நட்பு வட்டம்... தந்த நஷ்டம்! ரீடர்ஸ்
##~## |
கல்லூரியில் என் வகுப்புத் தோழி அவள். நான் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி. அவள், பார்டரில் பாஸ் செய்பவள். தோற்றத்திலும் நான் அழகு. அவள் சுமார். இதுபோன்ற காரணங்களால்... அவளுக்கு என் மேல் அதிக பொறாமை. இதைக் கண்கூடாகவே அறிந்திருந்தாலும், பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை நான்.
திருமணம், குழந்தைகள் என்றான பிறகு, காலப்போக்கில் அவளை மறந்தும் போனேன். சமீபத்தில், 'ஃபேஸ்புக்'கில் நான் நுழைய... அவளிடமிருந்து 'நட்பு கோரிக்கை' வந்தது 'அட, நம்ம கிளாஸ் மேட்’ என்று இணைத்துக் கொண் டேன். அதன் பிறகுதான் ஆரம்பித்தது கலகமே..!
காதல் திருமணம், அழகான கணவர், பணக்கார வீட்டு மருமகள், பெரிய பள்ளியில் படிக்கும் குழந்தைகள்... என்று அவள் தன் நிகழ்காலத்தை 'சாட்’ மூலமாக என்னிடம் பகிர்ந்து கொண்டாள். வசதி குறைவாக இருந்தாலும்... அன்பான கணவர், இரண்டு குழந்தைகள் என நிறைவான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த எனக்கு, அவளுக்குக் கிடைத்திருக்கும் வசதியான வாழ்க்கை மெள்ள உறுத்த ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக தாழ்வு மனப்பான்மைக்கு இழுத்துச் சென்றுவிட்டது.
'படிப்பு, அழகு, திறமை என அனைத்திலும் நம்மைவிட குறைவானவள், இன்று வசதியாக இருக்கிறாள். ஒரு காலத்தில் அவள் பொறாமைப்படும்படி இருந்த நாம், இன்று எல்லாவிதங்களிலும் அவளுக்கு கீழ் நிலைமையில் இருக்கிறோம்' என்கிற எண்ணம் வாட்டி வதைக்கிறது. பங்களா, கார் என்ற பின்புலத்தில் அவள் அப்டேட் செய்யும் புகைப்படங்களும், 'இந்த சம்மர் லீவுக்கு குடும்பத்தோட சிங்கப்பூர் போறோம்’ என்று அவள் போடும் போஸ்ட்களும் என்னை அதிகமாக தொந்தரவு செய்கின்றன.

'இப்ப சந்தோஷமா இருக்கிற நீ, எதுக்காக அவளோட உன்னை ஒப்பிடுறே?’ என்று என் அறிவு சமாதானம் சொன்னாலும், மனது ஏற்க மறுக்கிறது. 'பேஸ்புக்'கை திறந்தாலே... அவள் என்ன போட்டோ, போஸ்ட் போட்டிருக்கிறாள் என்றுதான் தேடுகிறேன். எதுவும் போடாவிட்டால், கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. ஏதாவது இருந்தால், என் நிம்மதி காலி.
அவளை, 'ஃபேஸ்புக் நட்பு வளைய'த்திலிருந்து நீக்க நினைக்கிறேன். ஆனால், 'அவளைக் கண்டு நீ ஏன் ஒளிஞ்சு ஓடணும்?’ என்று வீம்பு செய்கிறது என் மனம். அதேசமயம் என் தாழ்வு மனப்பான்மையும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. பழையபடி நான் மாற, என்ன செய்ய தோழிகளே..?!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 302ன் சுருக்கம்
''அன்பான கணவர், அழகான வாழ்க்கை... ஆனால், எட்டு வருடங்களாக குழந்தை இல்லை. இந்த விரக்தியிலேயே எங்கள் உறவில் விரிசல். இந்நிலையில், எங்களை ஒரேயடியாக பிரிப்பதற்காகவே எங்கள் வீட்டில் தங்கியிருக்கிறாள், உறவுக்காரப் பெண் ஒருத்தி. கணவனை விட்டுப் பிரிந்து வந்திருக்கும் அவள் எதிரிலேயே என்னை அவமானப்படுத்துவது, திட்டுவது என்று படுத்தி எடுக்கிறார்கள் என் கணவரும், மாமியாரும். அந்தப் பெண்ணை, அவள் கணவருடன் சேர்த்து வைத்து, என் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நான் எடுத்த முயற்சிகள் வெளியில் தெரிய... அவள் எதிரிலேயே என்னை அடித்து கேவலப்படுத்திவிட்டார் என் கணவர். தற்போது, அண்ணன் வீட்டில், அபலையாக தஞ்சம் புகுந்துள்ள எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் தோழிகளே!'
வாசகிகள் ரியாக்ஷன் ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
புகார் கொடு!
குடும்ப மானத்தை நினைத்த நீங்கள், உங்கள் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய்க் கொண்டிருப்பதைக் கவனிக்க மறந்துவிட்டீர்களே! எத்தனை காலம் அண்ணன் வீட்டில் தங்கியிருக்க முடியும்? அவர்களுக்கு நீங்கள் பாரம் என்று தெரிவதற்கு முன்பாகவே விழித்துக் கொள்ளுங்கள். தைரியமாக காவல் நிலையம் சென்று கணவர் மீது புகார் செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் கணவர், மாமியாரின் கொட்டம் அடங்கும். ஒண்ட வந்த பிடாரியின் கதையும் முடிவுக்கு வரும்.
- குமாரி சுப்பிரமணியன், திருப்பத்தூர்
சொந்த காலில் நில்!
குழந்தை வரம் இல்லையென்றதுமே... ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முயற்சித்திருக்க வேண்டும். கணவரையும் உங்கள் பிடியில் இருந்து விட்டு விட்டீர்கள். எல்லாமே கைவிட்டுப் போன நிலையில் அதைப் பற்றி பேசி இனி பயன் இல்லை. வருத்தப்படுவதை தவிர்த்து, உங்களுக்கான மேற்படிப்போ அல்லது கைத்தொழிலோ கற்று, அதைக் கொண்டு பிஸினஸ் செய்ய முயற்சியுங்கள். அண்ணன் குடும்பம், உங்களை பாரம் என்று எண்ணாத அளவுக்கு அவர்களுக்கு உதவியாக இருங்கள்.
- ராஜி குருசாமி, சென்னை-88
புரியாவிட்டால், பாடம் புகட்டு!
'குழந்தை இல்லை' என்பது, ஏதோ 'பஞ்சமாபாதகம்' என்பது போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கும் இந்த சமூக அவலத்துக்கு நீயும் ஓர் எடுத்துக்காட்டு. குழந்தை பெற்றுக் கொள்ளாதவர்கள் மனிதர்களே இல்லை... குழந்தை பெற்றுக் கொண்டவர்கள்தான் மனிதர்கள் என்பதுபோல இங்கே பலவித கற்பிதங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஒரு பெண்ணுக்கு குழந்தை உருவாவதும்... உருவாகாமல் போவதும் இயற்கையின் செயல்பாடே... இதில் மனிதனின் பங்கு என்ன? பிறகு, எதற்காக குழந்தை இல்லை என்பதை நினைத்து பெரிதாக ஏங்க வேண்டும்... அதற்காக தத்து உள்ளிட்ட பல்வேறு எண்ணங்களுடன் வீணாக மனதைப் போட்டு எதற்காக குழப்ப வேண்டும்.
ஊர் ஆயிரம் பேசும்... ஆனால், நீ ஓய்ந்துகிடந்தால்... ஒருவேளை டீயைக் கூட அந்த ஊர் வாங்கித் தராது. பிறகு எதற்காக ஊர் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். உனக்கு நீ... எனக்கு நான் என்று வாழ்ந்து முடிப்பதுதான் புத்திசாலித்தனம். இதை, முதலில் நீ நன்றாக புரிந்து கொள். பிறகு, உன் உறவு அல்லது அவருடைய நட்பு வட்டம் மூலமாக அவருக்கும் புரியவை. புரிந்து கொண்டால்... புத்திசாலித்தனம். இல்லையேல், விட்டு 'விடுதலை'யாகி, ஏதாவது தொண்டு நிறுவனத்தில் ஐக்கியமாகு. கூடவே, இத்தகைய கொடுமைக்கு துணை நின்ற உன் கணவனுக்கு சட்டரீதியிலும் பாடம் புகட்டத் தவறிவிடாதே!
- மனோரஞ்சிதம், கும்பகோணம்