மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி 291 - புயலாக வந்த பாதகி !

என் டைரி 291 - புயலாக வந்த பாதகி !

 ##~##

காதல், ஒருவருடைய வாழ்க்கையை அப்படியே தலைகீழாகப் புரட்டியும் போடும்... உச்சத்துக்கு உயரவும் வைக்கும். இதில் முதல் வகை மனிதர்கள்தான் நாட்டில் அதிகம். அவர்களில் ஒருத்தியாக, இரண்டு குழந்தைகளுடன் நட்டாற்றில் தவித்துக் கொண்டிருக்கும் அபலை நான்!

என் சிறுவயதிலே அப்பா இறந்துவிட்டார். எனக்கு மூன்று அக்காக்கள். தனி மனுஷியாக, அவர்களைஎல்லாம் படிக்க வைத்து ஆளாக்குவதற்குள்ளாகவே படாதபாடு பட்டுவிட்ட அம்மா வால், கடைக்குட்டியான என்னை படிக்க வைக்க முடியவில்லை. பத்தாம் வகுப்போடு நின்றுவிட்ட நான்,

என் டைரி 291 - புயலாக வந்த பாதகி !

டெய்லரிங் கிளாஸ் போகும்போது... அவருடன் காதலில் விழுந்து, கல்யாணமும் கட்டிக்கொண்டேன்.

எம்.ஏ. பட்டதாரியான அவர், திருமணத்துக்குப் பிறகு வங்கிக் கடனுதவி பெற்று, ஆட்டோ வாங்கி ஓட்ட ஆரம்பித்தார். ''நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், நம்பி வந்த உன்னை உள்ளங்கையில் வைத்து தாங்குவேன்'’ எனும் அளவுக்கு ஓடியாடி உழைத்தார். அப்பா இல்லாத எனக்கு, அப்பாவாகவும் அன்பு காட்டினார். அவருடைய கஷ்டத்தை உணர்ந்து, மருத்துவமனை ஒன்றில் உதவியாளர் வேலையில் சேர்ந்தேன். இரண்டு ஆண் குழந்தைகளும் பிறக்க... வாழ்க்கையில் தென்றல் வீசிக்கொண்டே இருந்தது. ஆனால், அதில் புயலாக அந்த பாதகி வந்து சேர்வாள் என்று ஒரு நாளும் நான் நினைக்கவில்லை. இரண்டு தெரு தள்ளி வசிக்கும் அவள், என் கணவர் வீட்டை விட்டுக் கிளம்பும் வரை காத்திருந்துவிட்டு, அடுத்த நொடியே வீடு தேடி வந்துவிடுவாள். 'அக்கா... அக்கா'வென்று அவள் உருகி உருகிப் பேச... நானும் தங்கையாகவே பாவித்து பழக ஆரம்பித்தேன்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அவர் வீட்டில் இருக்கும் நேரத்திலேயே அந்த பாதகி வர, நானும் விகல்பமில்லாமல் அனுமதித்தேன். ஆனால், என்னவரிடம் பேசுவதிலேயே அவள் குறியாக இருப்பதை மிகமிக தாமதமாக நான் உணர்ந்தேன். அதற்குள்ளாக, கிட்டத்தட்ட குடி மூழ்கியே விட்டது. ''இனி, என் வீட்டுக்கு வரவேண்டாம்'’ என்று நான் அவளை தடுக்க... அவரோ, அவளுடைய வீடு தேடி போக ஆரம்பித்துவிட்டார்.  இரவு நேரத்தில் லேட்டாக வீட்டுக்கு வருவது, குடித்துவிட்டு வந்து கண்ட நேரத்தில் கதவைத் தட்டுவது, அக்கம்பக்கத்தினர் கேவலமாக எட்டிப் பார்ப்பது... இதெல்லாம் அன்றாடக் காட்சிகளாகிப் போயின. இதையடுத்து, வீட்டை காலி செய்யச் சொல்லிவிட்டார் வீட்டு ஓனர்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நான்... ''எப்போ அவ சங்காத்தத்தை விட்டுட்டு வர்றீங்களோ... அப்போ உங்ககூட வந்து வாழுறேன்'’ என்று சொல்லிவிட்டு, இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன். இங்கேயும் வீட்டின் முன்பாக வந்து நின்று அவர் சத்தம்போட, குழந்தைகளை அம்மாவிடம் விட்டுவிட்டு, மகளிர் விடுதி ஒன்றில் தங்கியபடி வேலைக்கு போய்வருகிறேன். அவ்வப்போது குடித்துவிட்டு போன் செய்து மிரட்டுவது, வழியில் மடக்கி தன்னோடு வரும்படி டார்ச்சர் செய்வது என்று தொடர்கின்றன தொல்லைகள்.

இரண்டு பையன்களையும் வைத்துக் கொண்டு, சொற்ப சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டும் எனக்கு... தினமும் நரகமாகவே நகர்கின்றன நாட்கள். தப்பிக்க வழி சொல்லுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு

என் டைரி 290ன் சுருக்கம்

என் டைரி 291 - புயலாக வந்த பாதகி !

''நாற்பது வயதாகும் நான், 'நமக்கு நல்ல தோழிகள் இல்லையே' என்கிற ஏக்கத்திலேயே தினமும் வெந்து சாகிறேன். சின்ன வயதில் சகோதர உறவும் அத்தனை நட்பாக இல்லை. பள்ளி, கல்லூரி நட்பு, படிப்போடு நின்றுபோனது. 'கணவரையாவது உற்ற நண்பராக மாற்றிக் கொள்ளலாம்' என்றால்... 'வேலை டயர்ட்... ஆபீஸ் டென்ஷன்’ என்கிற காரணங்களைச் சொன்னபடி இயந்திரமாகவே நடமாடிக் கொண்டிருக்கிறார். பிள்ளைகளோடு நட்பு பாராட்டலாம் என்றால்... 'அம்மா' என்கிற வட்டத்துக்குள் அடைத்துவிட்டு, ஒதுங்கிப் போகிறார்கள். தங்கள் நண்பர்களை, என் பிள்ளைகள் வீட்டுக்கு அழைத்து வரும்போதெல்லாம் பொறாமை ஒருபுறம்; அவர்களுக்காவது நல்ல நட்பு கிடைத்திருக்கிறதே என்று சந்தோஷம் மறுபுறமுகாக அத்தனையையும் மறக்கிறேன். 'நல்ல நண்பர்கள் அமையாமல் போனதற்கு, நம்மிடம்தான் பிரச்னையோ' என்றும் மறுகுகிறேன். என்றாலும், ஏங்குகிறது என் மனம்.. நல்ல நட்பைத் தேடி!''

வாசகிகள் ரியாக்ஷன்...

நட்புக்கு யாரும் எதிரி இல்லை!

முருங்கைக்கீரை அடையோ, வாழைப்பூ வடையோ... ஏதோ ஒன்றை செய்து உன் அபார்ட்மென்டில் ஒரு ஃப்ளாட்டின் காலிங்பெல்லை அழுத்து. வயது கூடவோ அல்லது குறையவோ உள்ள ஒரு பெண், 'வாம்மா’ என்றோ 'வாங்க ஆன்ட்டி’ என்றோ சொல்லி கதவைத் திறப்பாள். கொண்டு போனதை கொடுத்துவிட்டு 'நானே செய்தேன். நல்லா இருக்கா’ என்று கேட்டு, உன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு திரும்பு. மறுமுறை பார்க்கும்போது அவள் சிரிப்பாள், குசலம் விசாரிப்பாள். உன் வீட்டுக்கு அழைப்பு வை. வருவாள். நட்பு தானாக வளரும். நட்புக்கு யாரும் எதிரி கிடையாது.

- ஜெயா மகாதேவன், சென்னை-41

தெளிந்த அறிவுடன் தேடுங்கள்!

எல்லா உறவுகளும் நல்ல நட்பாகாது. நெருங்கிய உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத எவ்வளவோ விஷயங்களை, நண்பர்களுடன் எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும். எனவே, உறவு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். இந்தக் காலகட்டத்தில், ஃபேஸ்புக், ட்விட்டர் என ஒருவரையருவர் பார்க்காமல், பேசி நட்பு வளர்த்துக் கொள்கிறார்கள். உங்கள் வயது நண்பர்களையே தேடிக் கொண்டிருந்தால் எப்படி? வயது, இனம், நாடு, ஆண், பெண் என அனைத்தும் கடந்ததுதான் நட்பு. எனவே, எந்தவித கட்டுபாடுமின்றி, தெளிந்த அறிவுடன் தேடிப் பாருங்கள். எளிதாக கிடைப்பார்கள் நண்பர்கள்!

- அம்பிகா தேவராஜன், மாதவரம்