மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி!

என் டைரி - 297

##~##

ணவருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை. இரண்டு பிள்ளைகள். குறைகள் எதுவும் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் நடுத்தரக் குடும்பம். கணவரின் சம்பாத்தியத்தில் அகலக்கால், ஆடம்பரம் எதுவும் இல்லாமல் சிக்கனமாக குடும்பத்தை நடத்தி, பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு சேமித்தும் வருகிறேன். இந்நிலையில், பிரச்னையாக வந்திருப்பவர்... என் கணவரின் தம்பி.

சுயதொழில் செய்து வந்தார் கணவரின் தம்பி. இதனால், கையில் லட்சங்கள் புரள... அடிக்கடி மாற்றும் புதுப்புது கார்கள், விடுமுறைக்கு ஃபாரின் டூர், நினைத்த நேரம் எல்லாம் ஷாப்பிங் என்று குடும்பத்தோடு அவர்கள் அனுபவிக்கும் ஆடம்பரங்களை... நானும் என் குழந்தைகளும் ஆச்சர்யமாகப் பார்ப்போம். இருந்தாலும், எங்களின் நிலை அறிந்து அதற்காக ஏங்கவோ, பெருமூச்சுவிடவோமாட்டோம்.

இந்நிலையில், திடீரென அவருக்கு தொழில் நொடித்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக வருமானம் எதுவும் இல்லை. ஆடம்பரம் அனைத்தும் வடிந்து, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பினர். 'ஐந்தாயிரம் கொடு', 'பத்தாயிரம் கொடு' என்று என் கணவரிடம் வந்து பெற்றுச் செல்ல ஆரம்பித்தார். தம்பியின் மீது பரிதாபம் ஏற்பட, தொடர்ந்து உதவிகள் செய்தார் என்னவர். நானும், எங்கள் கடமையாகவே நினைத்தேன்.

குடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி!

ஆனால், ஆயிரத்தில் செய்த உதவிகள் போய், 'தொழில் தொடங்கணும், பணம் வேணும்ணே’ என்று ஒரு கட்டத்தில் லட்சங்களாக கேட்க ஆரம்பித்தார் கொழுந்தனார். 'தம்பிக்கு ஒரு வழி கிடைத்துவிடாதா?' என அலுவலகத்தில் பி.எஃப் பணம் எடுத்துக் கொடுத்து, என் நகைகளை அடகு வைத்து, பிள்ளைகளுக்கு சேமித்து வரும் இன்ஷூரன்ஸ்களை க்ளோஸ் செய்து என பல தவணைகளில் பல லட்சங்கள் கொடுத்துவிட்டார். கொழுந்தனாருக்கு இன்னும் தொழில் செட்டில் ஆகவில்லை. மேலும் மேலும் பணம் கேட்டு வந்து நிற்கிறார்.

என் ஆதங்கமெல்லாம்... தான் சம்பாதித்த காலத்தில் வாங்கிய வீடும், நகைகளும் கொழுந்தனாரிடம் பத்திரமாக இருக்க, அவற்றை விற்று தொழிலுக்கு வழி பண்ண நினைக்காமல்... சாமர்த்தியமாக எங்களிடம் பெற நினைக்கிறார். இதை என் கணவரிடம் சொன்னால், ''அதை எல்லாம் வித்துட்டு அப்புறம் நாளைக்கு அவன் என்ன பண்ணுவான்?'' என்கிறார். ''அதைத்தான் நானும் கேட்கறேன். இருக்கற சேமிப்பை எல்லாம் எடுத்துக் கொடுத்துட்டு அப்புறம் நாளைக்கு நாம என்ன பண்ணுறது. அவங்களுக்காச்சும் வீடு இருக்கு, நமக்கு அதுவும் இல்லையே?'' என்றால், என்னை எதிரியைப் போல் பார்க்கும் கணவர்... ''அவன் என் தம்பி. இனி இதில் நீ தலையிடாதே'' என்கிறார்.

தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும். எப்படிப் புரிய வைப்பேன் என்னவருக்கு?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி!

100

என் டைரி 296ன் சுருக்கம்

''போலீஸ்காரரான என் கணவருக்கு, தங்கை மீது அளவு கடந்த பாசம். ஆனால், இதை வைத்தே

குடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி!

கிட்டத்தட்ட அண்ணனை அடிமையாகவே அவள் வைத்திருக்கிறாள் என்பது பிற்பாடுதான் புரிந்தது. அவளுக்கு திருமணமாகிவிட்டால் சரியாகிவிடும் என்று இருந்த வேளையில், வீட்டோடு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்து, என எதிர்பார்ப்பில் மண் போட்டனர். இடையில், தங்கையின் ஆணைப்படியே 20 கிலோ மீட்டர் தூரத்தில் வீடு பார்த்து, ஐந்து வயது மகளுடன் நாங்கள் குடியேறினோம். ஆனால், கொஞ்ச நாட்களிலேயே... 'ஸ்டேஷனுக்கு இதுதான் பக்கம்' என்று சொல்லி தங்கள் வீட்டிலேயே அவரை மட்டும் தங்க வைத்துவிட்டாள். அவருடன் நான் சந்தோஷமாக வாழக்கூடாது என்பதுதான் அவளுடைய குறிக்கோள் என்பது புரிந்து, கணவரிடம் சொன்னேன். அவரோ, என்னை வில்லியாகவே பார்க்கிறார். தங்கையின் சொல்படி... எங்களுக்கு ஒரு குழந்தையே போதும் என்று தாம்பத்தையும் தவிர்க்கிறார். இக்கட்டான இந்த வாழ்க்கைக்கு விடியல் எப்போது?!''

வாசகிகள் ரியாக்ஷன்

முள்ளை முள்ளால் எடு!

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை உணர்ந்து, ஒரு முடிவுக்கு வரவேண்டிய கட்டாயத்தில்தான் இப்போது நீங்கள் இருக்கிறீர்கள். எனவே, உடனடி யாக உங்கள் கணவரை அழைத்து, அவருடைய தங்கை இழைக்கும் கொடுமைகளை பொறுமையாக எடுத்துரைத்து நியாயம் கேளுங்கள். நியாயம் கிடைக்கவில்லையென் றால்... 'வேறு வழியில்லாமல் உங்களைப் பிரிகிறேன்' என்பதை அவருக்கு நன்றாக உணர்த்திவிட்டு, தனியே பிரிந்து வாருங்கள். உங்கள் சொந்தக்காலில் (ஏதேனும் சுயதொழில் செய்து) நின்று வாழ்க்கையை சுதந்திரமாக தனித்தன்மையோடு வாழ ஆரம்பியுங்கள். முள்ளை முள்ளால் எடுக்கத் தயங்காதீர்கள் சகோதரியே! இப்படிச் செய்தால்... அவர் மனம் மாறி உங்களிடம் மன்னிப்பு கேட்டு உங்களோடு சேர்ந்து வாழும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

- கிரிஜா நரசிம்மன், சென்னை-102

நினைத்ததை முடி..!

'குடும்பப் பாசம்' என்கிற போர்வையில் நாத்தனாரின் மூலம் நடக்கும் இத்தகைய செயல்கள்... முள்ளின் மேல் விழுந்த சேலைபோல்! இதில் சேதாரம் இல்லாமல் வெற்றிபெற உன் கணவரை உடனடியாக வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்லலாம் என்று அன்பாக பேசி முடிவெடுக்க வை. மகளின் உடல்நலம், படிப்பு இவற்றையெல்லாம் காரணமாகக் காட்டி, கிட்டத்தட்ட அவரைக் கட்டாயப்படுத்து. கணவனின் தாய் வீட்டாருடன் முன் எப்போதையும்விட அதிகமாக உறவாடி, கணவனுக்கு சந்தேகம் வராதபடி நினைத்ததை முடி. நிச்சயமாக பெரிய மாற்றம் வந்தே தீரும்... வாழ்த்துக்கள்.

- சுஜாதா, சென்னை-61