புயல் வந்த பூ வனம் !
வறுமையில் இருந்தாலும் சந்தோஷமாக கழிந்த எங்கள் வாழ்க்கை, இப்போது புயல் வந்த பூ வனமாக மாறிக் கிடக்கிறது... கணவரின் சந்தேக புத்தியால்!

அவர் பழைய இரும்பு வியாபாரத் தொழில் பார்க்கிறார். நான் தோட்ட வேலைகளுக்குச் செல்கிறேன். இரண்டு பிள்ளைகள் எங்களுக்கு. வயிறு நிறையும் அளவுக்கே வருமானம். இதுதான் எங்கள் குடும்பத்தின் நிலை.
##~## |
என் கணவர் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். அவருடன் பள்ளியில் படித்த நண்பர்கள் சிலர் வாரத்தில் ஒரு நாள் ஒன்றாகக் கூடி மகிழ்வதை பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கவலை, பொருளாதார ஏற்றத் தாழ்வு எல்லாம் மறந்து, அவர்கள் பேசி, சிரித்து, மகிழ்வதைப் பார்க்கும்போது, எனக்கும் சந்தோஷமாக இருக்கும். அந்த நேரம் தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் 'உர்’ரென இருப்பதுதான் கணவரின் இயல்பு. அதற்கு வறுமையே காரணம் என்பதால், அதை நான் பெரிதுபடுத்த மாட்டேன். பெரிதாகச் சம்பாதிக்க முடியவில்லையே தவிர, மற்றபடி அவர் மிகவும் நேர்மையானவர், எனக்கு உண்மையானவர் என்பதை நான் அறிவேன்.
என் கணவரைப் பற்றி இதே மதிப்பீடு கொண்டிருந்த அவர் நண்பர் ஒருவரும் அதை அவரிடம் சுட்டிக்காட்டி, ''ஏண்டா நீ மட்டும் அதே குடிசை, அதே சைக்கிள்னு அப்படியே வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்கே..? சரியா வருமானம் வரக்கூடிய தொழில் எதையாவது எடுத்து செய். நான் பணம் தர்றேன். நீ சம்பாதிச்சு திருப்பிக் கொடு'' என்று அடிக்கடி சொல்வார். ''அதெல்லாம் வேணாம்...'' என்று மறுத்துவிடுவார் இவர். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து, சலித்துவிட்டேன்.
நாளாக ஆக, என் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் என்னை பயமுறுத்த, அந்த முடிவை எடுத்தேன். கணவரின் நண்பரிடம் சென்று, ''நீங்க கொடுக்கறேன்னு சொன்ன பணத்தை எனக்குக் கொடுங்கறீங்களா..? நான் ஏதாவது தொழில் தொடங்கி, கடனை அடைக்கறேன்...'' என்று கேட்க, அவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு பணத்தைக் கொடுத்தார். என் கணவர் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்பதால், 'தொழில் தொடங்குவதற்கான வேலைகளை முடித்து, கடைசி கட்டத்தில் சொல்லிக் கொள்ளலாம்...’ என்று நினைத்திருந்தேன்.
ஆனால், அதற்கு முன்பாகவே இது என் கணவருக்குத் தெரிய வர, அன்றிலிருந்து இந்தக் கடிதம் எழுதும் வரை வீட்டில் ஒரே பூகம்பம். ''அவனோட எவ்ளோ நாளா பழக்கம்?'' என்று தினமும் அடிதடி போராட்டம். நான் எவ்வளவு எடுத்துக் கூறினாலும் புரிந்து கொள்பவராக இல்லை.
'அந்தப் பணத்தை வைத்து என்ன தொழில் தொடங்கலாம்' என்பதை யோசிக்க வேண்டிய நேரத்தில், 'அதை எப்போது நண்பரிடம் திருப்பிக் கொடுக்கலாம்... அதற்குப் பின் கணவருக்கும் அவருக்குமான நட்பு முறிந்துபோகுமே... அந்த ஆத்ம நண்பர்களின் நட்புக்கு நாமே முற்றுப் புள்ளி வைத்துவிட்டோமே' என்றெல்லாம் தவிக்கிறது என் மனம்.
என்ன செய்யட்டும் நான்..?!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 254-ன் சுருக்கம்
''கல்லூரி விரிவுரையாளர் பதவியில் இருக்கும் கணவர், ஆறு ஆண்டு கால அருமையான தாம்பத்யத்தை மறந்து, தன்னிடம் படிக்கும் மாணவி ஒருத்தியுடன் 'செல்போன் சிநேகம்' பாராட்டுகிறார். ஓயாமல் எஸ்.எம்.எஸ். மூலம் சாட்டிங் நடக்கிறது. கேட்டால், 'குடும்பப் பிரச்னையால் தற்கொலைக்கு முயற்சிக்கும் அவளைக் காப்பாற்றவே இந்த எஸ்.எம்.எஸ்.' என்கிறார். ஆனால், அந்த மெசேஜ்களைப் பார்த்தால்... அப்படித் தெரியவில்லை. இதற்குப் பிறகு, வீட்டுப் பெரியவர்களைக் கூட்டி பஞ்சாயத்து பேசி, திருந்தி வந்தாலும் அவரை மன்னிக்க மனம் ஒப்பவில்லை.
என்ன முடிவெடுக்கட்டும் தோழிகளே?''
என் டைரி 254-க்கான வாசகிகளின் ரியாக்ஷன்...
சந்தேகத் தீயில் எண்ணெய் வார்க்காதே!
அந்த எஸ்.எம்.எஸ்-கள் பற்றி விசாரித்தபோது, 'அவள், என்னுடைய ஸ்டூடன்ட். வீட்டில் சில பிரச்னைகள் இருப்பதால் தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். அவள் மனதை மாற்றத்தான் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி கண்காணித்து வருகிறேன்' என்று விவரமாக கூறியிருக்கிறார் உன் கணவர். அதன் பிறகும் எதற்காக சந்தேகம்? இதிலிருக்கும் உண்மைகளை நீ உணர்ந்து கொள்ள நினைத்தால், உன் கணவரின் போக்கிலேயே போய், அவர் மூலமாகவே அந்தப் பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து பணிவாக உபசரித்து, அவளுக்கு இருக்கும் கஷ்டத்தை தெரிந்துகொள்ள முயற்சிக்கலாமே! அதை விடுத்து, அடுத்தடுத்து சந்தேகத் தீயில் நீயே எதற்காக தொடர்ந்து எண்ணெய் வார்த்துக் கொண்டிருக்கிறாய்? கணவர் சொல்வதில் உண்மை இருக்கும்பட்சத்தில், நீயும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக இரு. பிறருக்கு உதவி செய்து, அதில் கிடைக்கும் சுகத்தை சுவாசித்துப் பார். உன் வாழ்க்கை எப்போதும் பிரகாசமாக இருக்கும்.
- கீதா பிரேமானந்த், சென்னை-68
சிநேகிதியாக மாறு!
ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்ட நிலையிலும், சின்னப் பெண் போல நீ அவசரம் காட்டுவது நல்லதல்ல! 'எடுத்தேன்... கவிழ்த்தேன்' என்று முடிவு கட்டாமல், அவரிடமே இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி நியாயம் கேட்கலாம். உங்கள் குழந்தையின் எதிர்காலம்... அவருடைய கௌரவம் அனைத்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை தெளிவாக எடுத்துச் சொல்லி, அவரை உணர வைப்பது உன் பொறுப்பு. ஒரு பெண், மனைவியாக இருப்பது என்பது... நல்ல சிநேகிதியாக இருப்பதுதான். அதன் மூலம்தான் வாழ்க்கை எனும் ஓடத்தை பத்திரமாக கரை சேர்க்க முடியும். நம்பிக்கையோடு முயற்சி செய். உன் கணவர், மனம் மாற வாழ்த்துக்கள்!
- ஆர்.பிருந்தா, பெங்களூரு
முளையிலேயே கிள்ளி எறி!
சகோதரியே... உன் மனவருத்தம் மிகவும் நியாயமானதே! உன் வாழ்க்கை மட்டுமல்ல... அந்த மாணவியின் வாழ்க்கையும் இதில் சிக்கிக் கொண்டிருக் கிறது. இதை முளையிலேயே கிள்ளி எறியக்கூடிய வழி உன்னிடம்தான் உள்ளது. உன் வீட்டுப் பெரியோர்களிடம் விஷயத்தைச் சொல்லி, உன் கணவரைத் திருத்தி வழிக்குக் கொண்டுவா. பாடம் போதிக்கும் ஆசிரியரே, வழி தவறி நடந்து கொண்டால்... பயிலும் மாணவிகளின் கதி என்னாவது? கணவரைத் திருத்தி வழிக்கு கொண்டு வருவதோடு, அந்த மாணவியையும் தனியே அழைத்து, மனதில் பதியும்படி பெரியோர்களை விட்டு புத்திமதி கூறுவதற்கு ஏற்பாடு செய். இதில் தாமதம் செய்தால்... உன் வாழ்வு மட்டுமல்ல... அந்த மாணவியின் வாழ்வும் கேள்விக் குறியாகிவிடும். இரண்டு பேரும் சிக்கல்களிலிருந்து விடுபட ஆண்டவனை வேண்டுகிறேன் இந்த 75 வயது மூதாட்டி!
- ஆர்.பட்டம்மாள், சென்னை-82
பிடிவாதம் வேண்டாம் தோழியே!
'செல்போன்' என்ற பெயரில் இன்று, அநேகர் வாழ்வில் வில்லன் ஒருவன் நுழைந்து தடம் மாறச் செய்கிறான். அந்த வில்லன் தோழியின் வாழ்க்கையிலும் புகுந்திருப்பது துரதிர்ஷ்டமே!
திருமணமான ஆண்கள் எல்லோரும் மனை வியுடன் திருப்தியாக வாழ்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. கற்பனை செய்து வைத் திருந்த முழுமையான பாத்திரமாக மனைவி அமையாவிடில், வேறு பெண்ணிடம் அந்த நிறைவு தெரிந்தால், அவனை... அவள் ஈர்க்கக் கூடும்.
தோழியின் கணவருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். அந்தப் பெண்ணிடம் ஈர்ப்பு எதனால் என்பதை கணவன் மூலமாகவே அறிந்துகொள்ள தோழி முயற்சிக்க வேண்டும்! 'நான், நீங்க, குழந்தைனு இருக்கும்போது... இடையில் இன்னொரு பெண் எதுக்கு! ஏக பத்தினி விரதனான ராமன் போல் ஆறு ஆண்டுகள் வாழ்ந்த உங்கள் மனதில் சலனம் வேண்டாம். சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பு செய்யும் அயோக்கியராக நீங்கள் மாற வேண்டாம்’ என்று மனம் விட்டுப் பேசினால், நிச்சயம் அந்த மனிதர் மனம் மாறுவார். 'அதைவிடுத்து, 'மன்னிக்க மாட்டேன்' என்று பிடிவாதமான முடிவோடு இந்த விஷயத்தை அணுகுவது தோழிக்கு வாழ்க்கையில் தோல்வியையே உண்டாக்கும்!
- டி.ஜெயசீலி, கோவை