'மாமியாரே... ஏன் இப்படி மாறிவிட்டீர்கள் ?'
வாசகிகள் பக்கம்

காலங்காலமாக இருந்து வரும் பிரச்னைதான்... ஆனால், என் வாழ்வில் முதன் முறையாக சந்திப்பதால் நிலைகுலைந்து நிற்கிறேன். பிரச்னைக்கு காரணம்... என் மாமியார்!
எம்.டெக். பட்டதாரியான எனக்கு, ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது. பெண் பார்க்க வந்தபோது, ''அவன் ஒரே பையன்மா. நானும் அவனும் உன்னை கண்ணப்போல பாத்துக்குவோம்'' என்று என் முகம் வருடி என் மாமியார் ஆசையாகச் சொன்னதுபோது, உண்மையில் அவர் மீது பிரியம் பொங்கியது எனக்கு. 'இவரை அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்கிற உறுதியோடுதான் புகுந்த வீட்டுக்குச் சென்றேன். வேலைக்கு போகும் எண்ணத்தையும் கைவிட்டு, குறையில்லாமல் மாமியாரைக் கவனித்துக் கொண்டேன்.
##~## |
எக்காரணம் கொண்டும் மகனை அவரிடம் இருந்து நான் பிரித்து விடுவேன் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்தேன்.
நான்கு மாத வாழ்க்கை அமிர்தமாக நகர்ந்த நிலையில், இப்போது என் சந்தோஷமெல்லாம் காணாமல் போய்விடுமோ என்று பதற ஆரம்பித்துள்ளேன். மற்றவர்கள் முன்பு என்னிடம் நன்றாகப் பேசும் மாமியார், கடந்த இரண்டு மாதங்களாக வீட்டுக்குள் என்னிடம் வெறுப்பை காட்டுகிறார். எனக்கும் என் கணவருக்குமான இடைவெளியை அதிகரிப்பதில் அவர் முனைப்பாக இருப்பதும் வேதனையாக இருக்கிறது.
வேலை முடித்து வீட்டுக்கு வரும் என் கணவரை சில மணி நேரம்கூட என்னோடு பேச விடாமல், அவர் கண் அசரும் வரை அவரோடு எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறார். ''இந்த வாரம் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போ...'', ''அடுத்த சனி எங்க அக்காவை போய் பார்த்துட்டு வந்துடலாம்டா...'' என்று ஒவ்வொரு வார இறுதியிலும் அவரை அழைத்துக் கொண்டு எங்காவது சென்று வருகிறார். சமீப நாட்களாக இரவு பத்து மணிக்கு மேல் ஆன்மிக பாடல்களை அலறும் ஒலியில் வைத்து கேட்கவும் தொடங்கியுள்ளார்.
வங்கியில் வேலை பார்க்கும் என் கணவர் அலுவலக வேலையாக பத்து நாட்கள் வெளியூர் சென்றிருந்தார். அவர் திரும்பி வரும் நாளன்று, ஆவ லுடன் காத்திருந்தேன். அவர் ஊரில் இல்லாத நேரத்தில் வீடு வீடாகச் சென்று ஊர் கதைகளைப் பேசிக் கொண்டிருந்த மாமியார், மகன் வந்த அடுத்த நிமிடமே, ''உனக்காகத்தாண்டா காத்திருந்தேன். நீ போன மறுநிமிஷத்திலேர்ந்து உடம்பு பாடா படுத்துது. இப்பக்கூட நெஞ்செல்லாம் எரியுது. படபடப்பா இருக்குது'' என்று சொல்லிக் கொண்டே சுவரை தாங்கிப் பிடித்தபடி சரிந்துவிட்டார்.
ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றபோது, ''எல்லாமே நார்மலாதான் இருக்கு. தேவையில்லாமல் பயப்படாதீங்க. வேணும்னா... ஆப்ஸர்வேஷனுக்காக ஒரு நாள் இங்க இருந்துட்டு போங்க'' என்று சொன்னார் டாக்டர்.
உடனே, ''எனக்கென்ன குறைச்சல் டாக்டர்... பக்கத்துலயே இருந்து பார்த்துக்க என் மகன் இருக்கான்'' என்று சொல்லி, உதவிக்கு கணவரையும் கூடவே வைத்துக் கொண்டார். என் கணவர் முகத்தை நான் பார்க்க, அவர் விழிக்க... என்ன சொல்வது?
அடிக்கடி வெளியூர் செல்லக்கூடியவர் கணவர். அதை வைத்துக் கொண்டு இன்னும் என்னவெல்லாம் செய்வாரோ என் மாமியார் என்று பயமாக இருக்கிறது எனக்கு.
இப்போதும் நான் ஊர் மெச்ச என் மாமியாருடன் பிரியத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனால், என் மாமியாரின் நடவடிக்கைகளே என்னையும் ஒரு 'டிபிக்கல்’ மருமகளாக்கி விடுமோ என்று இப்போதெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது.
என்ன செய்யட்டும் நான்..?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
சிநேகிதிக்கு...சிநேகிதிக்கு...
என் டைரி 255-ன் சுருக்கம்

''வறுமையிலும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம் எங்களுடையது. எங்கள் வறுமை நிலைமையைப் பார்த்து, தன் நண்பர் உதவி செய்ய வந்தபோது, வீறாப்பாக மறுத்துவிட்டார் கணவர். குழந்தைகளை நினைத்து கணவருக்குத் தெரியாமல் ஏதாவது பிஸினஸ் செய்யலாம் என்று, அந்த நண்பரிடம் பணம் வாங்கினேன். இது தெரிந்துவிட, 'உனக்கும் அவனுக்கு எத்தனை நாளா பழக்கம்?’ என்று ஆரம்பித்து கொடிய வார்த்தைகளால் வதைக்கிறார் கணவர். நான் அப்பழுக்கற்றவள் என்பதை நிரூபிக்கவும், கணவரின் நட்பு முறிந்துவிடாமல் காக்கவும் என்ன வழி தோழிகளே?''
என் டைரி 255-க்கான வாசகிகளின் ரியாக்ஷன்...
பணத்தைத் திருப்பிக் கொடு!
வீட்டின் பொருளாதாரத்தை உயர்த்த... கணவனும், மனைவியுமாக பாடுபட்டு சம்பாதிக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். வீட்டின் வறுமையை மாற்ற முயற்சிக்காதது உன் கணவரின் குற்றம். குறைந்தபட்சம் நண்பர் கொடுத்த பணத்தையாவது ஏற்றுக் கொண்டு உருப்படியாக உபயோகித்திருக்கலாம். அதை விடுத்து, அந்தப் பணத்தை நீ வாங்கிவிட்டாய் என்பதற்காக, உன்னை நண்பரோடு இணைத்துப் பேசுவது உன் கணவரின் குறுக்குப் புத்தியையே காட்டுகிறது. சூழ்நிலை உனக்கெதிராக திரும்பியிருப்பதால், கணவரின் அனுமதியோடு பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு. அதற்காகச் சோர்ந்துவிடாதே. உன் கணவரை அழைத்துக் கொண்டு வங்கிகளுக்குச் சென்று கடன் பெற்று, அதன் மூலம் உன் குடும்பத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
- கே.ரஞ்சிதமணி, கோயம்புத்தூர்
கோப பேச்சு மாறும்!
என்னதான் உயிரும் உடலுமாக இருந்தாலும், நண்பர்களிடம் கடன் வாங்குவது சிலருக்குப் பிடிக்காது. உன் கணவரும் அந்த ரகமாக இருக்கலாம். அப்படிப்பட்டவரின் மனதைப் புரிந்து கொள்ளாமல் விட்டதோடு, அவருக்குத் தெரியாமல், நீ பணம் வாங்கியது மிக மிகத் தவறு. அந்த ஆத்திரம், கோபத்தில்தான் உன் கணவர் அப்படி பேசியிருப்பார். அது தவறு என்பதை நிதானமாக புரிந்து கொண்டு நிச்சயம் உங்களவர் வருந்துவார். நீங்களும் செய்தது தவறு என்பதை மெள்ள அவருக்குப் புரிய வையுங்கள். அரசாங்க வங்கிகள் மூலமாக எப்படிக் கடன் பெறலாம் என்பதைத் தெரிந்து கொண்டு பிஸினஸில் இறங்கி வெற்றி பெறுங்கள்.
- ராஜி குருசாமி, சென்னை-88
உறவுக்கு மதிப்புக் கொடு!
கணவருக்குத் தெரியாமல் அவர் நண்பரிடம் நீங்கள் பணம் வாங்கியது மிகவும் தவறு. உங்கள் கணவருக்குத் தெரியாமல் பணம் கொடுத்தது அவர் நண்பரின் தவறு. அதனால்தான் கணவருக்கு சந்தேக புகை படர்ந்திருக்கிறது. பணக்காரனாக வாழ்வதைவிட, கடன் இல்லாமல் வாழ்வதே சிறந்தது என்கின்ற கொள்கை உடையவராக உங்கள் கணவர் இருக்கலாம். பணம் என்பது எப்போதும் சம்பாதித்து கொள்ளலாம். உறவுகள் என்பது அப்படி இல்லை. இந்த உண்மையை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் கணவர் நேர்மையானவர் என்று நீங்கள் சொல்லியிருப்பதால், கண்டிப்பாக உங்கள் குழந்தைக்கு வளமான வாழ்க்கையை அவர் அமைத்துத் தருவார். கவலைப்படாமல் உங்கள் கணவருக்கு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.
- எஸ்.சத்யா முத்து ஆனந்த், வேலூர்
சூழ்நிலையை மாற்று!
நடந்தவை கடந்து போனவைகளாகவே இருக்கட்டும். உங்கள் கணவரின் நண்பரிடம் வாங்கிய பணத்தை உங்கள் கணவர் மூலமே திருப்பிக் கொடுத்துவிட்டு, சிறிது காலம் உங்கள் வீட்டை மாற்றிச் செல்லுங்கள். இடமும், சூழ்நிலையையும் மாறினால்... நிச்சயம் உங்கள் கணவர் மாறுவார். அதற்குச் சிறிது காலம் ஆகலாம். கவலைப்படாதீர்கள். வாழ்க்கையில் இனிமேல் உங்கள் கணவருக்குத் தெரியாமல் சிறு துரும்பைக் கூட அசைக்காதீர்கள்.
- ரஞ்சனி, குற்றாலம்