மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி 254

என் டைரி 254

வாசகிகள் பக்கம்

அவமதிக்கப்பட்ட ஆறு ஆண்டு தாம்பத்யம் !

கணவன், மனைவிக்குள் பிரச்னைகள் என்பது சகஜம் என்பதும், அதை எப்படி கையாள்வது என்பதும் தெரிந்தவள்தான் நான். ஆனால், இப்போது எங்களிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னை... எளிதில் தீரும் எனத் தோணவில்லை எனக்கு!

என் டைரி  254
##~##
திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. என் கணவர் ஒரு கல்லூரியில் விரிவுரையாளர். படித்திருந்தும், என் குழந்தையை கவனிக்கும் பொருட்டு வேலைக்குச் செல்லாத இல்லத் தரசி நான். வாழ்க்கை சீரான சந்தோஷத் துடன்தான் சென்று கொண்டிருந்தது, நான்கு மாதங்களுக்கு முன்பு வரை. சமீப நாட்களாக அவருடைய நடவடிக்கைகளில் நிறைய மாற்றம். முக்கியமாக, எஸ்.எம்.எஸ்., கால் என்று செல்ஃபோனுடனேயே இருக் கிறார். வீட்டுக்கு வந்த பிறகும் அவரைத் தேடும் 'கால்'களை 'ஸ்டூடன்ட்ஸா இருக்கும்...’ என்று ஆரம்பத்தில் அலட்சியம் செய்து விட்டேன். ஆனால், டி.வி. பார்க்கும்போது, சாப்பிடும்போது மட்டுமல்ல... குழந்தையுடன் செலவழிக்கும் நேரத்தைக்கூட சுத்தமாக குறைத்து மெஸேஜ் அனுப்பிக்கொண்டே இருப்பது, என் சந்தேகத்துக்கு முதல் புள்ளி வைத்தது.

அன்று அவர் குளிக்கப் போயிருக்க, அந்த நேரத்தில் வந்த மேசேஜை எடுத்துப் படித்தேன். இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், டயல்டு கால்ஸ், ரிசீவ்டு கால்ஸ் என எல்லாம் ஒரு குறிப்பிட்ட எண்ணால் நிரம்பியிருந்தது. மெஸேஜ்களைப் படித்தால், 'சாப்டீங்களா..?’, 'குளிச்சுட்டீங்களா..?’, 'பத்திரமா வீட்டுக்குப் போயிட்டியா..?’, 'தூங்கிட்டியா..?’ என்று நாள் முழுக்க எஸ்.எம்.எஸ்-சிலேயே இருவரும் 'சாட்’ பண்ணியிருந்தார்கள். நேரடியாகவே இதைப் பற்றி அவரிடம் கேட்டேன்.

'ஏய்... அவ என் ஸ்டூடண்ட்பா. ரொம்பச் சின்னப் பொண்ணு. அவளுக்கு வீட்ல சில பிரச்னை. ஏதாச்சும் ஒரு சமயத்துல தற்கொலை அது, இதுனு தவறான முடிவுகள் எடுத்திடாம இருக்க 'மெஸேஜ் சாட்’ல தொடர்ந்து ஃபாலோ பண்ணினேன். அவ்ளோதான். வீட்டுக்கு ஒரு நாள் அழைச்சுட்டு வர்றேன் பாரு’ என்றார் கேஷ§வலாக. தெளிந்தும் தெளியாமலும் இருந்தது என் மனது.

அதற்குப் பின்னும் மொபைலும் கையுமாகவே இருந்தார். 'நான்தான் உங்கிட்ட காரணம் சொல்லிட்டேன்ல...’ என்ற பார்வையுடன் என்னைக் கடந்தார். அன்று நாங்கள் வெளியே சென்றிருந்தபோது, ஏதோ வாங்குவதற்காக குழந்தையை தூக்கிக் கொண்டு அவர் ஒரு கடைக்குள் நுழைய, காரில் மறதியாக விட்டுப் போயிருந்த செல் ஃபோனை அவசரமாக எடுத்து மெஸேஜ்களை படித்த நான்... அந்த நொடியில் செத்தேவிட்டேன். அவர்கள் 'எங்கு சந்திப்பது’ என்பதிலிருந்து வார்த்தைகளில் ஏற்ற முடியாத பல தகவல் பரிமாற்றங்கள் அதில் இருந்தன.

அவரிடம் நான் அதைப் பற்றி கேட்கவில்லை. அவரிடம் நியாயம் கேட்டு, வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லி பஞ்சாயத்து வைத்து, அவர் திருந்தி என்னிடம் வாழ வந்தாலும்கூட, ஆறு ஆண்டு கால தாம்பத்யத்தை ஏமாற்றிய அவரை மன்னிக்க என் மனம் ஒப்பவில்லை.

என்ன முடிவெடுக்கட்டும் தோழிகளே..?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி  254

100

 சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி  254

என் டைரி 253-ன் சுருக்கம்...

வறுமையில் ஆரம்பித்த வாழ்க்கையை வசதியாக மாற்றியமைத்தோம் நானும் என் கணவரும்... யாருடைய தயவும் இல்லாமல்! நாங்கள் கஷ்டப்பட்ட காலங்களில், எங்கே உதவி கேட்டுவிடுவார்களோ என்று எங்களைக் கண்டு ஓடினார்கள் எங்கள் உறவுகள். ஒரே செல்ல மகள், காதலிப்பதாக வந்து சொல்ல, 'படிப்பை முடிக்கிற வரை காத்திரு’ என்று வாக்கு கொடுத்த என் கணவர், இடையில் திடீரென இறந்துபோனது பெரும்சோகம். சடங்குகளுக்காக வந்த உறவினர்கள், 'இவளோ நாள் உறவு வேணாம்னு இருந்துட்டே... இனி உனக்கும் உன் பொண்ணுக்கும் நாங்கதான்’ என்று சொல்லி, என் பெண்ணுக்கு தாங்களாகவே வரனும் தேடுகிறார்கள். 'இத்தனை நாள் இல்லாதவர்கள் இனியும் நமக்கு வேண்டாம்' என்பது என்னுடைய பெண்ணின் வாதம். அவர் இல்லாத சூழ்நிலையில், என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழம்புகிறேன்.

என் டைரி 253-க்கான வாசகிகள் ரியாக்ஷன்...

மகளின் மனம்போல நட!

உழைப்பால் மட்டுமே முன்னுக்கு வந்த நீ, வறுமையில் வாடியபோது எங்கே போனார்கள் இந்த உறவினர்கள்? விதியால் உன் கணவரை இழந்து நிற்கும் இந்த வேளையில் வந்து குட்டையை குழப்பும் அவர்களை நீ துச்சமென விலக்கு.

உன் மகள் காதலித்த பையனைப் பற்றி விசாரித்து தெரிந்து கொள். நல்லவர்களாக இருந்தால்... யோசிக்காமல் திருமண காரியங்களில் இறங்கு. உறவுகளை நம்பி மட்டும் ஆற்றில் இறங்காதே, அவர்கள் இஷ்டப்படி நீ நடந்தால், திருமணம் முடிந்ததும் உன்னை அநாதையாக விட்டுப் போய் விடுவார்கள். அதற்கு பதில் உன் மகளை நம்பு. அவளுக்குப் பிடித்த திருமணத்தை நடத்தி, அவளுடன் உன் மீதி வாழ்க்கையை வாழ்ந்து பார். உலகம் உனக்குப் புரியும்!

- சாந்தி சுந்தர், சென்னை-17

உதவினால்தான் உறவா?!

கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த காலங்களில்... உறவுகள் என்பது அவசியமாக இருந்தது. அவர்களுக்கும் நேரமும் அதிகப்படியாகவே இருந்தது, மற்றவர்களுக்கும் உதவிகள் செய்ய. ஆனால், அவசர உலகமாகிவிட்ட இன்றைய நிலையில், அவரவர் வேலையை பார்க்கவே நேரம் போதவில்லை என்பதுதானே நிதர்சனம். அப்படியிருக்க, உறவுகளின் மீது ஒரேயடியாக கோபம் கொள்வது தவறு. அதுமட்டுமல்ல, உதவி செய்தால் மட்டும்தான் உறவு என்று நினைப்பதும் தவறு. அதேபோல... உறவுகளின் பணியைச் செய்ய இன்றைக்கு நண்பர்களும், அக்கம்பக்கத்தினரும் இருக்கிறார்கள். எனவே, உறவுப் பிரச்னையைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், மகளுக்கு பிடித்தவனையே மணமுடித்து வை. பிரச்னைகள் இல்லாமல் வாழ்க்கையில்லை. உன் மருமகனுக்கோ அல்லது மகளுக்கோ கஷ்டம் வந்தால் நிச்சயம் அவர்களுடைய நண்பர்கள் உதவுவார்கள். எனவே, வீண் சஞ்சலங்களைத் தூக்கி எறி!

- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்  

உரிமையோடு கேள்... உதவிகள் ஓடி வரும்!

'உறவுகள்' என்றவுடனேயே... 'ஒரேடியாக நம்மைக் குழப்பத்தான் வந்திருக்கிறார்கள்' என்று எதற்காக  எண்ண வேண்டும் தோழி? முன்பு கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள், இப்போது மாறியிருக்கலாம் அல்லவா! இப்போது இது எதுவுமே முக்கியமில்லை. மகளின் மனமும், உறவுகளின் மனமும் கோணாமல் இந்தச் சூழ்நிலையைக் கையாள வேண்டும் என்பதுதானே இப்போது முக்கியம். உன் கணவரின் வாக்கையும், மகளின் ஆசையையும் உறவுகளிடம் எடுத்து சொல். உன் மகள் காதலித்த பையன் நல்லவனாக இருக்கும்பட்சத்தில், 'நீங்கள்தான் அவர் ஸ்தானத்தில் இருந்து என் மகளுடைய திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்' என்று உறவுகளிடம் உரிமையோடு பேசு. நிச்சயம் உன்னுடைய வார்த்தைகளை ஏற்பார்கள்.

- செல்வி, அம்பாசமுத்திரம்