வசந்தம் வாய்க்குமா?ரீடர்ஸ்
##~## |
வாழ்க்கையில் எந்த சொந்தமும் உண்மையாக வாய்க்காமல் போன துரதிர்ஷ்டசாலி நான்!
இளவயதிலேயே அம்மா, அப்பாவை இழந்துவிட்டதால்... உறவினர் ஒருவரிடம்தான் நானும், அண்ணனும் வளர்ந்தோம். கடமைக்காக எங்களை வளர்த்த உறவுக்காரர், பொறுப்பைக் கழிக்க... அண்ணனுக்கு முதலில் திருமணம் முடித்தார். அடுத்து, தன் பொறுப்பைக் கழிக்க, எனக்கு திருமணத்தை நடத்தினார் அண்ணன்.
கணவருக்கு துபாயில் வேலை. அவருக்கு, என்னைவிட, நான் படித்திருந்த கம்ப்யூட்டர் படிப்பு மேல்தான் பிரியம். எனக்கும் அங்கேயே வேலை வாங்கிவிட்டால், நிறையவே சம்பாதிக்கலாம் என்பதுதான் காரணம்!
ஆனால், என்னை துபாய் அழைத்துச் செல்வதில் அவருடைய பெற்றோருக்கு விருப்பமில்லை. அவருடன் பிறந்த நான்கு சகோதரிகளுக்கும் வாழ்நாள் முழுக்க பணம் காய்க்கும் மரமாக அவர் இருக்க வேண்டும் என்கிற சுயநலம்தான் காரணம். நானும் கணவருடன் துபாய் சென்றுவிட்டால்... பணம் வருவது நின்றுவிடும் என்பதால், எங்களிடையே பிரச்னையை உருவாக்கி, அவரை மட்டும் தனியாக அனுப்பிவிட்டனர்.
குழந்தையுடன் மாமனார் வீட்டில் நான் தங்கியிருக்க... மாமியாரும், என் நாத்தனார்களும் என்னைப் படுத்திய கொடுமை, கொஞ்சநஞ்சமல்ல. 'கேட்க ஆளில்லாத அனாதை’ என்று பழித்துக் கொட்டினர். ஆரம்பத்தில் எனக்காக பரிந்துபேச அண்ணனும், அண்ணியும் வந்தனர். நாட்கள் செல்லச் செல்ல... 'உன் குடும்பப் பிரச்னையை நீயே பார்த்துக்கோ’ என்று ஒதுங்கிவிட்டனர். 'ஆளில்லாத அனாதை’ என்பது உண்மையாகிப் போக, அதன்பிறகு அடிமை வாழ்க்கைதான்.

ஒருகட்டத்தில், 'தனியாக வீடு பிடித்து தங்குகிறேன்' என்று கணவரிடம் அனுமதி வாங்கி, பள்ளியில் படிக்கும் குழந்தையுடன் தனியாக வாழ்கிறேன். மாதாமாதம் என்னவர் அனுப்பும் 60 ஆயிரம் ரூபாயில், எனக்கு மாதம் 2,000 ரூபாய் மட்டுமே தருவார் மாமனார். 'வசதியான வீட்டில் அடிமையாக இருப்பதைவிட, தனி வீட்டில் நிம்மதியாக இருக்கலாம்' என்று சகித்தபடி வாழ்க்கையை ஓட்டுகிறேன்.
'உள்ளூர்லயாச்சும் வேலைக்குப் போகலாமில்ல’ என்பது கணவரின் எண்ணம். எனக்கோ, நான் தவறவிட்ட தாய்ப்பாசத்தை என் குழந்தையும் தவற விடக்கூடாது என்கிற பரிதவிப்பு. இதனால் கணவருக்கு என் மேல் கோபம். விடுமுறைக்கு வரும்போதுகூட அம்மா வீட்டில்தான் தங்குகிறார். கடமைக்காக சில நாட்கள் எங்களுடன் இருக்கிறார்.
குழந்தைக்காக மட்டுமே அனைத்தையும் சகித்துக் கொண்டிருக்கும் என்னுடைய இந்த வாழ்க்கையில், இனியும் வசந்தத்துக்கு ஏதும் வழி கிடைக்குமா தோழிகளே..?!
- பெயர் வெளியிடாத விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 305ன் சுருக்கம்
''வசதியான குடும்பத்தின் செல்ல மகள் நான். படித்து முடித்ததும் அரசாங்க வேலையில் அமர்ந்தேன். குடும்பத்தார் கெஞ்சியும், மிரட்டியும்... திருமணத்துக்கு சம்மதிக்காமல் வேலை, சம்பளம், பதவி உயர்வு என்றே என் சிந்தனை சுழல... அவர்களும் அமைதியாகிவிட்டனர். ஆனால், 40 வயதைக் கடந்துவிட்ட நிலையில், என் சிந்தனைகள் தடம் மாறுகின்றன. இதுவரை எந்த ஆணிடமும் இல்லாத ஈர்ப்பை, என்னைவிட 6 வயது மூத்த, திருமணமாகாத என் நண்பரிடம் உணர்கிறேன். 'நாளைக்கு நம்மை பார்த்துக் கொள்ள வாரிசு வேண்டுமே’ என்கிற எண்ணம் என்னைத் துரத்தியபடியே இருக்கிறது. இதையெல்லாம் என் வீட்டாரிடமும், நண்பரிடமும் எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. குழம்பித் தவிக்கும் எனக்கு ஒரு பாதையைக் காட்டுங்களேன்!''
வாசகிகள் ரியாக்ஷன்...
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
விரைந்து முடிவெடுங்கள்!
கல்யாண ஆசை... சிலருக்கு 25-ல் வருகிறது. சிலருக்கு 40 வயதில் வருகிறது. இதில் தவறு ஒன்றும் இல்லை. அவரிடம் மனம்விட்டுப் பேசி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளுங்கள். நன்றாக சம்பாதிக்கிறீர்கள். வசதியான வாழ்க்கை வாழலாம். குழந்தையும் பெற்றுக் கொள்ளலாம். அவர், திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால்... நண்பர்களாகவே இருந்துவிடுங்கள். ஆனால், வேறு ஒருவரை தேர்ந்தெடுத்து மணம் முடியுங்கள். எதுவாக இருந்தாலும், இனியும் காலம் கடத்தாமல் விரைந்து முடிவெடுப்பது முக்கியம்!
- லஷ்மி ஸ்வாமி, சென்னை-42
இதுதான் காதல்!
உடலில் உணர்வுகள் உள்ளவரை பாலியல் தாகம் இருப்பது... வெட்கத்துக்கோ, தயக்கத்துக்கோ உரியதல்ல. அது இயற்கையின் ஏற்பாடு. நீங்களும், உங்கள் நண்பரும் ஒரே படகில் ஒருவருக்கொருவர் துடுப்பாக இருந்து பயணிக்கிறீர்கள். அவருடைய கண்களை நிமிர்ந்து நேருக்கு நேராகப் பார்த்து உள்ளதை உணர்ச்சிகளால் நிறைத்து, அவரிடம் தெரிவியுங்கள். அதுதான் காதல்! கட்டாயம் அவரும் கனிவார்!
- ராமுத்தாய், திருச்சி