மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19

என் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19

 ##~##

எங்கள் வீட்டில், மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமாகிவிட்டது. நிச்சயமாக அவர்கள் நல்ல வாழ்க்கைத் துணையைத்தான் தேடுவார்கள். ஆனால், நான் அந்த வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கமாட்டேன் என்பதும் நிச்சயமே! காரணம், என் அத்தை மகனை நான் காதலிக்கிறேன்.

'காதலை வீட்டில் சொல்ல வேண்டியதுதானே..?’ என்று சுலபமாக முடித்துவிட முடியாத அளவுக்கு... என் காதலில் சிக்கல் இருக்கிறது. எனக்கு வயது 23. அவனுக்கு 19. ஆம்... என்னைவிட நான்கு வயது இளையவன். இப்போது உங்களுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி ஏற்படுகிறதா... இதுவே எங்கள் வீட்டில் பெரிய கலவரமாக வெடிக்கும் என்பதால்தான், என் காதலை வீட்டிலும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.

சிறு வயதில் இருந்தே இருவரும் பழகுகிறோம். எப்போது அதை நாங்கள் காதலாக உணர்ந்தோம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு, நாங்கள் வளர வளர... இயல்பாகவே எங்கள் நேசமும் வளர்ந்தது. மிகவும் நல்ல பையன். என் மேல் அளவில்லா அன்பும், என் பெற்றோர் மேல் அதீத மரியாதையும் வைத்திருக்கிறான். நாங்கள் வாழ்க்கையில் இணைந்தால்... அது முழுமையான, சந்தோஷமான வாழ்க்கையாக இருக்கும் என்று இருவருமே நம்புகிறோம், ஆசைப்படுகிறோம்.

என் டைரி - 292  - எனக்கு 23 அவனுக்கு 19

''நான் படிப்பை முடிச்சு, ஒரு வேலையில் சேர்ந்ததுக்கு அப்புறம் வீட்டுல சொல்லி அனுமதியும் ஆசீர்வாதமும் வாங்கலாம்...'' என்கிறான் அவன். ஆனால், இப்போதே எங்கள் வீட்டில் தொடங்கிவிட்ட மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை... இன்னும் நான்கைந்து ஆண்டுகள் எப்படித் தள்ளிப்போட முடியும் என்னால்? ஒழுக்கத்திலும், குணத்திலும் என்னை நல்ல பெண்ணாகவே வளர்த்திருக்கும் என் பெற்றோரிடம், இந்த விஷயத்தை அவர்கள் மனது புண்படாமல் எப்படி எடுத்துச் சொல்வது என்றெல்லாம் என் மனம் தவிக்கிறது.

ஊரும், உறவும் எங்களை கேலி பேசவும், காயப்படுத்தவும் தயாராக இருக்கும் என்பதை அறிந்தாலும்... வயதைத் தவிர, அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல் என்று எல்லா விஷயங்களிலும் எங்களை 'மேட் ஃபார் ஈச் அதர்’ என்றே உணர்வதால், இந்தக் காதலில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம்!

இந்த உண்மையான நேசம், வாழ்க்கையில் எங்களை இணைக்குமா..?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 292  - எனக்கு 23 அவனுக்கு 19

100

சிநேகிதிக்கு... சிநேதிக்கு

என் டைரி 291ன் சுருக்கம்

என் டைரி - 292  - எனக்கு 23 அவனுக்கு 19

''சிறுவயதிலேயே அப்பா இறந்துபோனதால், என்னையும் மூன்று அக்காக்களையும் அம்மாதான் படாதபாடுபட்டு வளர்த்தார். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நான், டெய்லரிங் கிளாஸ் போகும்போதுதான் காதலில் விழுந்து, கல்யாணமும் ஆனது. அவர், ஆட்டோ ஓட்ட... இரண்டு குழந்தைகளுக்கு தாயான நானும், வேலைக்குப் போய், குடும்பத்தை நடத்தி வந்தோம்.

இந்நிலையில், எங்கள் பகுதியில் வசிக்கும் ஒருத்தி, 'அக்கா... அக்கா...’ என உருகிப்பேச, தங்கையாக நினைத்துப் பழகினேன். அவளோ... என் கணவரை தன் வலையில் விழ வைக்க... அவள் வீடே கதி என்று கிடக்கிறார். 'அவளை மறந்து வந்தால் வா...’ என்றபடி குழந்தைகளுடன் வெளியேறிய நான், அவர்களை என் தாய் வீட்டில் விட்டுவிட்டு, மகளிர் விடுதியில் தங்கியபடி வேலைக்கு சென்று வருகிறேன். வழியில் மடக்கி, தினமும் டார்ச்சர் செய்கிறார். நாட்கள் நரகமாகவே நகர்கின்றன எனக்கு. தப்பிக்க வழி சொல்லுங்கள் தோழிகளே!'

வாசகிகள் ரியாக்ஷன்...

பலவீனம் தவிருங்கள்... பலம் காட்டுங்கள்!

வாய்ப்பு வரும்போது... வழுக்காமலேயே வலையில் விழும் ஆண்கள் மிகமிக அரிது. பெரும்பாலான பெண்களைப் போலவே நீங்களும் மூக்கணாங்கயிறை விட்டுவிட்டீர்கள். இனி, அந்த மிருகத்தின் வாலைப் பிடித்து இழுத்து, நிலைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்குவது வீண் வேலை. ஏனெனில், மதுவிலும் மாதுவிலும் வீழும் ஆண்... முழு மிருகமாவதே காரணம். தப்பிக்க மருந்து என்னவெனில், முறைப்படி நீதிமன்றத்தில் ஜீவனாம்ச வழக்கு தொடருங்கள். உங்கள் முழு பலத்தையும் திரட்டிப் போராடுங்கள். நிச்சயம் வெற்றி உங்கள் பக்கமே! அதைவிடுத்து, திருந்தி வருவான் ஏற்றுக்கொள்ளலாம் என்றெல்லாம், சினிமா கதை போல காத்திருக்காதீர்கள். அப்படி இருந்தால், அதுவே நமது பலவீனமாகிவிடும்!

- நந்தினி இளங்கோ, திருச்சி

குட்டக்குட்ட குனியாதே!

அன்புத் தோழியே... புரியாத வயதில் காதலில் விழுந்து, பின் புலம்பியபடி தன் நிலையை நினைத்து கண்ணீருடன் வாழ்பவர்கள் இன்று பெருகிவிட்டார்கள். உன் காதல் (?) கணவரை மீட்க, குடும்ப நல நீதிமன்றத்தை நாடு, உனக்கு நீதி கிடைக்கும். இல்லையென்றால் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய். இதையெல்லாம் மீறி, அவர் தகராறு செய்தால், முறைப்படி அவரை விட்டுப் பிரிந்து விடு. அதன்பிறகு, உன் அன்பைப் புரிந்து தேடிவந்தால் ஏற்றுக்கொள். இல்லையெனில், கவலையை விட்டுத்தள்ளு. சிங்கங்கள் போல் இரண்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கு. இதன் மூலமே அவர் முகத்தில் கரியைப் பூசு. குட்டக்குட்ட குனிந்து கொண்டே இருக்காதே!

- சண்முகவடிவு, அரிசிப்பாளையம்