மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 311

ரீடாஸ்

##~##

 னக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் எனக்குக் கிடைத்த வரம். நான் சாப்பிட்ட பிறகு சாப்பிடுவது, தம்பி மற்றும் தங்கைகளை கவனித்துக் கொள்வது என்று அவ்வளவு பிரியமாக, பொறுப்பாக இருப்பான். திருமண வயது வந்தவுடன் தாமதிக்காமல் மணம் முடித்தேன். ஆனால், அவன் மனைவிக்கு கல்யாணமான ஆறு மாதத்திலேயே குழந்தை பிறக்க, ஊரார் முன் தலை குனிந்து நின்றோம். அவள், கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் இருக்க, அவமானம் தாங்க முடியாத மகன், தீ வைத்து தற்கொலை செய்துகொண்டான்.

இதற்கிடையில் மகளுக்கு திருமணம் முடிந்திருக்க, அதே கையோடு அங்கும் ஆரம்பித்திருந்தது பிரச்னை. மாமியார் வீட்டில் அவ்வளவு கொடுமைகளை அனுபவிப்பவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைப்பதிலேயே காலம் கழிந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில், புகுந்த வீட்டில் கேஸ் வெடித்து என் ஒரே மகள் சாகடிக்கப்பட்டபோது, உருக்குலைந்து போனேன். பெற்ற மகனையும்,

என் டைரி - 311

மகளையும் அநியாயமாகப் பறிகொடுத்த அதிர்ச்சியில் பக்கவாதம் வந்து ஒரு கை, கால் செயல் இழந்துவிட்டது.

கடைசி மகன் திருமணமானவுடன் மனைவியோடு வெளிநாடு சென்றான். சில வருடங்களில் மனைவியுடன் மனக்கசப்பு ஏற்பட, குழந்தை யுடன் இந்தியா திரும்பிவிட்டான். மனைவி, வெளிநாட்டிலேயே வேலை பார்க்கிறாள். இப்போது என்னை கவனித்துக் கொள்வது மகனும், ஆறாவது படிக்கும் பேத்தியும்தான். முடிந்தவரை நன்றாகப் பார்த்துக் கொண்டாலும், துணை இல்லாமல் வாழும் மகனையும், அம்மாவின் பாசம் மற்றும் பராமரிப்பு இல்லாமல் வளரும் பேத்தியையும் பார்க்கப் பார்க்க மனது மேலும் ரணமாகிறது எனக்கு.

என்ன தவறு செய்தேன் நான்? என் பிள்ளைகளின் வாழ்வு, கண் முன்னே இப்படி கருகிப் போனதை, கலைந்து போனதை பார்க்கத்தான் இப்பிறவியை எடுத்தேனா? மூன்று பிள்ளைகளும் நான் பார்த்த வரன்களையே மறுபேச்சின்றி திருமணம் செய்து கொண்டபோது, பெருமிதப்பட்டேன். ஆனால், மூவரின் வாழ்க்கையும் இப்படி சாபமாகிப் போக, என்னால்தான் இது நேர்ந்தது என்கிற குற்றவுணர்ச்சி என்னைக் கொல்கிறது. இந்த ரணங்களை சுமந்து வாழ்வதைவிட, மரணமே மேல் என்று அனுதினமும் மறுகுகிறது மனம். மனசாந்தி அல்லது மரணத்துக்கு வழி சொல்லுங்கள் மகள்களே..!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 311

என் டைரி 310ன் சுருக்கம்

''மிடில்கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். 'பணம் பெரிசில்லை, நல்ல குடும்பத்துப் பெண் வேணும்னு வந்திருக்கோம்’ என்று தேடி வந்த பணக்கார சம்பந்தத்தை எனக்கு முடித்தனர். புகுந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த கொஞ்ச நாட்களிலேயே... 'போதைக்கு அடிமையாகி மீண்டவருக்கு, நான் பலிகடா' என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. பங்களா, கார் என வசதியாக இருந்தாலும், சமையல்காரி போல்தான் நடத்தப்படுகிறேன். மாமியாரும், நாத்தனாரும் செய்யாத கொடுமைகள் இல்லை. தாம்பத்ய கடமைக்கு மட்டுமே நான் என்றபடி அவர் போய்க் கொண்டிருக்கிறார். வறுமை வாழ்க்கை என்றாலும், என் வீட்டில் முழு சுதந்திரமாக இருந்த எனக்கு, இந்த தங்க விலங்கு குரல்வளையை இறுக்குகிறது. மனநோயாளி ஆகிவிடுவேனோ என நடுங்குகிறேன். இதிலிருந்து விடுபட வழிகாட்டுங்கள் தோழிகளே!''

என் டைரி - 311

வாசகிகள் ரியாக்ஷன்

முடிந்தவரை முயற்சி செய்!

மாப்பிள்ளை பற்றிய முழு விவரங்களை மூடி மறைத்து வாய்ஜாலம் பேசும் பணக்கார பெற்றோரிடம், நீ மட்டுமல்ல... தகுதிக்கு மீறி ஆசைப்பட்ட உன் பெற்றோரும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். பல்கலைக்கழக கோல்டு மெடலிஸ்ட்டான நீ, திருமணத்துக்கு முன்பே மாப்பிள்ளை பற்றிய விவரங்களையும், 'இந்த பணக்கார வாழ்வு நமக்கு சாத்தியமா?’ என்பதையும் அறிய முற்பட்டிருக்க வேண்டும். சரி, பரவாயில்லை... அவர்கள் எவ்வளவுதான் உதாசீனப்படுத்தினாலும் உன்னுடைய அன்பு, அனுசரணையான நடவடிக்கைகளால் முடிந்தவரை அவர்களையெல்லாம் மாற்ற முயற்சி செய். முடியாவிட்டால் உன் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை நாடு. சட்டத்தின்முன் அவர்களை நிறுத்தி நியாயம் பெறு! தளர்ந்துவிடாதே!

- சூர்யா ஸ்ரீதர், காஞ்சிபுரம்

கூட்டம், ஓட்டம் எடுக்கும்!

நீ கற்ற கல்வியும் நிமிர்ந்த நன்னடையும் உனக்கு அழகூட்டும்போது, பகட்டான அலங்கார நகைகள் எதற்கு? இதுவரை பொறுத்ததெல்லாம் போதும்... தைரியமாக நிமிர்ந்து நில். ஸ்டேட்டஸ் பற்றி மாமியாரோ, நாத்தனாரோ, கணவரோ பேசினால், எதிர்த்து கேள். மீறிப்பேசினால்... 'இனி என்னைக் கொடுமைப்படுத்தினால் வெளி உலகுக்கு எல்லாவற்றையும் வெட்டவெளிச்சமாக்குவேன். உங்கள் முகத்திரையை கிழிப்பேன்' என்று சொல். நீ ஓடும்வரைதான் இந்த மிரட்டல்; திரும்பி நின்றால்... அந்தக் கூட்டம் ஓட்டம் எடுக்கும்!

- டி.மலர்விழி, சேர்ப்பாடி

இறை ஆற்றல் துணை நிற்கும்!

தங்க மெடல் பெற்ற அன்புத்தங்கையே... துணிச்சலாக முடிவெடு! அடிமை வாழ்வைவிட்டு வெளியே வா. ஊர் என்ன சொல்லும் என நினையாதே. பெற்றோரிடம் விரிவாகப் பேசு. அழிவில்லா கல்விச்செல்வம் உன்னைக் காப்பாற்றும். உன் கணவனே உன்னை விரும்பி வருமளவு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வா. இவை எல்லாவற்றையும்விட இறை ஆற்றல் உனக்கு துணை நிற்கும்.

- எஸ்.ஜெயலெட்சுமி, கும்பகோணம்