மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 299

பாதை மாறிய காதல் கணவன்...ஒரு பரிதாப காதல் கதை!

ரீடர்ஸ்

##~##

காதலித்தவரையே கரம்பிடிக்கும் பாக்கியம் வாய்க்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. இருவீட்டு உறவுகளின் எதிர்ப்பில் கருக இருந்த எங்கள் காதல் மொட்டை, தன் உறுதியால் கல்யாணத்தில் மலர வைத்தார் என்னவர். உறவுகள் உடன் இல்லையே என்கிற குறையை தன் அன்பால் அழுத்தித் துடைத்தார். குழந்தை பிறந்ததும் சொந்தங்கள் அனைத்தும் சேர்ந்துவிடும் என நினைத்தோம். அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தும்கூட யாருமே எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

அதற்குப் பிறகு சொந்தங்களைப் பற்றி நானும் அவரும் பேசுவதே இல்லை. எங்களை ஒதுக்கியவர்களின் முன்பாக தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்கிற துடிப்பு அதிகமானது. அதைப் புரிந்துகொண்ட கணவரும் எனக்குத் தோழனாக நின்று தோள்கொடுத்தார். நகரத்திலேயே சிறந்த பள்ளியில் எங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம். ஓரளவுக்கு வசதியுடனும் வாழ்கிறோம்.

மகிழ்வும் நெகிழ்வுமாக நகர்ந்த எங்கள் வாழ்வின் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை. இடி இறங்கிய பனைமரமாகப் பற்றி எரிகிறது எங்கள் இல்லறம். எதிரில் வருபவள் ரம்பையாகவே இருந்தாலும்... என்னைத் தவிர வேறு யாரையுமே ஏறெடுத்தும் பார்க்காதவரின் நடத்தையில் மாற்றம் தெரிவதை உணர்ந்தேன். என் கணவரைப்பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேச்சுகள் அடிபட்டபோதும், அவரை நான் முழுமையாக நம்பினேன். ஆனால், என் கண்ணால் கண்டபிறகு துடித்துப் போனேன். எங்கள் தெருவில் வசிக்கிற கைம்பெண் ஒருத்தியுடன் என் கணவருக்கு ஏற்பட்டிருக்கும் தொடர்பு, என்னை அணுவணுவாக சாகடிக்கிறது.

என் டைரி - 299

எந்தத் தீய பழக்கமும் இல்லாத என் கணவர், அந்தப் பெண்ணின் சகவாசத்தால் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதும், குழந்தைகள் எதிரில் சண்டை போடுவதுமாக இருந்தார். பொறுமையாக சொல்லிப் பார்த்தேன்... கோபமாக சண்டை போட்டேன். எதற்கும் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் கேள்வி கேட்கிறேன் என்றதுமே நள்ளிரவு வரை அப்பெண்ணின் வீட்டிலேயே கழித்துவிட்டு, ஊரடங்கிய பிறகு வீடு திரும்பியவர், ஒரு கட்டத்தில் அவளுடைய வீட்டிலேயே நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்.

வீட்டுக்காகவோ... பிள்ளைகளுக்காகவோ ஒரு ரூபாயைக்கூட செலவு செய்வதில்லை. பிள்ளைகளின் படிப்புக்கு பங்கம் வந்துவிடுமோ என்று என் நகைகளை அடகு வைத்து சமாளித்தேன். இப்போது கணவனும் இல்லாமல் வாழ்க்கை மீது பிடிப்பும் இல்லாமல் இருக்கிறேன். பெற்றோர் நிச்சயித்த திருமணமாக இருந்திருந்தால்... பெரியவர்களின் துணையை நாடியிருக்கலாம். இப்போது போக்கிடம் ஏதும் இல்லாமல் தவிக்கிறேன். என் கணவரையும் வாழ்வையும் எப்படி மீட்டுக்கொள்வது..? வழி சொல்லுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 298ன் சுருக்கம்

''40 வயதாகும் எனக்கு, கல்லூரி செல்லும் மகன் இருக்கிறான். ஆனால், ஆரம்பம் முதலே என் கணவனுடனான வாழ்க்கை நரக வாழ்க்கையாகி கிடக்கிறது. திருட்டு, குடிப்பழக்கம் போன்றவற்றுக்கு ஆளான அந்தக் கயவனுடன் சகித்துக்கொண்டு குடும்பம் நடத்தினேன். குழந்தைக்கு நல்ல தகப்பனாகவும் அவன் ஒருநாளும் இருந்ததில்லை.

திடீரென்று அவன் வெளிநாட்டு வேலைக்குப் போய்விட, என் மகனுக்கு கம்யூனிட்டி சர்டிஃபிகேட் வாங்குவது உள்ளிட்ட வேலைகளை எனக்காக செய்து கொடுத்த என் சித்தப்பா மகனையும், என்னையும் சந்தேகப்பட்டான். பிறந்த வீட்டுக்கு விஷயம் தெரியவர... விவாகரத்து வாங்கிக்கொடுத்தனர். இந்நிலையில், என் மகனை என்னிடமிருந்து பிரிப்பதாக சபதம் போட்டவன், புத்தாடை, பைக், செலவுக்கு காசு என்று கொடுத்து அவனை தன் பக்கம் இழுத்துவிட்டான். மொத்தத்தில் தன்னைப் போலவே மகனையும் சீரழித்து வருகிறான். என் பிள்ளையை எப்படி மீட்பது?''

என் டைரி - 299

வாசகிகள் ரியாக்ஷன்...  ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 299

100

வைரத்தால் அறுக்க வேண்டும்!

தும்பை விட்டு வாலைப் பிடிக்க பார்க்கிறீர்களே! அப்பாவைப் பற்றி குழந்தைக்கு எச்சரிக்க வேண்டாமா? பையனுக்கு அப்பா முதலில் சலுகை கொடுத்தபோதே 'கட்’ பண்ணி இருக்க வேண்டும். சரி இருக்கட்டும்... உன் உடன்பிறந்தவரின் உதவியோடு உன் மகனுக்கு அறிவுரை கூறி திருத்தப் பார். வேலைக்குச் சென்றுவிட்டான் என்றால் திருமணம் செய்யுங்கள். வருபவள் திருத்திவிடுவாள். வைரத்தை வைரத்தால்தான் அறுக்க வேண்டும். உங்கள் சம்பாத்தியம்தான் உங்களுக்கு கடைசிவரை துணை. அதை யாரிடமும் இழக்காதீர்கள்.

- எஸ்.மீனா, ஸ்ரீரங்கம்

பெற்றால்தான் பிள்ளையா?

'எப்படி மீட்டெடுப்பேன் என் பிள்ளையை அந்தக் கயவனிடமிருந்து...’ என்று ஏங்க வேண்டாம் இன்று அந்தப் பிள்ளை ஒரு பேயன் வளர்க்கும் குட்டிப் பேய். தப்பித்தவறி நீ மீட்டெடுத்து வந்தாலும் அவன் உன் பிள்ளையாய் இருக்கமாட்டான்; பிள்ளைப் பூச்சியாய் அரித்துவிடுவான். இன்று அவன் ருசி கண்ட பூனை, அவன் உன் அருகில் இருந்தால், உன் மிச்சமுள்ள வாழ்க்கையும் பாழாகிவிடும். எனவே, அவனை மறந்துவிடு. பிள்ளை என்ற நினைப்பைத் துறந்துவிடு.

உன் கவனத்தை ஆன்மிக வழியில் செலவிடு, தினமும் ஆலயம் சென்று ஆண்டவனை வழிபடு. எத்தனையோ அநாதை இல்லங்கள் உள்ளன. அங்கே அறியா பாலகர்கள் முதல், அறிந்த சற்று வளர்ந்த பாலகர்கள்... ஏன், பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்குப் பணிவிடை செய். உன் பிள்ளை அம்மா என்றழைப்பதை விட ஒரு நூறு பிள்ளைகள் உன்னை 'அன்னையே’ என்று அழைப்பதைக் கேட்டு உளம் மகிழலாம். பெற்றால்தான் பிள்ளை என்பதில்லை.

- சங்கீதா என்.ஸ்ரீதர், பெங்களூரு