ஆறெனப் பெருகும் ஆற்றாமை!ரீடர்ஸ்
##~## |
தாழ்வு மனப்பான்மை காரணமாக தத்தளித்த எனக்கு, தன்னம்பிக்கை தந்தவன் அவன். ஆனால், இப்போது அவனே என்னை தள்ளி வைத்து... தவிக்கவிடுகிறான்!
நான் ஒரு கல்லூரி மாணவி. ஆனால், என் தோற்றம்... 'எட்டாம் வகுப்பு மாணவி’ என்று சொன்னால்கூட நீங்கள் நம்பும் அளவிலேயே இருக்கும். சராசரியைவிடக் குறைவான உயரம், ஒல்லியான தேகம். வீட்டில் என்னை, ''வயசுக்கு தக்க மாதிரியா இருக்கே? பார்க்கறவங்க எல்லாம் கேட்கறாங்க. உன்னை எந்த டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போறதோ..?'' என்று அலுத்துக் கொள்வார்கள். தோழிகள் எனக்கு வைத்துள்ள பட்டப் பெயர் - 'சின்னபாப்பா’!
உறவு, கல்லூரி என்று புதிதாக யாரிடமாவது அறிமுகமாகும்போது, ''என்னது... நீ காலேஜ் படிக்கிறியா..?'' என்று கேலி கலந்த ஆச்சர்யத்துடன் கேட்கும்போது, மனசுக்குள் சுருங்கிப் போவேன். இதனாலேயே வீட்டில் மனம் விட்டுப் பேசும் உறவுகள் என்றோ, கல்லூரியில் நெருங்கிய தோழிகள் என்றோ யாருமின்றி, தனிமையிடம் தஞ்சமடைந்தேன்.

இத்தகைய சூழலில்... கல்லூரியில் என்னிடம் வேண்டி விரும்பி வந்து பேசினான் அவன். வகுப்புக்குத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை எடுத்தால்கூட, என்னை யாரும் தேடாது இருந்த சூழலில், இவன் என்னைக் கவனித்து, கனிந்து பேசியது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
முதல் முறையாக என் தோற்றம் பற்றிய குமுறல்களையெல்லாம் மனம்விட்டுப் பகிர, ''இதெல்லாம் ஒரு பிரச்னையா... காலேஜ் படிக்கும்போது 40 கிலோ இருந்த என் அக்கா, இப்போ ஒரு குட்டிப் பாப்பாவுக்கு அம்மா ஆனதும் 70 கிலோ ஆயிட்டா. கூட வேண்டிய வயசுல எடை தானா கூடிடும்'' என்றதுடன், ''உன் காம்ப்ளக்ஸை தூக்கி போட்டுட்டு எல்லார்கிட்டயும் சகஜமா பேசு, பழகு. அப்போதான் படிப்பு, ஃப்ரெண்ட்ஸ்னு மற்ற விஷயங்கள்ல சந்தோஷமா ஈடுபட முடியும்'' என்று அழகாக பலகட்ட கவுன்சலிங்கும் கொடுத்தான். அதன்படியே என்னை நான் மாற்றிக்கொள்ள, என்னைச் சுற்றி உள்ள உலகம் எனக்கு அழகாக மாறிப்போனது. இத்தனைக்கும் காரணமான அவனை, என மனதில் சிம்மாசனம் போட்டு அமர வைத்து, பெரும் மதிப்பு கொடுத்து வளர்த்தேன்.
இளங்கலை முடித்து, முதுகலை படிப்புக்கு வெவ்வேறு கல்லூரிக்குச் சென்றுவிட்டோம். தன் செல்போன் எண்ணை மாற்றியவன், அதை என்னிடம் தெரியப்படுத்தவில்லை. அவன் தொடர்பும் அறுந்து போனது. அது எனக்குள் ஆயிரம் கேள்விகளை கிளப்பிவிட்டது. 'நான் என் வாழ்வின் முக்கிய ஜீவனாக அவனைக் கொண்டாட, அவனோ ஒரு தோழியாக என்னை நினைக்கவில்லையா..? எனக்கு செல்போன் எண்ணை கொடுக்கக்கூட அவனுக்குத் தோண வில்லையா?
ஒருவேளை, நான் அழகாக இருந்திருந்தால், இப்படி சட்டென மறந்து போயிருப்பானா? 'நோஞ்சான் தோழி' என்பதால்தான் இப்படி அலட்சியப் படுத்திவிட்டானா? அவன் என்னிடம் பழகியதெல்லாம் பரிதாபத்தால்தானா?’
- ஆற்றாமை ஆறெனப் பெருக, அவனது புறக்கணிப்பால் என் தாழ்வு மனப்பான்மை முன்னிலும் ஆழமாகிவிட்டது இப்போது.
எப்படி மீள நான் இதிலிருந்து..?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 308ன் சுருக்கம்
''காதல் கலப்புத் திருமணம் செய்துகொண்டவள் நான். ஆனால், புகுந்த வீட்டில் அன்பும், உரிமையும் இல்லை. மாமனாரும், மாமியாரும் என்னை தனிமைப்படுத்துவது, என் ஓர்ப்படி, அவர்களுடைய சாதியைச் சேர்ந்தவர் என்பதால், என் எதிரில் வேண்டுமென அவரைப் புகழ்வது, சாதி - குடும்ப பாரம்பரியம் பேசி என்னைக் குத்திக் காட்டுவது என்றே நடந்து கொண்டனர். வீட்டில் அத்தனை வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தும், அவமானமே மிஞ்சியதால் தனிக்குடித்தனம் வந்துவிட்டோம். என் கணவர், குழந்தைகளை அங்கே அழைத்துச் செல்லும்போதெல்லாம் என்னைப் பற்றி தரக்குறைவாக சொல்லி, பிஞ்சுகளின் மனதைக் கெடுக்கிறார்கள் மாமனாரும் மாமியாரும். கணவரிடம் சொன்னால்... 'இன்னும் கொஞ்ச காலம் பொறுத்துக்கொள்' என்றே சமாதானம் சொல்கிறார். என்னை வெறுப்பவர்களுக்கு என் பிள்ளைகள் மட்டும் ஏன் வேண்டும் என்று, அந்தக் குடும்பத்துடனான தொடர்பை முற்றிலும் துண்டிக்க முடிவு எடுத்திருக்கிறேன். இது சரிதானா தோழிகளே..?!''
வாசகிகள் ரியாக்ஷன் ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
தீமையை நன்மையால் வெல்!
உனக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்குமானால், முதலில் அதைத் தூக்கியெறி. ஓரகத்தி முன்பு மாமியார் உன்னை அவமானப்படுத்தும்போது உன் முகத்தில் வாட்டத்தை காண்பிக்காதே. கண்டும் காணாதிரு, உன்னைக் கஷ்டப்படுத்துவதில் நாளடைவில் அவரே சோர்ந்துவிடுவார். உன்னால் முடிந்த வேலைகளைச் செய். உன் பிள்ளைகளுக்கு அன்பான, முன்மாதிரியான தாயாக இரு. அப்போதுதான் உன் மாமியார் வீட்டினர், உன்னை மட்டம் தட்டும்போது... உன் பிள்ளைகளே அவர்களை தட்டிக்கேட்பர். இதற்காக கணவரிடம் கோபித்துக் கொண்டு, உன் வீட்டு அமைதியைக் கெடுத்துக் கொள்ளாதே. முடிந்த அளவு மாமியார், மாமனாருக்கு உதவிகள் செய். அவர்கள் மனசாட்சியே அவர்களை உறுத்தும். தீமையை, நன்மையினால் வெல்!
- ம.சுகுணா, கோயம்புத்தூர்
வாழ்ந்து காட்டுங்கள்!
கடவுள், மனிதர்களை சமமாகப் படைத்தார். அதில் வேறுபாடில்லை. அனைவரும் சமமே. இந்தப் புரிதல் இல்லாதவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மாறாக, வருத்தப்பட வேண்டும். தங்கள் கணவரின் மனம் நோகாமலிருக்க தவிர்க்க முடியாத தருணங்களில் மட்டும் பிள்ளைகளை அனுப்பி வையுங்கள். அதேசமயம்... உண்மை நிலையை, உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை பிள்ளைகளுக்கு உணர வையுங்கள். சாதியை வைத்து மனிதரை எடை போடுபவர்கள், மனிதர்களே இல்லை என்பதைப் புரிய வையுங்கள். மற்றபடி அவர்கள் முன் நேர்மையாக, மகிழ்ச்சியாக, வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுவதே உங்கள் கடமை... சோர்ந்து விடாதீர்கள்.
- ஜே.சுதன் ஜூலியட், வேலூர்