மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி-313

என் கணவருக்கு என்ன ஆச்சு?

##~##

னியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார் கணவர். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். திருமணமாகி 6, 7 ஆண்டுகள் வரை கூட்டுக் குடும்பம்தான். பெரும்பாலான வீடுகளைப் போலவே... எதற்கெடுத்தாலும் என்னைக் குற்றம் குறை சொல்வதிலேயே கண்ணாக இருந்தார் மாமியார். கணவருடன் வெளியிடங்களுக்கு சென்று வந்தால்கூட, குத்திக் குத்தி பேசுவார். ஒரு கட்டத்துக்கு மேல், பொறுக்க முடியாமல் கணவரின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஆரம்பித்தேன். அவரோ... ''நீயே சமாளித்துக் கொள்'’ என்றே ஒதுங்கி நின்றார்.

காலப்போக்கில், மாமியாரின் போக்கு காரணமாக எனக்கு பிரஷர், மன அழுத்தம் என்றெல்லாம் பாதிப்புகள் வரவே... அவரை எதிர்த்துப் பேச ஆரம்பித்தேன். ஆனாலும் அவர் அடங்குவதாகக் காணோம். என்னுடைய உடல்நிலை, குழந்தைகளின் நலன் இதையெல்லாம் கணக்கில் கொண்டு, வலுக்கட்டாயமாக தனிக்குடித்தனம் வந்துவிட்டேன்.

என் டைரி-313

முதலில் வாடகை வீட்டிலிருந்தோம். பிறகு சொந்தமாக புதுவீடு கட்டிக்கொண்டோம். வாழ்க்கை மகிழ்ச்சியாக உருண்டோடினாலும்... தனிக்குடித்தனம் வந்த 10 ஆண்டுகளாக அவருடைய அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி என யாரும் அவருடன் பேசுவதில்லை. அவரும் பேசுவதற்கு முயற்சிக்கவில்லை. ஆரம்பத்தில் எதிர்காலம் பற்றி ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தவரிடம், ''அந்த சமயத்தில் நாம் எடுத்த முடிவு சரியானதுதான்'’ என்று சொல்லியே சமாதானப்படுத்தி வந்தேன்.

இந்நிலையில், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக அவருடைய நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள். யாருடனும் சரியாகப் பேசுவதில்லை, எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார். மனஅழுத்தம் அதிகமாகி, சர்க்கரை நோயும் வந்துவிட்டது. ''ஆபீஸிலும் முன்புபோல் இல்லை’' என்று உடன் வேலைபார்ப்பவர்கள் சொல்கிறார்கள்.

அவர் நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆகின்றன. திடீரென நடு இரவில் எழுந்து டி.வி. பார்க்கிறார், கம்ப்யூட்டரில் கேம் ஆடுகிறார். ''ஏன் இப்படி செய்கிறீர்கள்'' என்று கேட்டால் கோபப்படுகிறார். மீறி ஏதாவது கேட்டால், ''நான் சீக்கிரம் போய்ச் சேர்ந்துடுவேன். நீ குடும்பத்தை பார்த்துக்கோ... உனக்கு வேலை வாங்கித் தருகிறேன்'' என்று ஏதேதோ சொல்கிறார். இதையெல்லாம் கேட்கும்போது, எனக்கு பயமாக இருக்கிறது. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தன் அப்பாவை போய் பார்ப்பதைக்கூட தவிர்க்கிறார்.

என் டைரி-313

நான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக என் பெற்றோர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இங்கே நிலைமையே வேறு. கணவரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்து, நாங்கள் சந்தோஷமாக வாழ வழி சொல்லுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி-313

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 312ன் சுருக்கம்

''ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவரை கைபிடித்த நான், 'இப்போதைக்குக் குழந்தை வேண்டாம்’ என்று முதலிரவிலேயே எடுத்துச் சொல்லி, தள்ளிப் போட்டேன். ஆனால், ஓராண்டுக்குப் பிறகு, அவர் வற்புறுத்தவே... அழகான பெண் குழந்தைக்கு தாயானேன். அன்று முதல் எங்களுக்குள் பிரச்னைகள்தான். 'குழந்தை எதற்காக அழுகிறது?’ என்பதில் தொடங்கி... சின்னச் சின்னதாக தொடங்கிய சண்டை பெரிதாகிறது. குழந்தையின் அதீத அடம் காரணமாக, நிம்மதி இல்லாமல், சரியாக சாப்பிடக்கூட முடியாமல் தவிக்கிறேன். 'குழந்தையால நான் அல்லாடுறேன், நீங்க ஜாலியா ஆபீஸ் போயிட்டு வர்றீங்க...’ என்று கணவர் மீது எரிந்து விழ ஆரம்பித்த நான், தாம்பத்யத்தையும் தவிர்த்துவிட்டேன். குழந்தை மீது பாசம் இருந்தாலும், கல்லூரி கால இளமைக் கனவுகள் முழுமையாக நிறைவேறாததுதான், இப்படி உச்சகட்ட மன அழுத்தத்துக்கு ஆளாக்கிவிட்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட ஆறுதல் தாருங்கள் தோழிகளே!''

வாசகிகள் ரியாக்ஷன்                                             ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி-313

100

யதார்த்தம் உணருங்கள்!

திருமணமாகிவிட்டாலே... நாமும் குடும்பத் தலைவிதான். அதை ஏற்கும் அளவுக்கு உங்கள் மனம் பக்குவம் அடையவில்லை. நல்ல கணவர் உங்களுக்கு வாய்த்திருந்தும், தேவையற்ற மன அழுத்தத்தை நீங்களே உருவாக்கிக் கொண் டிருக்கிறீர்கள். உங்கள் இளமையின் பரிசுதான், அந்தக் குழந்தை. 'அம்மாவே என் உலகம்’ என்று எண்ணி வாழும் கள்ளங்கபடமில்லா அந்தக் குழந்தையை நினைத்துப் பாருங்கள். அத்தனை சிக்கல்களும் தீர்ந்து விடும். வாழ்க்கை எனும் பூஞ்சோலையை முழுமையாக ரசித்து அனுபவிக்க வாழ்த்துக்கள்!

-  டி.எஸ்.ரேவதி, தஞ்சாவூர்

தாய்மை... கடவுள் தந்த வரம்!

'இளமைக்கு இடைஞ்சலாக வந்த குழந்தை!’ என்ற தலைப்பை படித்ததும், உன்மீது கோபமே பற்றிக் கொண்டு வந்தது. இதெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல. இங்கே நீதான் பிரச்னை என்பது தெளிவாகத் தெரிகிறது. 'குழல் இனிது; யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்’ என்பது நீ அறியாத ஒன்று போலும்! பொறுமை காக்கும் கணவரையும், உன்னை நம்பியே ஜனித்திருக்கும் குழந்தையையும் உதா சீனம் செய்யாமல்... அன்பு, பாசம், நேசம் காட்டி அர வணைத்து வாழ்க்கையில் வசந்தம் காண முயற்சி செய்!

- மதுரவல்லி ரங்கராஜன், கிழக்கு தாம்பரம்

வாசல் திறக்கும்!

இந்த வயதுதான் பிள்ளைகள் பெற்று வளர்க்க சிறப்பான வயது. இப்போது வாழ்க்கையை அனுபவித்து விட்டு, பின் குழந்தைப்பேறு கிடைக்காமல் போனால் என்ன செய்வாய்? உன் கணவரின் முடிவு சரியே! எதையும் இஷ்டப்பட்டு செய்தால் நமக்கு வலி தெரியாது. குழந்தையுடன் குழந்தையாக நீயும் மாறிப் பார்... புது உலகம் உனக்கு தன் வாசல் திறக்கும். நீ தளரும் வேளையில் உங்கள் வாரிசு ஆலமரமாக தோள் கொடுக்கும். குழந்தை பள்ளிக்கு போகும்போது உன் திறமை முழுவதையும் காட்டு!

- கிருஷ்ணவேணி பாலாஜி, கும்பகோணம்