என் டைரி - 248
வாசகிகள் பக்கம்
ஓவியம்: பாரதிராஜா
கணவனையே பங்கு போடும் பார்ட்னர் யுத்தம்!

கேன்டீன் வைத்திருக்கும் என் கைப்பக்குவத்தை ஊரே மெச்சுகிறது. ஆனால், என் கணவருக்கு என் சமையல் பிடிக்கவில்லை... என்னையும்தான்! காரணம், என்னைப் பழிவாங்க நினைத்த ஒரு வஞ்சகிக்கு அவர் துருப்புச் சீட்டாக மாறிப்போனதுதான்!
என் கணவருக்குப் போதுமான வருமானம் வந்தபோதும், பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து பொருளாதார ஸ்திரத்துக்காக ஒரு கேன்டீன் ஆரம்பித்தேன். இந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலில் சிறப்பாக வளர்ந்திருக்கிறேன். ஆனால், பர்சனல் வாழ்க்கையிலோ நிம்மதி தேய்ந்து கொண்டே வருகிறது.
ஆரம்பத்தில் என் சமையலை மனம் குளிர பாராட்டிய கணவரின் போக்கில் திடீர் மாற்றம். பல மாதங்களாகவே குறைகூற ஆரம்பித்துவிட்டார். குழம்பு, ரசம், கூட்டு, பொரியல் என்று அவர் அலுவலகத்துக்கு ஆசையாக கேரியரில் கொடுத்து அனுப்புவது வழக்கம். ஆனால், ''ஆபீஸ்லயே கேன்டீன் வந்துவிட்டது... வேண்டாம்...'' என்று ஆறு மாதங்களாக நிறுத்திவிட்டார்.
இந்நிலையில், அவருடன் வேலை பார்க்கும் பெண் ஒருவர் சமீபத்தில் என் கேன்டீனுக்கு வந்தபோது, ''ஆபீஸ்ல நாங்க எல்லாரும் சேர்ந்துதான் லஞ்ச் சாப்பிடுவோம். நேத்து நீங்க கொடுத்து விட்டிருந்த காரக்குழம்பு நல்லாயிருந்துச்சு!'' என்றபோது அதிர்ந்தேன் நான். 'என்னதான் நடக்கிறது..?’ என்பதை அறிய கணவரை
##~## |
ரகசியமாக கண்காணித்த போதுதான் அதிர்ச்சியான உண்மை தெரிய வந்தது.
ஓராண்டுக்கு முன் கேன்டீனில் காலூன்ற ஆரம்பித்த நேரத்தில், என் உறவுக்கார பெண் ஒருத்தி, ''பார்ட்னராக சேர்த்துக் கொள்’' என்றாள். தனியாளாகவே சமாளிக்க முடிந்ததால், மறுத்துவிட்டேன். கோபம் கொண்டவள், தனியாக கேன்டீன் ஆரம்பித்தாள். ஆனால், சரிவர நடத்த முடியாமல் இரண்டு மாதங்களிலேயே மூடிவிட்டாள். ஆனால், என் மீது வன்மத்தை மனதில் வளர்த்தவள், பழிவாங்கும் வகையில் கணவரையே என்னிடமிருந்து பிரித்து, தன் கைக்குள் கொண்டு வந்திருக்கிறாள். தற்போது தினமும் அவள் தரும் கேரியர்தான், அவருடன் அலுவலகத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது.
விஷயம் தெரிந்து, கணவரிடம் கேட்டபோது... ''முடிஞ்சதைப் பார்த்துக்கோ...'' என்கிறார் குற்ற உணர்ச்சி துளியும் இல்லாமல். கோபம் கொண்ட நான், திட்டித் தீர்க்கலாமே என்று அவளை தொலைபேசியில் அழைக்க, ''கேன்டீன்ல பார்ட்னரா சேர்க்க மாட்டேன்னு சொன்னே... இப்போ உன் வாழ்க்கையவே பங்கு போட்டுட்டேன் பார்த்தியா..?!'' என்கிறாள் சதிகார சிரிப்புடன்.
எப்படி மீட்க என் கணவரை நான்?
- ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு...சிநேகிதிக்கு....
என் டைரி 247-ன் சுருக்கம்...

தொடர்ந்து படிக்க ஆசைப்பட்ட என்னை, பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள்ளேயே திருமணம் செய்து கொடுத்துவிட்டனர் பெற்றோர். கணவர், மனநிலை சரியில்லாதவர் என்பது சில நாட்களிலேயே உறுதியாகத் தெரியவர... அதிர்ந்தேன். தங்கைகளை கரைசேர்ப்பதற்காக, தெரிந்தே படுகுழியில் தள்ளிவிட்டனர் என்பது பிறகுதான் தெரிந்தது. கணவரின் மனநிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போக... வீட்டை விட்டு ஓடி, அரசு விடுதியில் தங்கி, தோழி ஒருத்தியின் உதவியுடன் நர்ஸிங் முடித்தேன். இன்று தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கிறேன். இந்நிலையில் மனைவியை இழந்த மெடிக்கல் ரெப் ஒருவர், என்னை மணக்க விரும்புவதாக கூறுகிறார். ''பெத்து வளர்த்தவங்களே உன்னை ஏமாற்றும்போது, ரெண்டு வருஷ பழக்கமுள்ளவரை எப்படி நம்பலாம்?'' என்று கேட்கிறாள் தோழி. ஒரு பக்கம் பயம், மற்றொரு பக்கம் வாழ்க்கையின் ஏக்கம். எத்தகைய முடிவை எடுப்பது? வழிகாட்டுங்கள் தோழிகளே..!
என் டைரி-247க்கான வாசகிகளின் ரியாக்ஷன்...
இரண்டாம் தாரமாக இருக்காதே!
'கஷ்ட சூழலுக்கு நடுவே, நான்கு பெண் பிள்ளைகளை எப்படி கரை சேர்ப்பது?' என்கிற வேதனையில்தான் உன் பெற்றோர் தவறு செய்து விட்டனர். எல்லாவற்றையும் மறந்து மன்னிக்கப் பழகு. கோழிகூட தண்ணீர் பருகும்போது வானத்தைப் பார்த்து நன்றி சொல்கிறது இறைவனுக்கு. தாலி கட்டிய கணவனை, மனநிலை சரியில்லாதவன் என்கிற ஒரே காரணத்துக்காக உதறிவிட்டு, நாலு காசு சம்பாதிக்கிறாய். சம்பளத்துக்காக செய்து கொண்டிருக்கும் அந்த நர்ஸ் வேலையை, அன்போடு கணவனுக்குச் செய்திருந்தால், அவரின் மனநிலை எப்போதோ குணமடைந்திருக்கக் கூடும் அல்லவா!
உன் தோழி சொல்வது போல், பிரச்னை எந்த ரூபத்திலும் வரலாம். உன் வாழ்க்கைக்கு ஒரு துணை தேவை என்று நீ உணரும் இந்த வேளையில், அது ஏன் தாலி கட்டிய கணவராக இருக்கக் கூடாது. தோழிகள் மூலம், உன் பெற்றோரின் மனநிலை, சூழ்நிலையை விசாரி. உன் மீது இன்னும் அக்கறையுடன் இருப்பது தெரிந்தால், நேரில் சென்று, நல்ல வேலையில் இருப்பதையும் சொல். ஒருவேளை இந்த நான்கு வருடங்களில் உன் கணவரின் மனநோய் சரியாகி இருக்கலாம். அப்படி இல்லையெனில், மருத்துவ சிகிச்சை மேற்கொள். உன் கணவருக்கு தாயாக... சேயாக இரு. இரண்டாம் தாரமாக முன்பின் தெரியாதவரின் கரம் பிடிப்பதைவிட, கட்டிய கணவரை கௌரவத்தோடு நெஞ்சில் சுமக்கலாமே?
பின்குறிப்பு: தீராத மனநோய் என்றால், அவரிடமிருந்து விலகுவதில் தவறில்லை.
- கீதா பிரேமானந்த், சென்னை-68
உன் வாழ்க்கை நர்ஸ் தொழிலோடு!
'பெற்று வளர்த்தவர்களே உன் வாழ்க்கையில் விளையாடிவிட்ட நிலையில், இரண்டே வருடம் பழகியவர் ஏமாற்ற மாட்டார் என்பது என்ன நிச்சயம்?' என்று உன் தோழி கேட்டிருப்பது நூற்றுக்கு நூறு நியாயமே! இரண்டாவது திருமணம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், இருவருக்குமே ஈகோ மற்றும் முந்தைய வாழ்க்கை நினைவுகள் நிச்சயம் வந்துபோகும்போது, எதிர் காலத்தில் பிரச்னைகள் வெடிக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. அடி மேல் அடி விழும்போது, அஸ்தி வாரமே ஆட்டம் கண்டுவிடக்கூடும். அதையெல்லாம் எதிர்கொள்ளும் சக்தியும், தெம்பும் உங்கள் இருவருக்கும் இருக்கிறதா என்பதை நூறு சதவிகிதம் உறுதிபடுத்திக் கொண்டு, அடுத்த அடி எடுத்து வை. இல்லையேல்... புனிதமான நர்ஸ் தொழிலையே, உன் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு, மீதியிருக்கும் வாழ்நாளையும் கழித்துவிடு!
- இந்திரா சந்திரன், திருச்சி
விசாரி... விரும்பு!
நீயாகவே தலையெடுத்து, புனிதனமான நர்ஸிங் தொழிலைக் கற்று, தன்னம்பிக்கையோடு முன்னேறி வருகிறாய். முதலில் உன்னுடைய இத்தகைய துணிச்சலான முயற்சிக்கு என்னுடைய சல்யூட். பிறந்த வீட்டினரோ, புகுந்த வீட்டினரோ நான்கு ஆண்டுகளாக உன்னைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளனர். இந்நிலையில், நீ மட்டும் எதற்காக பிறந்த வீடு... புகுந்த வீடு என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? உன்னை விரும்புபவரைப் பற்றி நன்றாக விசாரித்து, முழு விவரத்தையும் தெரிந்துகொள். அதன் பிறகு, உனக்கு உதவியாக, நெருக்கமாக இருக்கும் தோழி களிடம் பேசிப்பார். பிறகு, நல்லதொரு முடிவை நீயே எடு.
அவரைத் திருமணம் செய்வது என்று தீர்மானித்து விட்டால், அவருடைய குடும்பத்தினரோடும் கலந்து பேசி, அவர்களுடைய பூரண சம்மதத்தையும் பெற முயற்சி செய். அதன்பிறகு, அவரைக் கை பிடிப்பது... எக்காலத்துக்கும் பிரச்னை இல்லாமல் இருக்கும். இதற்கெல்லாம் முன்னதாக... முன்னாள் கணவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெற மறந்துவிடாதே! வாழ்க்கையில் வெற்றி மலர... வசந்தம் தொடர வாழ்த்துக்கள்!
- பாஸ்கரி மணிகண்டன், சென்னை-32