மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் !

என் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் !

என் டைரி  296

 ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் !

100

##~##

நாத்தனார் பிரச்னை காரணமாக வாழ்க்கை சிக்கலாகும் எத்தனையோ பெண்களைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன்... படித்திருக்கிறேன். ஆனால், எனக்கு வந்திருக்கும் பிரச்னையோ... விநோதத்திலும் விநோதம்!

பெற்றோர் நிச்சயித்த திருமணம் எங்களுடையது. கணவர் போலீஸ் வேலையில் இருக்கிறார். மாமனார், மாமியார், நாத்தனார் என்று சுருக்கமான புகுந்த வீடு. தங்கையிடம் அவர் காட்டிய அளவு கடந்த பாசம், ஆரம்பத்தில் என்னை ஆச்சர்யப்படுத்தியது. ஆனால் நாட்கள் ஆக ஆக, 'உரிமை' என்கிற பெயரில் அண்ணனை ஓர் அடிமையாகவே வைத்திருக்கிறாள் என்பதை உணர்ந்தபோது, எனக்கு ஏக எரிச்சல்.

தீபாவளி, திருமண நாள் என விசேஷ தினங்களுக்கு, எனக்கு என்ன நிறத்தில் புடவை எடுத்துக்கொடுக்க வேண்டும் என்பதில் இருந்து, என் அப்பா, அம்மா வீட்டுக்கு நான் செல்வது வரை அனைத் தையும் தன் தங்கையின் விருப்பம், ஆணைப்படியே நிறைவேற்றினார் கணவர்.

என் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் !

'இவள் திருமணம் முடிந்து செல்லும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருப்போம்’ என்று அமைதியாக இருந்தேன். ஆனால், அவளுக்கு வீட்டோடு மாப்பிள்ளை பார்த்து, நிரந்தரமாக தங்கியபோது, என் குமுறல்கள் அதிகமாயின. என்ன நினைத்தாளோ... ''அண்ணே... நீயும், அண்ணியும் தனிக்குடித்தனம் போங்க'' என்றாள் திடீரென ஒரு நாள். இவரும் 20 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு வீட்டைப் பார்த்து, என்னையும், ஐந்து வயதான எங்கள் பெண் குழந்தையையும் அழைத்து வந்தார்.

சில மாதங்கள்கூட இல்லை, ''அண்ணே... உன்னைப் பார்க்கணும்போல இருக்கு. இன்னிக்கு வீட்டுக்கு வந்துட்டுப் போ...'' என்று வாரத்துக்கு ஒருமுறை போன் செய்ய ஆரம்பித்தாள். வாரத்துக்கு நான்கு தினங்களாக மாறிய போன்... ''பாவம், உனக்கு அலைச்சல் ஜாஸ்தி. நம்ம வீட்டுல இருந்து ஸ்டேஷன் போனாதான் உனக்கு வசதி. நீ இங்கயே தங்கியிரு. பாப்பா ஸ்கூலுக்கு வசதிங்கிறதால, அண்ணி அங்கேயே இருக்கட்டும். சனி, ஞாயிறு போய் பார்த்துக்கோ'' என்று எங்களை பிரித்தேவிட்டாள். இரண்டு நாட்கள் அவர் கூடுதலாக எங்களுடன் தங்கிவிட்டால், ''அயிரை மீன் குழம்பு வெச்சிருக்கேன்... உடனே வந்துடு'' என்று போன் செய்துவிடுவாள்.

'நாத்தனாருக்கு நம் மீது அப்படி என்ன வெறுப்பு, கோபம், பொறாமை, வன்மம்?' என்று குழம்பி நிற்கிறேன். வெளிப்படையாக அவள் என்னுடன் சண்டை போடாவிட்டாலும், நானும் என் கணவரும் சந்தோஷமாக வாழக்கூடாது என்பதுதான் அவள் குறிக்கோள் என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது. இதை அவரிடம் சொன்னபோது... கண்மூடித்தனமான தங்கை பாசத்தில்இருக்கும் அவர் என்னை வில்லியாக பார்க்கிறார். இப்போது அவருக்கும் எனக்குமான அந்யோன்யமும், குடும்பம் என்ற பிணைப்பும் தளர்ந்தேவிட்டது. சொல்லப் போனால், 'உனக்கு ஒரு குழந்தை போதும்’ என்று தங்கை சொன்னதை வேதவாக்காக எடுத்த என் முட்டாள் கணவர், தாம்பத்யத்தையே தவிர்த்துக் கொண்டிருக்கிறார்.

பிரிந்தும், பிரியாமலும் வாழும் இந்த வாழ்க்கைக்கு விடியல் எப்போது?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

 சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 295ன் சுருக்கம்

என் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் !

''வெளியுலகம் தெரியாமல்... பெற்றோருக்கு அடங்கிய பெண்ணாக வாழ்ந்த என்னை, வீதியில் விட்டு வேடிக்கை பார்க்கிறது வாழ்க்கை!

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், உறவுக்கார பையனுக்கு திருமணம் செய்து வைத்தனர். ஓராண்டு ஓட... ஒரு குழந்தை பிறந்தது. இந்த நிலையில், என் கணவருக்கும், வேறு பெண்ணுக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது. அவரைவிட வயதில் மூத்த.... இரண்டு குழந்தைகளின் தாயான அப்பெண்ணே கதி என கிடக்கிறார். நாட்கள் செல்லச்செல்ல என்னை துன்புறுத்துவதோடு நகைகளை பறித்துச்சென்று அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் நிம்மதி இழந்த நான், மகனுடன் தாய் வீட்டுக்கு வந்துவிட்டேன். பத்தாவதே படித்திருக்கும் 27 வயது நிரம்பிய நான், எத்தனை நாள்தான் அம்மாவின் நிழலில் வாழ்வது? மகனுக்காக மீண்டும் என் கணவனோடு வாழலாம் என்றால்... 'வேண்டாம்' என்று உடலும், மனதும் கெஞ்சுகின்றன.

வழி சொல்லுங்கள் தோழிகளே! ''

வாசகிகள் ரியாக்ஷன்...

மறுமணம் பற்றி யோசி!

மனைவியை அடித்து துன்புறுத்தும் கணவனுக்கு எதிராக, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் உள்ளது. எனவே, கணவன் மீது போலீஸில் புகார் கொடுப்பதோடு... மகளிர் ஆணையத்திலும் புகார் செய். பெண்கள் அமைப்பின் உதவியை நாடினால், நியாயம் கேட்பார்கள். அதன் பிறகும் திருந்தாவிட்டால், அந்தக் கயவனிடமிருந்து விவாகரத்து பெற்றுவிடு. உன் குழந்தையை, உனது உழைப்பால் காப்பாற்றி படிக்க வைத்து முன்னுக்கு கொண்டு வா. காலம் கனிந்தால் மறுமணம் பற்றி யோசித்து முடிவெடுத்து நல்வாழ்க்கையை அமைத்துக்கொள்.

- என்.ரங்கநாயகி, வேலாண்டிபாளையம்

அச்சம் தவிர்!

பெண்ணுரிமை பெரிதும் போற்றப்படும் இந்நாளில் 'நான் என்ன செய்வேன் என் கணவரின் துரோக நடவடிக்கையை எதிர்த்து...’ என கேட்டிருப்பது... உங்கள் தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. உடனே குடும்ப நீதிமன்றம் சென்று உங்களுக்கு இழைக்கப்படும் துரோகத்தை எடுத்துச் சொல்லுங்கள். கணவரிடமிருந்து விடுதலை கேட்டுப்பெறுவதோடு ஜீவனாம்சம் பெற்று சுயதொழில் தொடங்கி சுதந்திரமாக வாழுங்கள். அநாவசியமான அச்சத்தையும், நாணத்தையும் தூக்கி வீசுங்கள்!

- சுலோசனா சம்பத், ஸ்ரீரங்கம்