மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 307

ஈடேறுமா இந்தத் தாயின் எதிர்பார்ப்பு...?! ரீடர்ஸ்

##~##

ண் ஒன்று, பெண் ஒன்று என்று பெற்றும்... இன்று நிம்மதியில்லாத மரணத்தை நோக்கி காத்திருக்கும் தாய் நான்!

எனக்கு இப்போது வயது 60. மிகப்பெரிய செல்வந்தர் வீட்டில் வாக்கப்பட்டவள். ஆனால், பொறுப்பில்லாத குணத்தால் மொத்தத்தையும் அழித்தார் கணவர். இரண்டு குழந்தைகளும் பள்ளி செல்ல ஆரம்பித்த வயதில் வறுமை புகுந்துவிட்டது. மாதம் ரூபாய் 100 சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்த நான், தினமும் ஒருவேளை சோறு, டீ, பன் இதை வைத்தே உயிர் வாழ்ந்தாலும், கணவர் மற்றும் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றினேன்.

கணவரின் மரணம், மகளின் திருமணம், மகனின் படிப்பு என எல்லாவற்றையும் ஒற்றையாளாக முடித்த நான்... 'மகன் வேலையில் சேர்ந்துவிட்டால்... மூன்று வேளையும் நல்ல உணவு மற்றும் ஓய்வு கிடைக்கும்' என்று அந்த நாளுக்காகக் காத்திருந்தேன். படிப்பை முடித்த பையனோ... தொழில் தொடங்கப் போகிறேன் என்று, அதுவரை நான் குருவிபோல் சேர்த்து வைத்திருந்த தொகையில் பாதியை பிடிவாதமாக கேட்டு வாங்கினான். இரண்டே மாதங்களில் தொழில் நஷ்டமடைந்தது எனக்கூறி, வெறுங்கையுடன் வந்து நின்றான். என்னிடமிருந்த மீதித் தொகையையும் அவன் கேட்க, மறுத்துவிட்டேன். அந்தக் கோபத்தில், திருமணத்துக்குப் பின், என்னை உதறிச் சென்றுவிட்டான்.

என் டைரி - 307

மருமகன் குணமானவர் என்பதால், என்னை தன் பாதுகாப்பில் வைத்துக்கொண்டாள் மகள். பல வருடங்கள் கழித்து மீண்டும் மகன் வர, எனக்கு ஏதோ சாப விமோசனம் கிடைத்தது போல இருந்தது. ஆனால், என் மருமகனை அவமானப்படுத்தும் விதமாக பல சமயங்களில் அவன் நடந்துகொள்ள, மகளுக்கு தன் அண்ணனிடமிருந்த மிச்ச பாசமும் தீர்ந்துபோனது. ''உன்னைப் பார்க்க இனி அவன் இங்கே வரவேண்டாம்'' என்று மகள் சொல்லிவிட, ''நீ என் வீட்டுக்கு வா'' என்று அழைத்துச் சென்றான் மகன்.

அவன் மீது இருந்த பித்து காரணமாக... 15 வருடங்களாக பராமரித்துக் கொண்டிருந்த மகள் மற்றும் மருமகனை விட்டுச் சென்ற எனக்கு... அங்கே மருமகள் ரூபத்தில் பாடம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து அவமானப்படுத்துவதோடு... வயிறு நிறைய உணவுகூட அளிக்காமல் வேலை வாங்கினாள். ஒரே மாதத்தில் 6 கிலோ குறைந்தேன். மகனோ... கையறு நிலையில்.

அங்கிருக்க முடியாமல் வெளியேறினாலும், மகள் வீட்டுக்கும் செல்ல மனமின்றி, என் வீட்டில் தனியாக வசிக்கிறேன். சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்நேரத்தில், அண்ணன் - தங்கை இருவரும் பழையபடி பாசத்தோடு பழக வேண்டும் என்று இந்தத் தாய் மனது தவிக்கிறது. அதற்கு என் மகன் இசைந்தாலும், மகள் மறுக்கிறாள். என் இரண்டு பிள்ளைகளுக்கும் ஒரே நேரத்தில் ஒருவாய் சோறு ஊட்ட வேண்டும் என்று உயிரைப் பிடித்து வைத்திருக்கிறேன். அது ஈடேறுமா..?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 307

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 306ன் சுருக்கம்

''இளவயதில் பெற்றோரை இழந்த நானும், அண்ணனும் உறவினர் பாதுகாப்பில் வளர்ந்தோம். துபாயில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைக்கு என்னைக் கட்டி வைத்தனர். கணவரின் பெற்றோர்... அவர் அனுப்பும் 60 ஆயிரம் ரூபாயையும் தங்களின் நான்கு மகள்கள் உள்பட ஒட்டுமொத்த குடும்பத்துக்கு மட்டுமே பயன்படுத்தியதோடு... 'கேட்க ஆளில்லாத அனாதை' என்று என்னை கொடுமையும் படுத்தினர். ஆரம்பத்தில் எனக்காக ஓடோடி வந்த என் அண்ணன்- அண்ணி... ஒரு கட்டத்தில் ஒதுங்கிக்கொள்ள... வேறுவழியில்லாமல், கணவரின் அனுமதி பெற்று குழந்தையோடு தனி வீடு எடுத்து தங்கினேன். மாமனார் தரும் வெறும் 2 ஆயிரம் மட்டுமே வருமானம். வேலைக்குப் போகும்படி கணவர் சொல்ல, 'தாய்ப்பாசத்தை என் குழந்தையும் தவற விடக்கூடாது' என்பதால் அதை நான் ஏற்கவில்லை. இதனால், விடுமுறையில் ஊருக்கு வந்தாலும்... அம்மா வீட்டில்தான் அதிகம் தங்குகிறார் கணவர். குழந்தைக்காக அனைத்தையும் சகித்து வரும் என வாழ்க்கையில் வசந்தம் வீசுமா?''

வாசகிகள் ரியாக்ஷன்                                              ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 307

100

முதலில் வேலை தேடுங்கள்!

சகோதரியே, நீங்கள் முதலில் ஏதாவது வேலைக்குச் செல்ல ஆரம்பியுங்கள். சரியானபடி திட்டமிட்டால் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் வேலைக்குச் செல்ல முடியும். கணவரின் அன்பையும் சம்பாதிக்க முடியும். பிஸியாகிவிடுவதால் எதிர்மறை எண்ணங்களுக்கு 'டாடா’ சொல்லி விடுவீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு நல்ல தோழிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இப்போது கிடைக்கும் வேலை முன் அனுபவத்தின் அடிப்படையில், துபாயில்கூட உங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கலாம். அப்படி கிடைத்தால்... கணவரோடு சேர்ந்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தலாம். பிறகு என்ன வாழ்க்கை வசந்தம்தான்.

- மீனலோசனி பட்டாபிராமன், விருகம்பாக்கம்

பேசினால்தான் பிரச்னைகள் தீரும்!

உன் கணவர் வரும்போது உன் குழந்தைக்கு தந்தை பாசத்தையும் கிடைக்கும்படி செய். குழந்தையின் மழலையில் உருகாதோர் எவருமிலர். கணவரிடம் உட்கார்ந்து பேசு, பேசினால்தான் பிரச்னைகள் தீரும். வேலைக்குச் சென்றால் குழந்தைக்கு தாய்ப்பாசம் கிடைக்காது என்பது உண்மையல்ல. குழந்தையை பள்ளி சென்று திரும்புவதற்குள் வந்துவிடுகிற மாதிரி ஒருவேலையைத் தேடிக்கொள். இல்லையென்றால், வீட்டில் இருந்தபடியே சுயதொழில் மூலமாக சம்பாதிக்கலாம். முயற்சி எடுத்தால்... முடியாதது எதுவுமேயில்லை!

- சரஸ்வதி சுவாமிநாதன், அரும்பாக்கம்