மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 308

ரீடர்ஸ்

##~##

காதல், கலப்புத் திருமணம் எங்களுடையது. அத்தனை சந்தோஷமாக கல்யாணம் கட்டிக் கொண்ட நான், இன்று அதன் வலியை தினம் தினம் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்!

எங்கள் திருமணத்துக்கு சாதி பெரிய தடையாக இருந்தபோது, என் பிறந்த வீட்டார்தான் வழக்கம்போல பணிந்துபோக நேரிட்டது. அந்த வருத்தம் எனக்குள் எப்போதும் ரணமாகவே இருக்கிறது. போதாக்குறைக்கு, புகுந்த வீட்டில் எனக்கு எந்த உரிமையும், அன்பும் கிடைக்கவில்லை. ஏதோ மகனுக்காக என்னை பெரிய மனது பண்ணி ஏற்றுக்கொண்டது போலவே மாமனார், மாமியாரின் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இப்போது தனிக்குடித்தனமாக இருக்கும் நாங்கள், திருநாள், விசேஷம் என்றால்... குழந்தைகளுடன் மாமியார் வீட்டுக்குச் செல்வோம். அதேபோல, என் கணவரின் அண்ணன், அவரின் மனைவி, குழந்தைகளும் வருவார்கள். அப்போது அங்கு எந்த உரிமையும் இல்லாமல் என்னைத் தனிமைப்படுத்துவதுடன், என் ஓர்ப்படியை மாமியாரும், மாமனாரும் வேண்டும் என்றே என் எதிரில் புகழ்ந்து பேசுவது, கொண்டாடுவது என்றே இருப்பார்கள். 'என்ன இருந்தாலும் உங்க குடும்பப் பாரம்பரியம் அப்படி’, 'நம்ம சாதிப் பொண்ணுங்களுக்கு இயல்பிலேயே குடும்ப பொறுப்பெல்லாம் உண்டு’ என்றெல்லாம் ஜாடையாக பேசி, நான் வேறு சாதி என்பதைக் குத்திக்காட்டி நோகடிப்பார்கள். புகுந்த வீட்டில் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தும் எனக்கு மிஞ்சியதெல்லாம் அவமானமாகவே இருக்க, அங்கே போவதையே குறைத்துவிட்டேன்.

என் டைரி - 308

எங்கள் வீட்டுக்கு மாமனாரோ, மாமியாரோ இந்த நான்கு வருடங்களில் வந்ததே இல்லை. என் பிள்ளைகளை கணவர் அழைத்துச் சென்று அவர்களிடம் காட்டிவிட்டு வருவார். ஒவ்வொரு முறை இப்படி செல்லும்போதும், 'உங்க அம்மா வீட்டைப் பத்தி தெரியுமா’ என்றெல்லாம் கேட்டு, என் பிறந்த வீட்டைப் பற்றி குழந்தைகளிடம் தரக்குறைவாக எதையாவது சொல்லி, பிஞ்சுகளின் மனதைக் கொடுக்கிறார்கள். என் குழந்தைகளை கொஞ்சும்போது, 'நீ நம்ம இனம்டா’ என்று சொல்வதும், அவர்கள் ஏதாவது சேட்டை செய்தால், 'அப்படியே உங்கம்மா மாதிரியே இருக்கீங்களே’ என்று கோபப்படுவதுமாக... என் ஆத்திரத்துக்கு தீ வைக்கிறார்கள்.

இதைப் பற்றி கேட்டால்... 'வயசானவங்க. இன்னும் கொஞ்ச காலத்துக்குதான். பேரன், பேத்தி பாசத்தை அனுபவிக்கட்டும். இதுல   எல்லாம் பிரச்னை பண்ணாதே’ என்று சமாதானம் சொல்கிறார் கணவர்.

'நான் வேண்டாம், என் பிள்ளைகள் மட்டும் வேண்டும்' என்பது எந்த வகையில் நியாயம்? பட்ட காயத்துக்கெல்லாம் பதிலடியாக, இனி என் பிள்ளைகள் மேல் புகுந்த வீட்டாரின் காற்று படுவதைக்கூட நான் அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

இது சரிதானா தோழிகளே..?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 308

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 307ன் சுருக்கம்

''செல்வந்தர் வீட்டில் வாக்கப்பட்டேன்; ஆனால், கணவரின் பொறுப்பின்மையால் மொத்தத்தையும் இழந்து வறுமைச் சூழலில்தான் குழந்தைகளை வளர்த்தெடுத்தேன். கணவரின் திடீர் மரணம், மகளின் திருமணம், மகனின் படிப்பு என அனைத்தும் என் ஒற்றை ஆள் சம்பாத்தியத்தில்தான் சமாளித்தேன். குருவி போல் நான் சேர்த்து வைத்த தொகையை வாங்கி தொழில் தொடங்கிய மகன், நஷ்டப்பட்டதுதான் மிச்சம். மீண்டும் பணம் கொடுக்காததால், திருமணம் முடித்துக் கொண்டு, என்னை உதறிச்சென்று விடவே, மகள் வீட்டில் தஞ்சம் புகுந்தேன். ஒரு கட்டத்தில் மருமகனை என் மகன் அவமானப்படுத்தவே, அவனை தன் வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டாள் என் மகள். இந்நிலையில், தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான் மகன். ஆனால், மருமகளோ சாப்பாடுகூட போடாமல் வேலை வாங்கினாள். தற்போது தனியாக வசிக்கிறேன். மகன் - மகள் இருவரும் மீண்டும் பாசத்தோடு பழக வேண்டும், இரண்டு பிள்ளைகளுக்கும் ஒரே நேரத்தில் ஒருவாய் சோறு ஊட்ட வேண்டும் என்று இந்தத் தாய் மனம் தவிக்கிறது. இது ஈடேறுமா?'

வாசகிகள் ரியாக்ஷன்                                                                             ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 308

100

ஆன்மிகத்தில் ஈடுபடுங்கள்!

முதற்கண் அண்ணனும், தங்கையும் பாசத்தோடு பழக வேண்டும் என்ற உங்கள் தாயுள்ளத்துக்கு தலைவணங்குகிறேன். ஆனால், மருமகனை அவமானப்படுத்தும் மகன் மற்றும் உங்களை அவமானப்படுத்தும் மருமகள் மீது... உங்கள் மகளுக்கு எப்படி பாசம் ஏற்படும்? நீங்கள் பணம் கொடுக்கவில்லை என்பதற்காக திருமணத்துக்குப் பிறகு உங்களையே உதறிச்சென்றவனிடம் என்ன பாசத்தை பொழிய வேண்டியிருக்கிறது? உங்கள் மகளிடமும் பணம் கறக்க அவன் தயங்க மாட்டான் என்பதை மகள் சூட்சமமாக அறிந்துதான் அவனுடனான உறவை முறித்திருக்கிறாள். மகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையில் உங்கள் மகன் தலையிடாமல் இருப்பதே சிறந்தது. மிச்சமுள்ள உங்கள் வாழ்க்கையை ஆன்மிகத்தில் ஈடுபடுத்தி நிம்மதியாக இருங்கள்.

- பிரபா டாக்கர், ஹைதராபாத்

அறிவுரை கூறு!

கஷ்டப்பட்டு வளர்த்த நீ, பாசத்தை ஊட்டி வளர்க்க மறந்துவிட்டாயோ! மகன் மற்றும் மகளுடன் உட்கார்ந்து மனம்விட்டுப் பேசு. என்றென்றும் உறவு தொடர... ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகும்படி அறிவுரை கூறு. வெகுவிரைவில் மனம் மாறி, பண்புடன் பாசத்தைத் தேடி அந்த இருவரும் ஓடி வரும் நாள் நிச்சயம். நீ உன் தாய்ப்பாசத்துடன் அவர்களுக்கு உன் கையால் சோறு ஊட்டுவாய்! வாழ்த்துக்கள்.

- எஸ்.ஜெயஸ்ரீ, அரும்பாக்கம்