மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 252

பணத்தால் நின்று போன பாசத் தேரோட்டம் !

   வாசகிகள் பக்கம்  
ஓவியம்: மார்த்தாண்டம் ராஜசேகரன்

என் டைரி - 252

'ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்' என்பார்கள். நானும், என்னைச் சுற்றி இருப்பவர்களும் விட்ட வார்த்தைகள், இப்போது கொன்று கொண்டிருக்கிறது என் வாழ்க்கையை.

செல்லமாக வளர்த்த பெற்றோர், வளர்ந்த இரண்டு தம்பிகள் என்று எல்லோரையும் தூக்கி எறிந்துவிட்டு, மெக்கானிக் காதலருடன் வீட்டைவிட்டு ஓடியவள் நான்.

புகுந்த வீட்டுக்குள் நுழைந்த புதிதில், என் அப்பாவின் ஊதாரித்தனம், என் சின்னத்தம்பியின் ரவுடித்தனம் இதையெல்லாம் சொல்லி, அங்கே சுய பச்சாதாபம் தேடியிருக்கிறேன். ஆனால், என் மாமியார் அதை தன்

##~##

உறவுகளிடம் கூறி 'கதியற்ற பெண்ணுக்கு வாழ்வு தந்திருக்கிறோம்' என்று பீற்றிக்கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை.

என் பெண்கள் வளர வளரத்தான் தாயின் அருமை புரிந்தது எனக்கு. பதினெட்டு வருடங்கள் ஓடிவிட்ட நிலையில், பெற்றோரைச் சந்திக்க ஊருக்குச் சென்றேன். வீட்டை விற்று, தம்பிகளுக்கு திருமணம் முடித்து, வேறு இடத்துக்குச் சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்தினர் சொல்ல, புதிய முகவரியைக் கண்டறிந்து கணவர், குழந்தைகளுடன் கிளம்பினேன். கூடவே மாமியாரும் சேர்ந்து கொண்டார்.

அம்மா மடியில் முகம் புதைத்து அழுதேன். எங்களுக்கு விருந்து சமைத்து, வீடே சந்தோஷமாக இருந்தது. என் மாமியார் பேச ஆரம்பித்தார்... 'இவ நிர்க்கதியா நின்னாளேனுதான் வீட்டோட சேர்த்துக்கிட்டேன். நீங்களும், லாபம்தான்னு விட்டுட்டீங்க. இப்பயாவது பேத்திகளுக்கு ஏதாவது செய்யுங்க’ என்றதும், தம்பிகளுடைய மனைவிகளின் முகம் மாறியது.

'இங்க என்ன கொட்டியா கிடக்கு? இருந்த வீட்டையும் வித்துட்டு, இப்பதான் கொஞ்சம் நிமிர்ந்திருக்கோம்’ என்றார்கள் படபடவென.

என் கணவர், அவரது அம்மாவை பேசாமல் இருக்கச் சொல்லியும் மீறி, 'இந்தக் காலத்துல தாத்தா சொத்துல பேத்திக்கும் பங்கு உண்டு தெரியும்ல? உங்க புருஷன்மார்களின் ரவுடித்தனத்தைப் பத்திதான் ஊரே பேசுதே... பெத்த அம்மா, அப்பாவுக்கு பிள்ளைங்க சம்பாதிச்சுக் கொடுக்கணும். அவங்களோட சொத்தை இப்படி அநியாயமா அபகரிச்சுக்கக் கூடாது’ என்று என் மாமியார் சொல்லவும், வீடே ரணகளப்பட்டது.

''ஒடுகாலியா வீட்டை விட்டு போனவள பாவம்னு சேர்த்துக்கிட்டா, எங்க புருஷன்களைப் பத்தியே தப்பா பேசறீங்களே... முதல்ல வெளியில போங்க'' என்றார்கள் அவர்கள்.

அடிதடியாகும் அளவுக்குச் சூழ்நிலை கை மீற, 'எதையும் எதிர்பார்த்து இங்க வந்துடாதே’ என்று அவசரமாக எங்களை அனுப்பி வைத்தார் அம்மா.

'இனி அங்க போகணும்னு நினைச்சா, ஒரேடியா போயிடு’ என்று சொல்லிவிட்டார் கணவர்.

பாசத்தை எதிர்பார்த்துச் சென்றவளை, பணத்துக்காக வந்தவளாக சூழ்நிலை காட்டிவிட்டது. பிறந்த உறவுகளுக்காக ஏங்கும் என் பாசத்தை... அவர்களுக்கும், என் கணவருக்கும் எப்படி புரிய வைப்பது?

- ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு...சிநேகிதிக்கு...

என் டைரி 251-ன் சுருக்கம்...

பெற்றோர், மூன்று தங்கைகளைக் கடந்த இருபது ஆண்டுகளாக முதுகில் சுமந்து, தனக்கென சல்லிக்காசுகூட சேர்க்காதவர் என் கணவர். என் நகைகளையும் போட்டு, இரு தங்கைகளுக்கு மணமுடித்ததோடு... கடைசித் தங்கையையும் பி.ஹெச்டி. வரை படிக்க வைத்தோம். கிட்டத்தட்ட ஏடிஎம் மெஷினாகவே என் கணவரைப் பாவித்து, அவருக்கு நெருக்கடி கொடுப்பதே உறவுகளின் வேலையாக இருக்கிறது இப்போதும்.

மருத்துவச் செலவு, குடும்பச் செலவு, மணமான தங்கைகளின் குடும்பச் செலவுகள் என்று எல்லாம் சேர்ந்து என் வாழ்க்கையை கடன் கடலில் தத்தளிக்க வைக்கின்றன. பணம் பறிக்கும் உறவுகளிடமிருந்து எப்படி மீள்வது?

 என் டைரி 251-க்கான வாசகிகள் ரியாக்ஷன்...

என் டைரி - 252

உபத்திரவத்தை உருவேற்ற வேண்டாம்!

ஓர் இடத்தில் தங்காமல் சென்று கொண்டே இருப்பதால்தான் பணத்துக்குச் செல்வம் என்று பெயரிட்டனர் முன்னோர் என்பார்கள். பணம் நம்மைத் தேடி வரும்போது, அதை அணைகட்டி வைக்க வேண்டும்!

இவ்வுலகில், எந்த ஒரு மனிதருக்கும் அவன் உயிர் இருக்கும் வரை பணம் இருந்தே தீர வேண்டும்! இதனால் உறவுகளுக்கு உதவக்கூடாது என்று அர்த்தம் இல்லை!

தன் கை வறண்டு போகும் அளவுக்கு உதவினால்... அது தனக்குத்தானே உருவேற்றிக் கொள்ளும் உபத்திரவம் என்பதை கணவர் உணர்த்தும் வேலைகளை உடனடியாகச் செய்!

- ஈ.டி.ஹேமமாலினி, சென்னை

பாடம் புகட்டு...பலன் தெரியும்!

சினிமாக்களைப் பார்த்துப் பார்த்து கண்மூடித்தனமாக பாசம், சென்டிமென்ட் என்று திரிவதே 'தமிழர் பண்பாடு' என்று ஆனதன் விளைவு இது. 'பாசமலர் படத்தில் சிவாஜியும் சாவித்திரியும் 'கை வீசம்மா கைவீசு’ என ஒப்பாரி வைத்தபோது ரசிகனும் அழுதான். ஆனால், அந்த வயதில் அண்ணன்-தங்கை யாராவது அப்படி அழுவார்களா! என்று யோசிக்கவில்லை. 'தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை’ என்று பாடுகிறார்கள். ஆனால், வயதுக்கு வந்த பிறகு எத்தனை பேர் தாயின் மடியில் தலை வைத்துப் படுக்கிறோம்.

ஆக, உணர்வைவிட அறிவைக் கொண்டு வாழ்ந்தால்தான் மலர்ச்சியும், வளர்ச்சியும் வரும். சகோதரி, உங்களால் பயனடைபவர்களிடம் உங்கள் குடும்பத்துக்காக ஓர் உதவி கேட்டுப் பாருங்கள். ஓடிப் போவார்கள். அப்படியரு சந்தர்ப்பத்தை உருவாக்கி, உங்கள் கணவருக்கு பாடம் புகட்டுங்கள். உண்மையைப் புரிந்து கொள்வார்.

- அ.யாழினி பர்வதம், சென்னை

கடமை... சுகம்... சுமை!

கடமை என்பது இடுப்பளவு இருந்தால்... சுகம். கழுத்தளவு இருந்தால்... சுமை. உன் பொறுமையால் அதை வெல்லலாம் என்று நினைத்தால், அது கழுத்தை இறுக்கி, உன் குடும்ப மூச்சையே நிறுத்திவிடும். ஜாக்கிரதை! கவனமுடன் கையாள முயற்சி எடு.

உன் நாத்தனார்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை தேடிக் கொள்ளச்சொல். அதற்கு நீயும் முயற்சி செய். இது அவர்களின் பொருளாதாரத்தை சற்றே சீரமைக்க உதவும்.

தனிமை நேரங்களில் உங்கள் கணவரிடம் அன்பாகப் பொறுமையாக பேசி, அவரது சொந்த குடும்பத்தில் செய்யக்கூடிய கடமைகளையும் விளக்குங்கள். நிச்சயம் புரிந்து கொள்வார்.

- பி.ஜோஸ்பின், கோவை

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 252

100