மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 295

இன்னொருத்தி !

##~##

வெளியுலகம் தெரியாத கிணற்றுத் தவளையாக வளர்ந்தேன். இப்போது, வாழ்க்கை என்னை வீதியில் விட்டு வேடிக்கை பார்க்கிறது!

பெற்றோருக்கு மிகவும் அடங்கிய பெண் நான். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது, எனக்கு அவசர அவசரமாகத் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தனர். உறவுக்காரப் பையன்தான் மாப்பிள்ளை. திருமணம் முடிந்த ஒரு வருடம் கழித்து எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதுவரை கணவரின் வெளி நடவடிக்கைகளைக் கவனிக்காத அசட்டுப் பெண்ணாக இருந்த நான், அதற்குப் பின்தான் 'ஏதோ சரியில்லை' என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தேன். எப்போதும் ரகசியமாக போன் பேசியபடியே இருப்பார். விடுமுறை நாட்கள், அதிகாலை, பின் இரவு என திடீரென வீட்டிலிருந்து கிளம்பிச் செல்வார். பல இரவுகள் வீட்டுக்கு வராமல் கழிப்பார்.

பக்கத்து வீட்டுப்பெண் என் முக வாட்டத்தைக் கவனித்து, விசாரித்தார். அப்போதும் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவர் உடைத்தார் விஷயத்தை. என் கணவருக்கு எங்கள் திருமணத்துக்கு முன்பிருந்தே வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்திருக்கிறது. அவள் என் கணவரைவிட ஐந்து வயது மூத்தவள். அப்பெண்ணுக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகளும் உண்டு. அவளுடைய கணவன், இந்த விஷயம் தெரிந்ததும் அவளைவிட்டு விலகிவிட, எந்தத் தடையும் இல்லாமல் என் கணவருடன் வாழ்ந்திருக்கிறாள்.

என் டைரி - 295

என் கணவரிடம் தயங்கித் தயங்கி இதுபற்றிக் கேட்டேன். ஆரம்பத்தில் ''இல்லை'’ என்று மழுப்பியவர்... ஒரு கட்டத்துக்கு மேல்... ''ஆமா... என்னடி செய்வே?'' என்று மிரட்ட ஆரம்பித்துவிட்டார். அந்தப் பெண்ணிடமே சென்று சண்டை போட்டேன்... கெஞ்சினேன்... அழுதேன். ''முடிஞ்சா உன் புருஷனை இங்க வரவிடாம நிறுத்திக்கோ'' என்றாள் திமிராக.

நாட்கள் செல்லச் செல்ல, என்னை அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்தவர், என் நகைகளை எல்லாம் பறித்துச் சென்று, அவளிடம் கொடுத்தார். ஒரு கட்டத்தில் துளியும் நிம்மதி இல்லாத சூழலில், உடலாவது ரணப்படாமல் தப்பிக்கட்டும் என்று அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன். போலீஸிடம் சென்றால், குடும்ப மரியாதை போய்விடும் என்று அம்மாவும் தங்கையும் யோசிக்கின்றனர்.

இப்போது என் எதிர்கால வாழ்க்கை என்ன என்பதுதான் என் முன் நிற்கும் பூதாகாரக் கேள்வி. 27 வயதாகும் நான், குழந்தையுடன் பிறந்தவீட்டு நிழலில் இருக்கிறேன். இன்னும் எத்தனை நாள் வயதான அம்மாவின் பாதுகாப்பு கிடைக்கும்? அதற்குப் பின்? பத்தாவதே படித்திருக்கும் நான், என் குழந்தையை எப்படி ஆளாக்குவேன்? நரக வாழ்க்கைதான் என்றாலும், என் மகனுக்காகவாவது மீண்டும் அவனிடம் சென்று வாழலாம் என்றால், வேண்டாம் என்று என் உடலும் மனதும் கெஞ்சுகின்றன.

என்னதான் வழி எனக்கு... சொல்லுங்கள் தோழிகளே?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 295

100

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 294ன் சுருக்கம்

என் டைரி - 295

''சொகுசான வாழ்க்கைக்காக, எதையும் செய்யத் தயாராக இருக்கும் சில பெண்களின் வரிசையில், என் நாத்தனாரும் ஒருத்தி! அவளுடைய சந்தோஷத்துக்காக விரும்பியவரையே திருமணம் செய்து வைத்தார்கள். சந்தோஷமாக சென்ற அவர்களுடைய வாழ்க்கை, வியாபார நஷ்டம் காரணமாக திடீர் சிக்கலுக்குள்ளானது. அதன்பிறகு, நிலைமை சீரானாலும்... நாத்தனாரின் ஆடம்பரக் கனவுகளுக்கு அவை ஈடு கொடுக்கவில்லை. வசீகரப் பேச்சால் ஆண், பெண் இருவரையும் ஈர்க்கும் அவள், சம்பந்தப்பட்ட வீட்டு ஆண்களிடம் இனிக்க இனிக்க பேசி... பணம், நகைகளை பறித்துக் கொள்ளும் வேலையையும் செய்து வந்திருக்கிறாள். என் தோழியின் குடும்பமும் இவளிடம் சிக்கியபோதுதான், விஷயமே தெரியவந்தது. என் கணவர், மாமனார், மாமியாரிடம் சொன்னால் நம்ப மாட்டார்கள். நேரடியாகக் கண்டிக்கலாம் என்றாலும் பிரச்னை வெடிக்கும். எப்படி திருத்துவது?''

வாசகிகள் ரியாக்ஷன்

தோழியையே ஆயுதமாக்கு!

உன் நாத்தனாருக்கு மூக்கணாங்கயிறு போட முதல் அடி எடுத்து வைக்க வேண்டியது நீதான். அதுவும் உடனடியாக! பாதிக்கப்பட்ட உன் தோழியை, உன் கணவரிடம் பேசச் சொல். முதலில் நம்ப மறுத்தாலும் தன்னையும் அறியாமலே தங்கையைக் கண்காணிக்க ஆரம்பிப்பார். உண்மை தெரியவரும்போது உன் உதவியை நாடுவார். அப்போது, அனைவரிடமும் நிலைமையை எடுத்துரைத்து, அவர்களை உங்கள் வட்டத்தில் இணைத்துக்கொள்ளுங்கள். இப்படியாக குடும்பமே ஒருங்கிணையும்போது... அவளால் பொய்யுரைக்க முடியாது. பிறகு, திருத்தப் பாருங்கள். முள்ளின்மேல் விழுந்துவிட்ட சேலை, மேலும் மேலும் சேதமடையாமல் மீட்டெடுக்க முயலுங்கள்.

- லலிதா சண்முகம், உறையூர்

சமயோஜித புத்தியைப் பயன்படுத்து!

குடும்பங்களில் பிரச்னை ஏற்படும் சமயங்களில், அவமானங்களைச் சந்திக்காதிருக்க நீ கையிலெடுக்க வேண்டிய ஆயுதம்... உன் சமயோஜித புத்தியே! உன் நாத்தனார், தன் கணவரோடு உன் வீட்டுக்கு வரும்வேளையில், எல்லோர் முன்னிலையிலும் அவள் அணிந்திருக்கும் ஆடை, அணிகலன்களை புகழ்வதுபோல் பேசு. ''எந்தக் கடையில் வாங்கினீர்கள்...’', ''எத்தனை பவுன்..?’', ''ரொக்கம் கொடுத்து வாங்கியதா... தவணை முறையா..?’' என்றெல்லாம் கேள். பேச்சோடு பேச்சாக... ''அண்ணா, உங்கள் செலக்ஷன் சூப்பர்... மனைவிக்கு பார்த்து பார்த்து வாங்குகிறீர்களே'’ என்று அவரையும் புகழ்ந்து பேசு. உனது அடுக்கடுக்கான கேள்வி மற்றும் பேச்சால் நாத்தனார் கணவரின் சிந்தனையைத் தூண்டு. அவர் சிந்திக்க தொடங்கினால் உண்மை வெளியே வரும்.

- தீ.அம்மணி, திருநெல்வேலி