பலிகடாவாக மாற்றிய பணக்கார குடும்பம்!ரீடர்ஸ்
##~## |
எங்களுடையது மிடில் கிளாஸ் குடும்பம். இரண்டு பெண் குழந்தைகள். எங்களுக்கு பசியில்லாமல் சாப்பாடு போட்டு, படிக்க வைக்கும் அளவுக்கே அப்பாவுக்கு வருமானம். அக்காவை சாதாரண வரனுக்கு திருமணம் முடித்திருந்த நிலையில்தான், ஒரு பெரிய பணக்கார வீட்டில் இருந்து என்னைப் பெண் கேட்டு வந்தனர். நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாத வசதி. ''பணம் பெரிசில்லை. அழகான, படிச்ச, நல்ல குடும்பத்துப் பொண்ணா வேணும்னுதான் உங்களைத் தேடி வந்திருக்கோம்'' என்றனர். மகிழ்வுடன் என்னை மணம் முடித்து அனுப்பி வைத்தனர் என் பெற்றோர்.
புகுந்த வீட்டில் எனக்கு காத்திருந்தது அதிர்ச்சி. மாமியார், மாமனார், நாத்தனார் மட்டுமல்ல... என் கணவரும் என்னை உதாசீனமாகவே நடத்தினார். 'என்ன இருந்தாலும் நம்ம ஸ்டேட்டஸுக்கு இவ பத்தாது’ என்று என்னைப் பற்றிய ஏளன நினைப்பு அனைவருக்கும். 'அப்போ, பணக்காரப் பொண்ணாவே பார்த்திருக்கலாமே... ஏன் நான்..?’ என்ற கேள்விக்கும் எனக்கு சீக்கிரமே கிடைத்தது பதில். என் கணவர் சில வருடங்களுக்கு முன் போதைக்கு அடிமையாகி மீண்டிருந்திருக்கிறார். எந்தப் பணக்காரப் பெண் இவரை மணம் முடிக்க முன் வருவாள்? அதற்குத்தான் நான் பலிகடாவாக்கப்பட்டிருக்கிறேன்.
பங்களா, நான்கு கார்கள் என்று வசதியிருந்தாலும், நான்தான் சமைக்க வேண்டும். சமைப்பதை நான் சுமையாகச் சொல்லவில்லை. ஆனால், நம் மருமகள், மனைவி நமக்காக சமைக்கிறாள் என்ற பாசமில்லாமல், அவர்கள் கொடுக்கும் மெனுவை சமைக்கும் சமையல்காரி போல அந்த வீட்டில் அனைவரும் என்னை நடத்துவதை என்னால் தாங்கமுடியவில்லை.

கல்யாணம், விசேஷம் என்று கிளம்பும்போது பட்டு, நகை என்று கூடும் அந்தக் கூட்டத்தில் சாதாரண புடவையில், கழுத்தில் தாலிக்கொடி, கையில் ஒற்றை வளையல் என நான் பரிதாபமாக நிற்கும்போது, தாழ்வு மனப்பான்மை என்னைக் கொல்லும். ''இவ 'இப்படி’ இருந்தாதான் அடங்கி இருப்பா. நமக்கு சமமா அவளையும் சபையில நிறுத்தினா, நாளைக்கு நம்மையே மிஞ்சிடுவா'' என்பது என் மாமியாரும், நாத்தனாரும் சேர்ந்து எடுத்திருக்கும் முடிவு. உறவுகளிடம் என்னைத் தாழ்த்திப் பேசுவது அவர்களின் வழக்கம். நண்பர்களுடன் வெளிநாட்டு டூர், பணக்கார கேளிக்கைகள் போன்றவற்றில் மட்டுமே சந்தோஷம் காணும் என் கணவருக்கும் தாம்பத்ய கடமைக்கே நான் மனைவி என்பதைத் தவிர என் மீது எந்தப் பாசமோ, பிணைப்போ இல்லை.
வறுமையிலும் என் வீட்டில் முழு சுதந்திரத்துடன் இருந்த எனக்கு, இந்த தங்க விலங்கு என் சந்தோஷத்தின் குரல்வளையை இறுக்கிக்கொண்டே வருகிறது. பல்கலைக்கழக கோல்ட் மெடல் மாணவி யான நான், இந்தப் பணக்கார முட்டாள்களுக்கு வாழ்க்கை முழுக்க அடிமையாகிக் கிடக்கும் விதியை எவ்வளவு நாள் சகித்துக்கொள்ள முடியும்? இதுவே என்னை மனநோயாளியாக மாற்றிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. விடுதலைக்கு வழிகாட்டுங்கள் தோழிகளே!
- பெயர் வெளியிட விரும்பாத 'அவள்’ வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 309ன் சுருக்கம்
''கல்லூரி மாணவியான நான், 'எட்டாம் வகுப்பு மாணவி’ என்று சொன்னால்கூட நம்பும் அளவுக்கு குறைவான உயரம், ஒல்லியான தேகத்துடன்தான் இருக்கிறேன். கேலி கலந்த ஆச்சர்யப் பார்வைகளால்... தனிமையிடம் தஞ்சமடைந்த எனக்கு, அந்த ஆண்மகன் வேண்டி விரும்பி வந்து பேசியது சந்தோஷத்தை தந்தது. 'அனைவரிடமும் சகஜமாக பேசு, பழகு அப்போதான் படிப்பு, ஃப்ரெண்ட்ஸ்னு மற்ற விஷயங்கள்ல சந்தோஷமா ஈடுபட முடியும்’னு பலகட்ட ஆலோசனைகளையும் கொடுத்தான். அதன்பிறகு, என்னைச் சுற்றிய உலகம் அழகாக மாற, என் மனதில் சிம்மாசனம் போட்டு அவனை அமர வைத்தேன். முதுகலை படிப்புக்காக வெவ்வேறு கல்லூரிகளுக்கு பிரிந்த வேளையில், தன் செல்போன் எண்ணை மாற்றியவன், தற்போது என்னுடன் சுத்தமாக தொடர்பில் இல்லை. வாழ்வில் முக்கிய ஜீவனாக அவனை நான் கொண்டாட, 'அவன் என்னை ஒரு தோழியாகக் கூட நினைக்கவில்லையா... பழகியதெல்லாம் என் மீதான பரிதாபத்தில்தானா?’ என்றெல்லாம் கேள்விகள் எழுந்து என்னை வதைக்கின்றன. எப்படி மீள்வது தோழிகளே?''
வாசகிகள் ரியாக்ஷன் ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
அழகுக்காக அல்ல!
உன்னிடம் அன்பும், அக்கறையும் கொண்டிருந்த அந்த இளைஞன், உன்னிடமிருந்து விலகியதற்கு அவனளவில் தகுந்த காரணங்கள் இருக்கலாம். ஆனால், நீ உன் அழகோடு சம்பந்தப்படுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாகி, மீண்டும் தாழ்வு மனப்பான்மை சிறைக்குள் உன்னை அடைத்துக் கொள்வது பேதமை. மீண்டெழு, படிப்பில் முழுக்கவனம் செலுத்து. உனக்குள்ளே மறைந்து கிடக்கும் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சாதனைகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபடு. சாதனையாளர்கள் பாராட்டப்படுவது... சாதனைகளுக்காக மட்டுமே! அழகுக்காகவோ, புறத்தோற்றத்துக்காகவோ அல்ல.
- ரேவதி இளங்கோவன், திருச்சி
நிச்சயம் உயர்வாய்!
உடன் பயின்ற மாணவ சகோதரிகள், உன் உடல்வாகை பார்த்து கேலி, கிண்டல் செய்தபோது... உள்ளத்தால் நீ உயர்ந்து நிற்க ஆறுதல், அரவணைப்பு வார்த்தை சொன்ன அவன், உண்மையில் அருமைச் சகோதரனே! இன்றைய உலகில் ஒவ்வொரு ஆண்மகனும் தனிமையில் கிடைத்த பெண்ணை வேறு சிந்தனையில் பார்த்து அசிங்கப்படுத்த நினைப்பதுண்டு. அப்படியிராமல் நெருங்கிப்பழகி ஆறுதல் கவசமாக அவன் இருந்திருப்பதை பாராட்டியே ஆக வேண்டும். நீயோ அவன் இப்படி பழகியதை வேறு கண்ணோட்டத்துடன் பார்த்துவிட்டாய். இதுதான் உன் தவறு. இந்த உண்மையை நீ உணர்ந்து கொண்டால், நீயும் உயர்வாய்; உன் வாழ்வும் உயரும்... அவன் தொடர்புகள் இல்லாமலே!
- ஹெச்.உமா ஹரி, மதுரை
வருத்தப்படுவதை நிறுத்து!
உனக்குள் தன்னம்பிக்கையை விதைத்த அவன், தற்போது ஏதாவது ஒரு சூழ்நிலை காரணமாக இப்படி மாறியிருக்கலாம். அதற்காக நீ ஏன் வருந்த வேண்டும்? பள்ளி, கல்லூரி என்று படித்த காலத்தில் பலருக்கும் இப்படி பலவழிகளிலும் நண்பர்கள் உதவியிருப்பார்கள். காலப்போக்கில், அவர்களிடையே துளிகூட தொடர்பும் இல்லாமல் போவதும் உண்டு. இது வாழ்க்கைப் பாதையில் சர்வசாதாரணமே. அப்படியிருக்க, உன் ஒருத்திக்குத்தான் இப்படி என்று நினைத்துக் கொண்டு குழம்பாதே! இருப்பதைக் கொண்டு மன அமைதி பெறு!
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை