மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 301

ரீடர்ஸ்

என் டைரி - 301
##~##

சுயமாக முடிவு எடுக்கத் தெரியாமல், எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்ததினால் வந்த விளைவுகளால் சிதைந்திருக்கும் பெண் நான்.

பாசமான அம்மா - அப்பாவின் அன்பில் நனைந்து வளர்ந்தேன். பதின்பருவத்தில் காதல் வந்தபோது, வீட்டில் பெற்றோர் எதிர்த்தார்கள். அப்போது... 'அம்மா, அப்பாவை சமாதானப்படுத்தி திருமணம் முடித்துக்கொள்ள வழியிருக்கிறதா', 'இந்தத் துணை நம்மை இறுதிவரை இதே அன்போடு பார்த்துக் கொள்வாரா', 'நம் படிப்பும் எதிர்கால வாழ்க்கையும் இந்த காதல் திருமணத்தால் பாதிக்கப்படாமல் இருக்குமா?' என்றெல்லாம் எந்த பக்குவ சிந்தனையும் இல்லை எனக்கு. ''நீ வீட்டை விட்டுப் போய் அவரை கல்யாணம் பண்ணிக்கோ'' என்று தோழிகள் உசுப்பேற்ற, எந்த மாற்றுச் சிந்தனையும் இல்லாமல் அப்படியே செய்தேன்.

காதல் திருமண வாழ்க்கை ஓரிரண்டு ஆண்டுகளுக்கு நன்றாகக் கழிந்தன. அதற்குப் பின் இருவருக்குள்ளும் சண்டைகள் வர ஆரம்பித்தது. எல்லா தம்பதிகளுக்கு இடையிலும் வரும் அதே சண்டைகள்தான். பேச்சோடு பேச்சாக, ''20 வருஷம் உன்னை பெத்து வளர்த்த உன் அம்மா, அப்பாவையே விட்டுட்டு என்னோட ஓடி வந்தவதானே நீ? வேற யாரையாச்சும் புதுசா, பெட்டரா பார்த்துட்டா, அவனோட நீ போகமாட்டேனு என்ன நிச்சயம்?'' என்று ஒரு தடவை அவர் கேட்டார். அந்த வார்த்தைகள் என் உயிரைச் சிதைத்தன. அதே தோழிகளிடம் சென்று அழுதேன். ''இதுக்கும் மேல நீ அவனோட வாழ வேண்டாம். அவனால கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு போய், ஒரு வேலையைப் பார்த்துக்கிட்டு வாழு. பொண்டாட்டி காணாமப் போயிட்டாங்கற அவமானம்தான், அவன் பேசின வார்த்தைக்கான தண்டனை'' என்று அறிவுரை தந்தாள் தோழி.

என் டைரி - 301

சாதாரண கணவன் - மனைவி சண்டைக்கு, ஆறுதல், சமாதானம் என்ற வாய்ப்புகளே தராமல், நேரடியாக பிரிவைப் பரிந்துரைத்த அந்த தோழியின் முட்டாள்தனத்தை வேதவாக்காக எடுத்து, இம்முறையும் தவறு செய்தேன். அவரிடம் சொல்லாமலே வீட்டை விட்டுச் சென்றேன். அப்போதும், 'எவன்கூடவோ போயிட்டா’ என்றுதான் என்னை ஏசுவார் என்று நினைத்தேன். சில வருடங்களுக்குப் பின், ''உன் கணவர் தவிச்சுப்போய் உன்னை எங்க எல்லாம் தேடினார் தெரியுமா..?'' என்று தெரிந்தவர் ஒருவர் மூலமாக அறிந்தபோது, 'தவறு செய்துவிட்டோமோ' என்று தவித்தேன். மேலும், அவரை பிரியச் சொன்ன தோழிகள், பிரிந்த பின் எனக்கு எந்த ஒரு உதவிக்கோ, ஆறுதலுக்கோகூட இல்லை என்பதையும் உணர்ந்தேன்.

பதினோரு ஆண்டுகளுக்குப் பின் அவரை எதேச்சையாக மீண்டும் சந்தித்தேன். சகஜமாக, நண்பர்களைப்போல இருவரும் பேசிக்கொண்டோம். தொலைபேசி எண்கள் பரிமாறிக் கொண்டோம். ''செய்த தவறுக்காக நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டுமோ..?'' என்று என் அலுவலக சீனியர் ஒருவரிடம் புலம்ப, ''ஏன், அவர் மன்னிப்புக் கேட்கட்டுமே'' என்றார் என் ஈகோவை தூண்டுபவராக! இத்தனை பட்டும், இப்போதும் என் மதி... சுயமிழந்து, பிறர் சொல்லே கேட்டது. அடுத்த சில நாட்களில், அவர் இறந்துவிட்டதாக தகவல் வந்தது!

'எல்லாம் முடிந்துவிட்டது. தோழிகள் ஆயிரம் சொல்வார்கள். ஆனால், நமக்குஎங்கே போயிற்று புத்தி. வாழ்க்கையை வாழத் தெரியாமல் தவறவிட்ட குற்றவாளியாகிவிட்டோமே' என்று என்னை நானே சபித்துக்கொண்டு, நடைபிணமாக வாழ்கிறேன். என்ன பிராயச்சித்தம் எனக்கு?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 301

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

 என் டைரி 300ன் சுருக்கம்

''வீட்டில் நான் ஒரே பிள்ளை. கணவர் வீட்டிலும் அவர் ஒரே ஆண், இரண்டு நாத்தனார்கள். வேலை நிமித்தமாக நகரத்திலேயே நாங்கள் குடியிருக்கிறோம். என் பெற்றோருக்கு இப்போது 85 வயதை தாண்டிவிட்டது. அவர்களுக்கு வேறு யாரும் இல்லை என்பதாலும், வயோதிகம் காரணமாகவும் என்னுடன் தங்க வைத்திருக்கிறேன். கணவரின் பெற்றோர், சொந்த ஊரை விட்டு வர மறுத்துவிட்டனர். மாதம் தவறாமல் குறிப்பிட்ட தொகையை அனுப்புவது, தேவையானவற்றை செய்து கொடுப்பது என அவர்களின் மீதும் அக்கறையாகவே இருக்கிறோம்.

நிலைமை இப்படியிருக்க, கணவரின் உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர், 'அம்மா, அப்பாவை ஊருல விட்டுட்டு... மாமனார், மாமியாரை கூட வெச்சுருக்கான்’ என்று பேசுவதோடு இல்லாதது, பொல்லாததையெல்லாம் பேசுகிறார்கள். மகன்கள் பெற்றோரை பராமரிக்க வேண்டும் என்பது நம் சமூக கட்டமைப்புதான். 'மகன்கள் இல்லாமலிருந்தால்... மகள்களுக்கு அந்த பொறுப்பு, கடமை எல்லாம் உண்டா... இல்லையா?' என்பது இங்கே வரையறுக்கப்படவில்லை. அதிலும் ஒரே மகளான நான்தான் என் பெற்றோரை பராமரிக்க வேண்டும். இதைப் புரிந்து கொள்ளாத தவறான இந்த சமுதாய கட்டமைப்புக்கு என்ன தீர்வு தோழிகளே?''

வாசகிகள் ரியாக்ஷன்                                                    ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 301

100

எல்லையைப் புரிய வையுங்கள்!

'வாய் புளித்ததோ.... மாங்காய் புளித்ததோ’ என்று ஊரார் ஆயிரம் பேசுவார்கள். அதையெல்லாம் பற்றிக் கவலைப்பட்டால், நம்முடைய நேரம்தான் விரயமாகும்! தகப்பனும், மகனும் கழுதையோடு சந்தைக்குப் போனபோது ஊரில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்ல, அதைக் கடைப்பிடிக்க முயன்று, நொந்து 'நூடுல்ஸ்’ ஆன கதையாகத்தான் முடியும்! உங்கள் கணவரே... மாமனார், மாமியார் கூடவே இருப்பதை ஆட்சேபிக்கவில்லை. பிறகு, ஏன் நீங்கள் கலங்க வேண்டும்? அமைதியாகவே இருந்து, குறை கூறுபவர்களுக்கு அவர்களுடைய எல்லையைப் புரிய வையுங்கள்.''

- என்.சாந்தினி, மதுரை

பழகினாலே விலகிவிடும்!

ன்பு தோழியே! உன் பிரச்னை இன்று பலப்பல பெண்களுக்கும் உண்டு. என்றாலும் ஊர் வாயை மூட முடியாது. ஆனால், உன் நெருக்கமானவர்களின் வாயை மூடும் பூட்டு... உன் மாமனார் - மாமியாரிடமே உள்ளது. அவர்களை அவ்வப்போது உன் இல்லத்துக்கு அழைத்து, சில நாட்கள் தங்கச் செய்து,  உன் பெற்றோரைக் கவனிப்பது போலவே அவர்களையும் கவனித்து, உன் பெற்றோரையும் அவர்களுடன் சகஜமாக மனம் விட்டு பேசி பழக வைக்க வேண்டும். அவர்கள் நால்வரும் பரஸ்பரம் அன்பாகவும், ஆதரவாகவும் பேசி பழகினாலே... உன் பிரச்னை பாதி குறைந்துவிடும். அவர்களும் உன் வயதான பெற்றோர் மேல் கருணை கொண்டு, அவர்களுக்கு உன் ஆதரவு தேவை என்பதை ஆதரிப்பார்கள். தங்கள் மகள்களுக்கும் (உன் நாத்தனார்களுக்குத்தான்) புரிய வைப்பார்கள். உறவுகள் குறைந்து வரும் இக்காலத்தில், அதை அதிகரிக்க இந்த முயற்சி அடிகோலும்!

- ஜம்பகலட்சுமி, கிழக்கு தாம்பரம்