மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 253

உறவுகள் என்பது எது வரை ?

 வாசகிகள் பக்கம்

அளவற்ற அன்போடு மனமொத்த தம்பதியாக வாழ்ந்த எங்கள் அன்பின் அடையாளமாக ஒரு மகள் பிறந்தாள். வறுமையில்தான் வாழ்க்கையை ஆரம்பித்தோம். உதவி கேட்டு விடுவோமோ என்ற பயத்திலேயே இரு வீட்டா ரின் உறவுகளும் எங்களிடம் இருந்து விலகியே நின்றன.

என் டைரி - 253
##~##

'பொறாமை, வஞ்சம், சதி, கோள்மூட்டுறதுனு இருக்கற அவங்ககிட்ட இருந்து விலகி இருக்கறதே நல்லது’ என்று என் கணவர் சொன்னதால், எங்களின் ஒரே மகள்தான் உலகம் என்றே வாழ்ந்தோம். காலையில் ஜவுளி வியாபாரம் செய்வது, இரவில் கச்சேரிகளில் பாடுவது என்று அவர் ஓயாது உழைத்ததில், ஓரளவுக்கு முன்னுக்கு வந்தோம்.

பெரியவளாகி கல்லூரி சென்று கொண்டிருந்த மகள், 'என் சீனியர் ஒருவரை நான் காதலிக்கிறேன்' என்றபடி எங்கள் முன் நின்று, அந்தப் பையனின் வேலை, குணம், குடும்பம் பற்றியெல்லாம் தன் விருப்பத்தைக் கூறினாள். எவ்வித எதிர்ப்பும் தெரிவிக் காத என் கணவர், ''படிப்பு முடியட்டும்மா... காத்திரு!'’ என்று மகளுக்கு உறுதி சொன்னார்.

இந்தச் சூழலில் திடீரென ஒரு நாள் அவருக்கு ஹார்ட் அட்டாக். ஹாஸ்பிட்டலில் சேர்த்தும் பிழைக்க வைக்க முடியவில்லை. நானும், என் மகளும் சூன்யமான வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டோம். சடங்குகள் செய்ய வந்த உறவினர்கள், ''இத்தனை நாள் உறவுகளே வேண்டாம்னு பட்டும் படாம இருந்துட்டீங்க. இப்போ அவரும் போயிட்டார். உனக்கும் உன் பொண்ணுக்கும் இனி எல்லாத்தையும் நாங்கதான் பார்த்துக்கணும்'’ என்று அக்கறை யோடு பேசியதோடு, மகளுக்கு வரன் தேடும் படலத்தையும் தாங்களாகவே ஆரம்பித்தனர்.

அவளுடைய காதல் விஷயத்தை நான் அவர்களிடம் சொன்னபோது, ''பொம்பளப் புள்ளைய பெத்து வெச்சுருக்க. நாளைக்கு ஏதாச்சும் நல்லது, கெட்டதுனா உனக்குத் துணைக்கு நாங்க யாரும் வர மாட்டோம்'’ என்று கட் அண்ட் ரைட்டாக சொல்கின்றனர் உறவினர்கள்.

''இவ்ளோ நாள் நாம மட்டும்தானேம்மா இருந்தோம். இனியும் இவங்க இல்லாம நாம இருந்துடுவோம்'’ என்று மகள் தைரியம் சொல்கிறாள். என்றாலும், அவர் இல்லாத சூழல், இப்போது என்னை மிகவும் பலவீனமாகவே உணர வைக்கிறது. மகளைக் காதலிக்கும் பையன், தங்கமானவன். இருந்தாலும், உறவுக்காரர்கள் சொல்வது போல, திருமணத்துக்குப் பிறகு... மாமனார், மாமியார் என்று அவளுக்கு அங்கு ஏதாவது பிரச்னை என்றால், உதவிக்கு வர உறவுகள் வேண்டுமே... என்று யோசிக்கிறேன்.

மகளின் விருப்பமா, உறவுகளின் துணையா..? இந்தச் சூழலை நான் எப்படி எதிர்கொள்ள வேண்டும்... சொல்லுங்கள் தோழிகளே!

- ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி

...சிநேகிதிக்கு...சிநேகிதிக்கு...

 என் டைரி 252-ன் சுருக்கம்...

என் டைரி - 253

குடும்பத்தைப் பகைத்துக் கொண்டு காதல ருடன் ஓடியவள் நான். புகுந்த வீட்டின் பச்சா தாபத்தைச் சம்பாதிக்கிறேன் பேர்வழி என்று, பிறந்த வீட்டின் பலவீனங்கள் பலவற்றையும் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டேன். ஒரு கட்டத்தில் பெற்றோரின் பாசம் இழுக்க, பிறந்த வீடு சென்றேன். என்னுடன் ஒட்டிக் கொண்டு வந்த மாமியார், அந்த காலத்தில் சீர் செனத்தி இல்லாமல் நான் வந்ததை குத்திக்காட்டி பேச்சை ஆரம்பித்து, பாசத்தை எதிர்பார்த்துச் சென்றவளை, பணத்துக்காக வந்தவளாக கருதும் சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டார். மறுபடியும் அந்நியமாகிவிட்டது பிறந்தவீடு. ஏங்கும் என் பாசத்தை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?

என் டைரி 252-க்கான வாசகிகள் ரியாக்ஷன்...

பாசம், உன் வீட்டோடே இருக்கட்டும்!

உன் அப்பாவின் ஊதாரித்தனத்தையும், உடன்பிறப்புகளின் ரவுடித்தனத்தையும் புகுந்த வீட்டில் வெளிச்சம் போட்டுக் காட்டியது மாபெரும் தவறு! அதேபோல... காலம் கடந்து அம்மாவின் பாசத்துக்காக கணவர்; பிள்ளைகள், மாமியாருடன் புகுந்த வீட்டுக்குச் சென்ற நிலையில், 'பேத்திகளுக்காக ஏதாவது செய்யுங்க...' என்று உரிமையுடன் உன் மாமியார் கேட்டதை ஒரு குற்றமாகக் கருதி, அடிதடி அளவுக்கு கொண்டு சென்றது உன் உடன்பிறப்புகளின் தவறு! இப்படி அவமானப்பட்டு வந்த நிலையில், எந்த ஒரு புருஷனும், 'இனி அங்க போகணும்னு நினைச்சா, ஒரேயடியா போயிடு' என்றுதான் சொல்வான்! இனியும் அவர்கள் மீது நீ பாசம் வைத்தால், அது மோசம்தான்! காதலித்து மணந்த கணவன் மீது... உன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வயதான மாமியார் மீது... ஈன்றெடுத்த பிள்ளைகள் மீது காட்டு - உன் அளவற்ற பாசத்தை! அதுவே பன்மடங்கு பெருகி அனைவரது பாசமழையிலும் உன்னை நனையச் செய்யும்!

- வசந்தா பரமசிவம், புனலூர்

ஜாக்கிரதை தோழி!

உங்கள் பிறந்த வீட்டார் இத்தனை ஆண்டுகளில் எப்போதாவது உங்களைக் குறித்து விசாரிக்கவோ, பார்க்கவோ முயற்சித்த மாதிரி தெரியவில்லை. இதிலிருந்தே புரிகிறது அவர்களின் மனப்பான்மை. 'பாசத்துக்காகத்தான்’ என்று நீங்கள் சொன்னாலும், 'பணத்துக்காகத்தான்’ இந்தப் பாசாங்கு என்பார்கள். இதுதான் உலக இயல்பு. எனவே, பிறந்த வீட்டுப் பாசத்தை மூட்டைக் கட்டுங்கள். குழந்தை களின் வாழ்க்கைதான் இப்போது உங்களுக்கு முக்கியம்! அதனால் மாமியார், கணவர் மனம் கோணாதபடி அவர்களுடன் ஒன்றுபட்டு செயல்படுங்கள். இல்லையேல் உங்கள் பெண்களின் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடவும் வாய்ப் பிருக்கிறது, ஜாக்கிரதை!

- எஸ்.பி.சுசீலாதேவி, பல்லாவரம்

அறுவை சிகிச்சைதான்... ஆனால், குணமாகிறதே!

பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின், பசுவைத் தேடி ஓடிய கன்றைப் போல் சென்ற உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாசமுகம் காட்டி அணைக்காமல், பணம் மட்டுமே பெரிது என நினைக்கும் அந்த உறவுகளை அலட்சியப்படுத்துங்கள். லவ் மேரேஜ் செய்து, 18 ஆண்டு காலம் உருண்டுவிட்ட நிலையிலும், உங்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத கணவர் அமைந்ததற்குப் பெருமைப்படுங்கள். 'பிறந்த வீடு... பிறந்த வீடு' என்றே புலம்பி, நீங்களும் நிம்மதி இழந்து குடும்ப அமைதியையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். வாரிசுகளை நன்கு படிக்க வைத்து திருமணம் செய்து வைப்பது என்பது மட்டுமே உங்கள் லட்சியமாக இருக்கட்டும். அறுவை சிகிச்சைதான்... ஆனால், குணமாகிறதே!

- ஜி.கே.எஸ். பரிமளா மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்

காலம் கைகூடும்... காத்திரு!

பெற்றோரை எதிர்த்துக் கொண்டு காதல் திருமணம் செய்து கொண்டாயே... அப்போது தெரியவில்லையா, தாய்ப் பாசம் என்னவென்று? அவர்கள் எப்படித் துன்பப்பட்டிருப்பார்கள்; எவ்வளவு கனவு கண்டிருப்பார்கள்? அதையெல்லாம் அவர்கள் மறந்து, உன்னைக் கொண்டாட நினைத்தவேளையில், எல்லாவற்றையும் கெடுத்துப் போட்டுவிட்டார் மாமியார். சரி நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். உனக்கு உன் கணவர் பக்கபலமாக இருப்பதால், அவரைவிட்டே மெள்ள மாமியாரின் குணத்தை மாற்ற முயற்சி செய். 'சொத்து பற்றிய பேச்சையெல்லாம் எடுக்க வேண்டாம்' என்று மாமியாருக்கு புத்திமதி சொல்லச் சொல். பெற்றோர் எங்கிருந்தாலும் நன்றாக இருப்பார்கள் என எண்ணிக்கொண்டு உன் அன்புக் கணவன், குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கையை நகர்த்து. என்றாவது ஒரு நாள் காலம் கைகூடி வரும்!

- எஸ்.ரமாமணி, சென்னை-49