மகனுக்கு ஒரு நீதி... மகளுக்கு ஒரு நீதியா?ரீடர்ஸ்
##~## |
அந்தக் காலத்திலேயே 'ஒன்றே போதும்’ என்று ஒற்றைப் பிள்ளையாகப் பெற்று, ராணி மாதிரி வளர்த்த என் பெற்றோருக்கு... தற்போது 85 வயதுக்கு மேல். இத்தனை காலம் தங்கள் பாட்டை தாங்களே பார்த்துக் கொண்டவர்களுக்கு, வயோதிகத்தினால் உடல் வலுவிழந்து, அடுத்தவரை சார்ந்திருக்க வேண்டிய கட்டாய நிலை. ஒரே மகளான நான், பெற்றோரை என்னுடனேயே வைத்துக் கொண்டுவிட்டேன்.
கணவர் வீட்டில் அவர் ஒரே ஆண் பிள்ளை. இரண்டு நாத்தனார்கள். ஒரே மகன் என்பதால், அவருடைய பெற்றோரையும் நாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஆனால், வெளியூரில் இருக்கும் அவர்கள்... ஊரையும், சொந்த வீட்டையும் விட்டு வர மனம் இல்லாமல், அங்கேயே இருக்கிறார்கள். மாதம் தவறாமல், குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு அனுப்புவது, அடிக்கடி போய் பார்ப்பது, தேவையானவற்றை செய்து கொடுப்பது என்று நாங்கள் அக்கறையாகவே இருக்கிறோம்.

இந்தச் சூழலில்... கணவரின் உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும், ''கொடுமையைப் பாரு. மாமனார், மாமியாரை இவன்கூட வெச்சுருக்கான். ஆனா, பெத்த அம்மா, அப்பாவை ஊருல விட்டிருக்கான். எல்லாம் அவன் பொண்டாட்டியோட வேலை'' என்று என்னையும் அவரையும் சிலகாலமாக பழிக்கத் தொடங்கியுள்ளனர். இதுபோதாதுஎன்று 'படித்த’ என் நாத்தனார்களும், ''அண்ணன் வீடுனு அடிக்கடி நாங்க வந்து போக முடியுதா? எங்க அண்ணிதான் அவங்களோட அம்மா, அப்பாவை கொண்டுட்டு வந்து நடுமனையில வெச்சுருக்காங்களே...'' என்று அனைவரிடமும் என்னைக் குறைசொல்லி பேசுகிறார்கள். பஞ்ச மாபாதகம் செய்துவிட்டது போல இகழ்கிறார்கள்!
இதில் வேதனை என்னவென்றால், என் அப்பா, அம்மா என் வீட்டுக்கு வரும் வரை... என் மாமியார், மாமனார் ஊரில் இருப்பதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. என் பெற்றோரை நான் வீட்டுக்கு அழைத்து வந்த பின்னரே, ''ஐயோ பாவம்... இப்படி ஊருல தனியா கிடக்கறாங்களே'' என்று 'பரிதாப'ப்படுகிறார்கள். என் மாமியார், மாமனாருக்கு சொந்த ஊரை, வீட்டை விட்டு எங்களுடன் வந்து தங்க விருப்பமில்லை என்பது தெரிந்திருந்தும்... 'வெறும் வாய்க்கு அவல்' என்கிற கதையாக புலம்புகிறார்கள்.
மகன்கள் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும் என்பது நம்முடைய சமுதாய கட்டமைப்பு. மகன்கள் இல்லாமலிருந்தால்... மகள்களுக்கு அந்தப் பொறுப்பு, கடமை எல்லாம் உண்டா... இல்லையா... என்பதே சரிவர இங்கே வரையறுக்கப்படவில்லை. அதிலும், ஒரே மகளாக இருக்கும்போது, நான்தானே பெற்றோரை பராமரித்தாக வேண்டும். இது ஏன் இந்த சமுதாயத்துக்குப் புரியவில்லை?
இந்தத் தவறான சமுதாய கட்டமைப்புக்கு என்ன தீர்வு தோழிகளே?!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 299ன் சுருக்கம்
''யாருடைய சம்மதமும் இல்லாமல் நடைபெற்ற காதல் திருமணம் எங்களுடையது. எங்களை வெறுத்தவர்கள் முன்பாக கைகோத்து தலைநிமிர்ந்தோம். இரண்டு பெண் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த சூழலில்... எல்லாமே தலைகீழாகிவிட்டது. மற்ற பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத என்னவருக்கு, கைம்பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. பொறுமையாகப் பேசி, சண்டையிட்டு... என எல்லாவற்றையும் செய்துபார்த்தும் பலனில்லை. எதிர்விளைவாக, நிரந்தரமாக அங்கேயே தங்கிவிட்டார். நகைகளை அடகு வைத்து, பிள்ளைகளை கவனித்து வருகிறேன். பெற்றவர்கள் பார்த்து வைத்த திருமணமாக இருந்தால், பெரியவர்களின் உதவியை நாடி இருப்பேன். அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. என் கணவரை மீட்டெடுக்க வழிகாட்டுங்கள் தோழிகளே...'
வாசகிகள் ரியாக்ஷன்... ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
நீதிமன்றத்தை நாடு!
இதுவரை எப்படியோ... இனியாவது உன் பெற்றோரைச் சந்தித்து, அவர்களின் உதவியை நாடத் தயங்காதே! உடனடியாக அவர்கள் உன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்து விடாதே. நம்பிக்கையுடன் அணுகு. எந்த பெற்றோரும் தன் மகள் துக்கத்தில் இருக்கும்போது கைகொடுக்கத் தவற மாட்டார்கள். பெரியவர்கள் பேசினால், உன் கணவர் திருந்தக்கூடும். அப்படியும் உன் கணவர் மசியவில்லை என்றால், தயங்காமல் பெண்கள் அமைப்பு, நீதிமன்றம் என அத்தனையும் நாடு. உன் கணவரின் அலுவலக மேலதிகாரியிடமும் புகார் செய். அழுது கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது. தன்னம்பிக்கையுடன் செயல்படு. ஆல் தி பெஸ்ட்.
- சாந்தி சூரியமூர்த்தி, சென்னை-73
மணவிலக்கு பெறு!
உங்களையே வேண்டாம் என்றுதான் ஒதுக்கித் தள்ளிவிட்டு, வேறொருத்தியுடன் இருக்கிறார். அப்படிப்பட்டவருக்காக ஏன் ஏங்குகிறீர்கள்? அத்தனைபேரையும் எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டபோது இருந்த தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் இப்போது எங்கே போயிற்று தோழி? நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து மணவிலக்கு பெறுவதோடு... உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்குமான தேவைக்காக ஜீவனாம்சம் பெறுவதை முதலில் செய்யுங்கள். கூடவே, உங்கள் படிப்புக்கேற்ற வேலை ஒன்றை தேடிக்கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு தெரிந்த கலைகளை, கைத்தொழில்களாக்கி, பொருள் ஈட்ட முயலுங்கள். நம்பிக்கையை மட்டும் எப்போதும் இழக்காதீர்கள். எல்லாம் நன்றாகவே நடக்கும்!
- ஆர்.உமாஈஸ்வரி, பெரம்பலூர்