மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 314

குற்ற உணர்ச்சியில் குறுகுகிறேன்... கோப உணர்ச்சியில் ஒதுங்குகிறார்!

##~##

ம்மா, அப்பா இல்லாத நான்... சித்தி வீட்டில்தான் வளர்ந்தேன். பாசம், சந்தோஷம் என்பதையெல்லாம் பெரிதாக அறிந்திராத நான்... தாய்மாமன் முறையில் வரும் அந்த நபரைச் சந்தித்த பிறகுதான்... பாசம், சந்தோஷம் என்பதையெல்லாம் நேரடியாக உணர்ந்தேன். அந்த உற்சாகத்தில் அவருடன் ரொம்பவே நெருங்கிப் பழக ஆரம்பித்த நான், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே கர்ப்பமாகிப் போனேன். ஆத்திரத்தில் அலறித் துடித்த குடும்பத்தார், அவசரம் அவசரமாக திருமணத்தை முடித்து, ஒதுங்கிக் கொண்டனர். நண்பர்கள் வட்டாரம்... அப்படியே!

அம்மாவின் பாசத்தை அதிகமாக அறிந்திராத நான், அந்த நிலை என் மகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக... கூடுதலாக பாசத்தைக் கொட்டி வளர்க்க ஆரம்பித்தேன். அதேநேரம்... அவர் என்னை விட்டு மெள்ள மெள்ள விலக ஆரம்பித்தார். அவருக்கு என்ன தோன்றுகிறதோ, அதைத்தான் செய்வார். உடன் இருப்பவர்களைப் பற்றிக் கண்டுகொள்வதே இல்லை. ஏனோதானோ என்று வாழ்க்கை உருள... இந்தக் கவலையிலேயே உடல் மெலிந்து சருகாகிப் போனேன்.

பரிதாபப்பட வேண்டியவரோ... ஆத்திரத்தையே அள்ளி வீசினார். சொந்தபந்தம், நட்பு என்று எல்லாமே விலகி நிற்க... யாரிடமும், எதையும் என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. மூன்று ஆண்டுகள் உருண்ட நிலையில், மனதைத் திடப்படுத்திக் கொண்டு, உறவுகளின் வீட்டுப் படியேறியபோது... ''குடும்ப மானம் போயிடக் கூடாதேனுதான் கல்யாணம் முடிச்சோம். இனி, நீயேதான் உன்னைப் பாத்துக்கணும்’' என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டனர்.

என் டைரி - 314

'அவரிடமே இதைப் பற்றி பேசிவிட வேண்டியதுதான்' என்று முடிவெடுத்த நான், அதை செயல்படுத்திய கணத்தில், தலையில் இடி இறங்கியவளாக... நொறுங்கிப் போனேன். ''உனக்கு இதய நோய் இருப்பதை என்னிடம் ஏன் மறைத்தாய்?' என்று குமுறியவர், ''எத்தனை வருடம் உயிரோடு இருப்பேனு தெரியாது. அதுவரைக்கும் எதுவுமே தெரியாத மாதிரி நடிச்சுட்டுப் போயிடலாம்னு நினைச்சுயா..? நீ எதையும் மறைக்க மாட்டேனு நான் எவ்வளவு நம்பினேன். இப்படி என்னை ஏமாத்திட்டியே..!’' என்று அழுது அரற்றினார்.

'எந்த விஷயம் அவருக்குத் தெரிந்துவிட்டால்... ஒரேயடியாக உடைந்துவிடுவார் என்று மறைத்து வைத்திருந்தோமோ... அதுவேதான் எந்த கெட்டபழக்கமும் இல்லாத அவரை, இப்பொழுது அத்தனை கெட்டபழக்கத் துக்கும் அடிமையாக்கி விட்டிருக்கிறது' என்று உணர்ந்து, 'துரோகம் செய்துவிட்டோம்' என்கிற குற்றஉணர்ச்சியில் நடைபிணமாகிவிட்டேன் நான்.

அவரோ... வழக்கம்போல ஒதுங்கியே நடமாடிக் கொண்டிருக்கிறார். 'நம் மீது உள்ள அக்கறையால்தான் உண்மையை மறைத்துவிட்டதால் இப்படி கோபப்பட்டு, ஒதுங்கி வாழ்கிறாரா... அல்லது, ஓர் இதய நோயாளியைக் கட்டிக் கொண்டுவிட்டோமே என்று பாதை மாறிப் போகிறாரா?' என்பது புரியாமல் தட்டுத்தடுமாறும் என்னை, வாழ்க்கையே சூன்யமாகிவிட்டது போன்ற உணர்வு ஆட்கொண்டுவிட்டது. 'குழந்தையை ஏதாவது அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு இப்போதே எமனிடம் போய்ச் சேர்ந்துவிடலாமா?' என்கிற எண்ணம் அடிக்கடி என்னை துரத்திக் கொண்டிருக்கிறது.

இளைப்பாறுதல் தாருங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு... 

என் டைரி 313ன் சுருக்கம்

"பெரும்பாலான வீடுகளைப் போல, எதற்கெடுத்தாலும் மாமியாருடன் பிரச்னை வரவே... பிரஷர், மனஅழுத்தம் என எனக்கு பாதிப்புகள். அதனால்... ஆறு, ஏழு ஆண்டுகளிலேயே தனிக்குடித்தனம் வந்துவிட்டேன். முதலில் வாடகைவீடு... பிறகு, புதிதாக சொந்த வீடு என மகிழ்ச்சியாக வாழ்க்கை நகர்ந்தாலும்... கணவரின் வீட்டினருக்கும் எங்களுக்கும் இடையில் பேச்சே இல்லை. இதே நினைப்பில், கோபம். மனஅழுத்தம் எல்லாம் அதிகமாகி... சர்க்கரை நோயும் வந்துவிட்டது என் கணவருக்கு. 'நான் சீக்கிரம் போய்ச் சேர்ந்துடுவேன்... உனக்கு வேலை வாங்கித் தர்றேன்... நீ குடும்பத்தை பார்த்துக்கோ...’ என்று ஏதேதோ சொல்கிறார். அவரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து, நாங்கள் சந்தோஷமாக வாழ வழி சொல்லுங்கள் தோழிகளே!'

வாசகிகள் ரியாக்ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 314

100

மனக்காயங்கள் ஆறும்!

உங்கள் கணவர், தன் வீட்டாருடன் நல்லிணக்கம் காட்டவில்லை என்றால், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? நீங்களாவது அவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம். அதைப் பார்த்தாவது கணவரும் மனம் மாறி, அவருடைய வீட்டாருடன் தொடர்பில் இருந் திருப்பார். இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. கணவரின் மனபாதிப்பு, குழந்தைகளின் எதிர்காலம் எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு... நீங்களே முயற்சி எடுத்து கணவர் வீட்டாருடனான உறவை உடனடியாகப் புதுப்பியுங்கள். காலப்போக்கில் மனக்காயங்கள் ஆறி, மகிழ்ச்சி பொங்கும்.

- இந்திரா ரகோத்தமன், கோவை

ஈகோவை விட்டுவிடு!

பெற்றவர்கள், எத்தனை பாடாய்படுத்தினாலும் 'நீ கொஞ்சம் அனுசரித்துப் போ' என மனைவிமாருக்கு புத்தி சொல்லும் கணவர்கள்தான் நாட்டில் அதிகம். அதிலும் பத்து வருடங்கள் தன் உறவுகளை பார்க்காமல், பேசாமல், உறவு கொண்டாடாமல் இருந்த உன் கண வன் மனம் கலங்கியதில் ஆச்சர்யமே இல்லை. முத லில் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல். அங்கே கிடைக்கும் கவுன்சலிங்கில் அவர் சற்று தெளிவடைந்தவுடன், உன்னுடைய ஈகோவை விட்டுவிட்டு, அவருடைய பெற்றோரை குடும்பத்துடன் சென்று பார்த் துப் பேசிவிட்டு வா. உன் குடும்பத்தைக் காப்பாற்ற இதைவிட வேறு வழியே இல்லை என்பதுதான் உண்மை.

- ஜஹ்பர் காதர், மேற்கு தாம்பரம்