதே நடக்கும்!

'ஒரே மகன் மூலமாக நம் குலம் தழைக்காதா?’ என்கிற ஏக்கமும், ஆதங்கமுமே உன்மீது கடுஞ்சொற்களாக வீசப்படுகின்றன. எனவே, நீ இன்னும் கொஞ்சம் அதீத அன்பும், அக்கறையும் அவர்கள் மீது காட்டு. கடவுளை நமஸ்கரித்த கையோடு, 'நீங்களும் ஆசீர்வதியுங்கள், கடவுள் ஆசியோடு உங்கள் ஆசியும் சேர்ந்தால் சீக்கிரமே குழந்தைப்பேறு வாய்க்கும்' என்று பூரண நம்பிக்கையோடு அவர்களிடம் ஆசி வாங்கு. இதெல்லாமே... அவர்களை மனம் மாறச் செய்யும். எல்லாமே நல்லபடி நடந்தேறும்!

எஸ்.ஜம்பகலட்சுமி, கிழக்கு தாம்பரம்

ஏச்சுக்களை உதாசீனம் செய்!

தனிக்குடித்தனம் போகலாம் என்று கணவர் சொல்லியும், வயதான பெற்றோரிடமிருந்து மகனை பிரிப்பது பாவம் என்று நினைக்கும் உன்னுடைய விசால மனம்... அந்த பெரியவர்களால் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. மாமனார் - மாமியார் மற்றும் கணவர் மூவரையும் ஒன்றாக அழைத்து, உன் மனம் படும் வேதனைகளை பொறுமையுடன் எடுத்து வை. அவர்கள், தங்களின் தவறைப் புரிந்துகொண்டு மாற வாய்ப்பிருக்கிறது. அப்படியும் மாறாவிட்டால்... அவர்களுடைய ஏச்சு பேச்சுக்களை உதாசீனம் செய். உன் நல்ல மனதுக்கு எல்லாமே நல்லபடியாகத்தான் நடக்கும். உன் நலம் வேண்டி நாங்களும் இறைவனிடம் இறைஞ்சுகிறோம்!

- ஆயிஷா பர்வீன், விருகம்பாக்கம்