சதிராட்டம் போடும் சதிகார உறவுகள்!ரீடர்ஸ்
##~## |
விவரம் தெரியாத வயதில், தந்தையையும்... விவரம் தெரிந்த வயதில் தாயையும் பறி கொடுத்தவள் நான். சித்திதான் வளர்த்து, திருமணம் முடித்து வைத்தார். புகுந்த வீடு வசதியானது. கணவர், மாமனார், மாமியார், இரண்டு நாத்தனார்கள் என்று உறவுகள் வந்ததும், வாழ்க்கை மீதான நம்பிக்கை கூடியது. ஆனால், 'இப்படிப்பட்ட சதிகார உறவுகளுக்குப் பதில், உறவுகள் இல்லாமல் இருப்பதே நல்லது’ என்று இப்போது, என்னை அவர்கள் புலம்ப வைத்துவிட்டதுதான் வேதனை!
கணவரின் பெயரில் சொத்தை எழுதி வைத்துவிட்டார், அவருடைய தாத்தா. மகன் மற்றும் சொத்து இரண்டும் கைக்குள்ளேயே இருக்க, 'சொன்னதைக் கேட்கும் அடிமை மருமகள் வேண்டும்' என்று திட்டமிட்டு, கேட்க ஆளில்லாத அனாதை என்கிற நிலையில்இருந்த என்னை மணம் முடித்திருக்கிறார்கள். நாத்தனார்கள் இருவரும் பேராசிரியைகள். ஆனால், என் கணவர், டிப்ளமா மட்டுமே முடித்தவர். எப்போது பார்த்தாலும், 'உனக்கு ஒண்ணும் தெரியாது’ என்று மட்டம் தட்டி, அவருக்குள் தாழ்வு மனப் பான்மையை உருவாக்கிவிட்டனர் அவருடைய குடும்பத்தார்.

திருமணமாகி எட்டு ஆண்டுகள் உருண்டோடிய நிலையிலும், குழந்தையில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பவும் அனுமதிக்கவில்லை மாமியார். வேலைக்காரியைவிடக் கேவலமாக நடத்தியபோதும் பொறுத்துக்கொண்ட நான், எனக்கு குழந்தை பிறந்தால்... நாத்தனார்களுக்கு சொத்து கிடைக்காது என்கிற எண்ணத்தில், என் சிகிச்சையை அலட்சியம் செய்ததை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 'எங்களை டாக்டர்கிட்ட அனுப்புங்க’ என்று சண்டையிட்டேன். உஷாரானவர்கள், எங்களுக்கு இடையில் பிரச்னைகள் உருவாக்கி, பிரித்துவிட்டனர்.
பல மாதங்களுக்குப் பிறகு, உறவினரின் திருமணத்தில் கணவரைச் சந்தித்தபோது... மனம்விட்டுப் பேசி, மனக்கசப்புகள் நீங்கி ஒன்றாக சேர்ந்துவிட்டோம். 'சொத்துல பங்கு கிடையாது' என்று மிரட்டியபோதும்... 'சொத்தே வேண்டாம்... மனைவியுடன் வாழ்ந்தால் போதும்' என்றபடி வெளியே வந்துவிட்டார். என்னுடைய சீர் பாத்திரங்களை எடுத்து வர சென்றவரிடம், 'கல்யாணத்தப்போ போட்ட தாலியைக் கொடுத்துட்டு, பாத்திரங்களை எடுத்துட்டுப் போ’ என்றிருக்கிறார் மாமியார். உச்சகட்ட கொதிப்புக்குச் சென்ற கணவர், மாங்கல்யத்துடன் என் தாலி செயினை அவர்களிடம் கொடுத்துவிட்டார்.
மகன் உயிரோடு இருக்கும்போதே... மருமகளின் தாலியைப் பறித்துவிட்ட அந்தக் குடும்பத்துடன்... துளியும் ஒட்டுறவு தேவையில்லை என்று மொத்தமாக விலகி நிற்கிறோம். கடந்து வந்த கொடுமைகளை நினைத்தால் மனது ஆறவில்லை. எங்கள் சொத்துக்களை சட்டப்படி மீட்கவும், அவர்களை தைரியத்துடன் எதிர்கொள்ளவும் வழி சொல்லுங்கள் தோழிகளே!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 303ன் சுருக்கம்
''கல்லூரிக் கால தோழியுடன் சமீபத்தில் 'ஃபேஸ்புக்' மூலம் திரும்பவும் நட்பாடிக் கொண்டிருக்கிறேன். காதல் திருமணம் செய்திருக்கும் அவள்... அழகான கணவர், பணக்கார வீட்டு மருமகள், பெரிய பள்ளியில் படிக்கும் குழந்தைகள்... என்று தன் நிகழ்காலத்தை 'சாட்’ மூலம் பகிர்ந்து கொண்டே இருக்கிறாள். வசதி குறைவு என்றாலும், அன்பான கணவர், இரண்டு குழந்தைகள் என நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருபவள் நான். ஆனபோதிலும்... 'படிக்கின்ற காலத்தில் அழகு, திறமை, படிப்பு என அனைத்திலும் நாம்தான் முதலிடம். ஆனால், நம்மைவிட பல இடங்கள் பின்தங்கியிருந்தவளுக்கு... இப்படியரு வாழ்க்கையா?' என்று நினைத்து நினைத்து... தாழ்வு மனப்பான்மைக்குள் வீழ்ந்து கிடக்கிறேன். கார், சிங்கப்பூர் டூர் என்று அவள் செய்யும் போஸ்ட், போட்டோ போன்றவை அதிகமாகவே தொந்தரவு செய்கின்றன. இதன் காரணமாக, ஒரு கணம்... 'ஃபேஸ்புக்' நட்பு வட்டத்திலிருந்து அவளை நீக்க நினைக்கிறேன். மறுகணம், இன்றைக்கு என்ன போஸ்ட் செய்திருக்கிறாள் என்று தேடுகிறேன். பழையபடி நான் மாறுவதற்கு என்ன செய்யட்டும் தோழிகளே?''
வாசகிகள் ரியாக்ஷன் ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
தன்னாலேயே ஓடும் தாழ்வு மனப்பான்மை!
அன்பான கணவர், இரண்டு குழந்தைகள் என நிறைவான வாழ்க்கை என்று நீயே கூறுகிறாய். பிறகு, எங்கிருந்து உனக்குள் தாழ்வு மனப்பான்மை ஓடிவந்து ஓட்டிக் கொண்டது. உன்னுடைய நடவடிக்கைகளைப் பற்றி படிக்கும்போது... உண்மையில் நீ நிறைவான வாழ்க்கை வாழவில்லை என்றே தோன்றுகிறது. அப்படி நடித்துக் கொண்டிருக்கிறாய் என்பதே உண்மை. 'இருக்கின்ற களாக்காயே போதும்... கிடைக்காத பலாக்காய்க்கு தவம் இருக்கக் கூடாது' என்பதை முழுமையாக உணரும்போதுதான்... அது முழுமையான வாழ்க்கை. எனவே, முதலில் 'ஃபேஸ்புக்' உலகத்திலிருந்தே கொஞ்ச காலத்துக்கு முற்றாக நீ விலகு. ஸ்லோகங்கள் கற்பது, குழந்தைகளுடன் அருகில் இருக்கும் கோயில், பூங்கா, நூலகம் போன்ற இடங்களுக்கு செல்வது என்று மனதை உற்சாகமாக வைத்துக்கொள். தாழ்வு மனப்பான்மை, தன்னாலேயே ஓடிப்போய்விடும்.
- என்.பிருந்தா, திருவல்லிக்கேணி
நீயே பலியாகிவிடாதே!
ஏற்கெனவே உனக்குள் ஒளிந்து கொண்டிருந்த 'சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்’, தோழியின் வாழ்க்கையைப் பற்றிக் கேள்விப்பட்டதும் விழித்தெழுந்து, 'இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்' எனும் தாழ்வு மனப்பான்மைக்குள் உன்னைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. படிப்பு, அழகு, திறமை இவற்றில் முதலில் இருப்பதால் மட்டுமே, நல்வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. நம்முடைய வாழ்க்கை முறை, வாழ்க்கைச் சூழல் போன்றவற்றோடு... ஆண்டவனின் அருளும்தான் அதைத் தீர்மானிக்கின்றன. உன் தோழிபோலவே, உன் வாழ்க்கைத் தரமும் உயர்வதற்கு என்ன வழி என்று யோசி. அன்பான கணவருடன் பேசி, அதற்கான முயற்சிகளை எடு. தோழியின் வாழ்க்கையை, உன் வாழ்க்கை உயர்வதற்கான தூண்டுகோலாக மட்டுமே எடுத்துக்கொள். அதைவிடுத்து பொறாமையால் புழுங்கிக் கொண்டிருந்தால், உன் வாழ்க்கைதான் அதில் பலியாகும்... ஜாக்கிரதை!
- எம்.ஷஃபீனா ஹாஜா, விருகம்பாக்கம்