இடையில் புகுந்த ஒருத்தி!ரீடர்ஸ்
##~## |
ஒண்ட வந்த பிடாரி... ஊர் பிடாரியை விரட்டிய கதைதான் என்னுடையது!
பெற்றோர் இன்றி, அண்ணன் வளர்ப்பில் வளர்ந்த நான், கணவர் என்கிற உறவால், இழந்த அத்தனை உறவுகளையும் அன்பையும் பெறக் காத்திருந்தேன். திருமணம் முடிந்தபோது, நினைத்தது போலவே அன்பான கணவர் கிடைத்ததில் நிறைந்தது வாழ்க்கை. ஆனால், குழந்தை பாக்கியம் தள்ளிப்போனதில், இந்த எட்டு வருடங்களாக எங்களுக்குள் பெரிய இடைவெளி.

திருமணமான இரண்டாம் வருடத்தில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை இறந்து போனதும், வாழ்வின் வசந்தங்களும் வடியத் தொடங்கின. நானும் அவரும் சேர்ந்து குழந்தைக்காக ஏங்கியதில் சில வருடங்கள் கழிய, அந்த விரக்தியில் எங்களுக்குள் இருந்த அந்யோன்யம் உலர்ந்தது, வெறுப்பு வளர்ந்தது. இந்த நேரத்தில்தான், 'தூரத்து உறவு' என்கிற பெயரில் வந்து சேர்ந்தாள் அவள். தன் கணவரிடம் சண்டையிட்டு பிரிந்து வந்தவளுக்கு அடைக்கலம் கொடுத்து, எங்கள் வீட்டில் தங்க வைத்தார்கள் கணவரும் மாமியாரும்.
அதுவரை என்னுடன் சண்டை போட்டுக் கொண்டு, இரவு நெடுநேரம் கழித்து வீடு திரும்புவது, ஞாயிறுகூட 'அலுவலக வேலை' என்று செல்வது என்றிருந்த கணவரின் போக்கில், அவள் வருகைக்குப் பின் அதிக மாற்றங்கள். குட்டி போட்ட பூனை போல வீட்டையே சுற்றி வந்தார். அவள் எதிரிலேயே என்னைத் திட்டுவது, அலட்சியப்படுத்துவது என்று அவரும், மாமியாரும் படுத்தியெடுக்க... அவள் கடுகளவும் என்னை மதிப்பதில்லை.
நிலைமை இப்படியே போனால், நம் வாழ்க்கை பறிபோகுமோ என்கிற பயத்தில், அப்பெண்ணின் கணவரிடம் சென்று சமாதானம் பேசி அவளை சேர்த்து வைக்க எண்ணினேன். 'அந்த ஓடுகாலியைப் பற்றி இங்க பேசாதீங்க’ என்று திருப்பிவிட்டனர். இது தெரிந்து, அவள் கண் எதிரேயே என் தலைமுடியை பிடித்து இழுத்து வீட்டுக்கு வெளியே தள்ளி, 'எவனைப் போய் பார்த்துட்டு வர்றே?’ என்று கேவலப்படுத்தினர் கணவரும் மாமியாரும்.
குடும்ப மானத்தை நினைத்து காவல் நிலையம் செல்ல விரும்பாத நான், பெற்றோர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளேன். இனி என்னவாகும் என் வாழ்க்கை?!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 301ன் சுருக்கம்
''வீட்டை எதிர்த்துக் கொண்டு, தோழிகளின் துணையோடு காதல் திருமணம் செய்தவள் நான். ஓரிரு ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே பிரச்னைகள் எழ... தோழிகளின் அறிவுரைப்படி அவரை விட்டுப் பிரிந்துவிட்டேன். ஒருகட்டத்தில், என் கணவர் என்னைத் தேடி அலைந்தார் என்கிற தகவல் தெரியவந்ததும் வருத்தப்பட்டேன். எதேச்சையாக ஒரு முறை அவரைச் சந்தித்தேன். 'மன்னிப்பு கேட்டிருக்க வேண்டுமோ?' என்று என்னுள் எழுந்த கேள்விக்கு... 'ஏன் அவர் முதலில் கேட்கட்டுமே' என்று என் ஈகோவை தூண்டினார் ஒரு தோழி. அடுத்த சில நாட்களில் கணவர் இறந்த தகவல்தான் கிடைத்தது.
எல்லாம் முடிந்துவிட்டது... 'தோழிகள் ஆயிரம் சொல்வார்கள். நம் புத்தி எங்கே போயிற்று' என்று என்னையே நொந்து கொண்டு நடைபிணமாக வாழ்கிறேன். என்ன பிராயச்சித்தம் எனக்கு?''
வாசகிகள் ரியாக்ஷன் ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
வாழ்க்கை வசந்தமாகும்!
'உன் வாழ்க்கை உன் கையில்’ என்பது பழமொழி. நீயோ மற்றவரின் ஆலோசனையைக் கேட்டே வாழ்வை தொலைத்திருக்கிறாய். பெற்றோர், பிள்ளைகளின் நல்வாழ்க்கைக்குத்தான் அடித்தளமிடுவார்கள். தோழிகளோ, காதல் திருமணம் என்கிற பெயரில் பாழுங்கிணற்றுக்குள் தள்ளிவிட்டிருக்கிறார்கள். அதன்பிறகாவது நீ உலகத்தை உணர்ந்து, சகிப்புத்தன்மையுடன் வாழப் பழகியிருக்கலாம். ஆனால், அப்போதும் உனக்கு பிரிந்து செல்லவே வழிகாட்டியிருக்கிறார்கள் தோழிகள். இனி, மனைவியை இழந்த... உன்னுடைய வயதையொத்த நல்ல மனிதர் யாராவது கிடைத்தால்... அவரை மணம்புரிய முயற்சி செய். கூடவே, சுயபுத்தியோடு வாழ்க்கையைத் துவக்கு. எல்லாம் வசந்தமாகும்!
- டி.ஜெயசீலி, கோவை
பிராயசித்தம் தேடு!
கடந்த கால வாழ்க்கையை நினைத்து, நிகழ்கால, எதிர்கால வாழ்க்கையை பாழாக்காமல், இனி வரும் நாட்களில் சுயமாக சிந்தித்து, ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இறைவனின் நாமத்தைச் சொல். முடிந்தவரை உன்னால் ஆன உதவிகளை மற்றவர்களுக்கு செய். மனதுக்கு தானாக நிம்மதி கிடைக்கும்! இதுதான் உனக்கு, உன் மனசாட்சிக்கு பிராயசித்தம்!
- பி.பாக்யலஷ்மி, சென்னை-40
தண்டனையை ஏற்றுக் கொள்ளுங்கள்!
உங்கள் கணவர் சொன்ன சொல்லைவிட, தாங்கள் செய்த செயல் மிகவும் தவறானது. உலகம் ஆயிரம் சொல்லும்... சிந்தித்து செயல்படும் அறிவு நம்மிடம்தானே இருக்க வேண்டும். தவறை மட்டுமே திரும்பத் திரும்ப செய்து, அதற்குக் காரணம் தோழிகள் என்று இன்னும்கூட பழி போடுவதிலிருந்தே தெரிகிறது... நீங்கள் இன்னும் திருந்தவில்லை என்பது. நானும் என் வாழ்வில் சில தவறுகளை செய்து உள்ளேன். அதற்காக இன்றும் தண்டனைகளை ஏற்றுகொண்டு வருகிறேன். உங்களுக்கு மட்டும் இல்லை... நம்நாட்டு பெண்கள் அனைவருக்குமே ஒரு வேண்டுகோள். நீங்கள் செய்யும் தவறுக்கு வேறு யாரையும் குறை சொல்லாதீர்கள். அனைத்து செயல்களுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு. செய்த தவறுக்கு தண்டனை ஏற்றுக்கொள்ளுங்கள். கணவரிடம் சுதந்திரத்தை எதிர்பாருங்கள்... ஆனால், தலை ஆட்டும் பொம்மையாக அவர் மாறவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்!
- லக்ஷ்மி பாலாஜி, விகடன்.காம் மூலமாக...