அடங்க மறுக்கும் அன்பு... அலைபாயும் மனது!
##~## |
மாற்றுத்திறனாளியான அவரை, மனதாரக் காதலித்தேன். அவரும் என் மீது உயிராக இருந்தார். திருமணத்துக்கு வீட்டில் பயங்கர எதிர்ப்பு. ''இன்னிக்கு இருக்கிற விலைவாசியில, நல்லா இருக்கற பசங்களாலேயே குடும்பத்துக்கு தேவையானதை சம்பாதிச்சு கொடுக்க முடியல. அப்படிஇருக்கறப்ப, அவரால உன்ன சந்தோஷமா எப்படி வெச்சுக்க முடியும்?'' என்பது போன்ற கேள்விகளால் ஈட்டி பாய்ச்சினார்கள்.
'காதலா... குடும்பமா?’ என்கிற குழப்பம் வந்தபோது, 'என்னவானாலும் சரி... அவருடன்தான் வாழ்க்கை’ என்கிற தீர்க்கமான முடிவுக்கு வந்தேன். ''நான் சம்பாதிச்சி அவரைக் காப்பாத்துறேன்'' என வீட்டில் வீரவசனம் பேசிவிட்டு, அவரைக் கைபிடித்தேன்.
எல்லா கவலைகளையும் விரட்டி, எங்கள் முகத்தில் புன்னகையைத் தவழவிட மகன் பிறந்தான். முழு அன்பையும் கொட்டிக் கொட்டி பொக்கிஷம்போல வளர்த்தோம். யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல், கிடைக்கும் வேலைக் கெல்லாம் சென்று சம்பாதித்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தேன். ஆனால், கடவுளால்கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை போல... கணவர் திடீரென மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். அந்த நிமிடத்தில்இருந்து மொத்த உலகமும் சூன்யமாகிப் போனது.

நிர்க்கதியாக நின்ற என்னை... அப்பா, அம்மாதான் மீட்டெடுத்து, ஆறுதல் சொல்லித் தேற்றினார்கள். மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப இரண்டு ஆண்டுகள் ஆயின. 'குழந்தையைக் காப்பாற்றியாக வேண்டுமே’ என்பதற்காக பனியன் கம்பெனி ஒன்றில் சூபர்வைசர் வேலையில் சேர்ந்தேன். மூன்று ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், கம்பெனியில் இருக்கும் மேலதிகாரி ஒருவர்... வலிய வந்து என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறார்.
'இனி, குழந்தைதான் எல்லாமே' என்கிற முடிவிலேயே நான் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இடைச்செருகலாக வந்திருக்கும் இவரை ஏற்றுக்கொள்ள ஆரம்பத்தில் மனது துளியும் இடம் கொடுக்கவில்லை. ஆனால், தொடர்ந்து துரத்தும் அவர், எனக்கு நம்பிக்கை வரும் விதத்தில் நடக்க... சற்றே தடுமாறுகிறேனோ... என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. வீட்டிலிருப்பவர்களிடம் இதைப்பற்றி சொல்ல மனம் இல்லை. நினைத்து நினைத்து உள்ளுக்குள் குழம்பி, குமுறிக் கொண்டிருக்கிறேன்.
தோழிகளே... அத்தனையையும் உங்களிடம் கொட்டித் தீர்த்துவிட்டேன். நீங்கள் சொல்லப்போகும் பதிலில்தான் இருக்கிறது என் எதிர்காலம்!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 314ன் சுருக்கம்
''பெற்றோர் இல்லாததால், சித்தி வீட்டில்தான் வளர்ந்தேன். தாய்மாமன் முறையில் வந்தவருடன் உண்டான நேசம்... கல்லூரி படிக்கும்போதே கர்ப்பமாக்கியது. அவசர அவசரமாக திருமணம் முடித்து ஒதுங்கிக் கொண்டன உறவுகளும், நட்புகளும். சில ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், அவர் மெள்ள விலக ஆரம்பித்தார். எனக்கு வந்திருக்கும் இதய நோயை மறைத்ததுதான் காரணம் என்பது புரிந்தது. 'தெரிந்தால்... மனது உடைந்துவிடுவார்' என்றுதான் மறைத்தேன். அவரோ... இதை வைத்தே அத்தனை கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாகிக் கிடக்கிறார். 'உண்மையை மறைத்ததால் ஒதுங்கி வாழ்கிறாரா? இதய நோயாளியை கட்டிக்கொண்டு விட்டோமே என்று பாதை மாறிப் போகிறாரா?’ என்பது புரியவில்லை. 'குழந்தையை அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு, எமனிடம் சென்று சேர்ந்துவிடலாமா?' என்கிற எண்ணம் அடிக்கடி துரத்துகிறது. இளைப்பாறுதல் தாருங்கள் தோழிகளே!'

வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
மனமிருந்தால் மார்க்கமுண்டு!
நோய்க்கு முதல் மருந்து... மனோபலம். நாளை என்பது நம்முடைய கையில் இல்லை. என்றோ ஒருநாள் மடியப் போகும் உயிருக்காக, ஒவ்வொரு நாளையும் எண்ணி வருந்துவது... நோயைவிட கொடியது. எனவே, அதை முதலில் விரட்டுங்கள். முன்பு இருந்தது போலவே ஊக்கமும், உற்சாகமுமாக இருந்து குழந்தையை வளர்த்தெடுங்கள். இத்தகைய உங்கள் மனமாற்றத்தாலும், பழைய இயல்பு வாழ்க்கை திரும்புவதையும் காணும் கணவரின் நடவடிக்கைகளிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- தொ.ச.கிரிஜா, மானம்புச்சாவடி
அன்பில் அடங்கும் வாழ்க்கை!
மணவினைக்கு முன்பே, உன்னை அவருக்கு ஒப்படைத்தவள் நீ. உண்மையை அவராகவே அறிந்தபோது... 'இப்படி மறைத்துவிட்டாளே' என்று மறுகியவர் மனஉளைச்சலுக்கு ஆளாகி ஒதுங்க ஆரம்பித்துள்ளார். முதலிலேயே உண்மையைச் சொல்லியிருந்தால்... உன் மீது கரிசனம் மட்டுமல்ல, அளவு கடந்த அன்பையும் காட்டியிருப்பார். காரணம், அவர் உன்னைக் காதலித்து கைபிடித்தவர். தவறு முழுக்க முழுக்க உன் மீதுதான். ஆனாலும் சோர்ந்துவிட வேண்டாம். குழந்தையின் எதிர்காலத்தை நினை. இதயம் நோயில் என்றாலும், அதை போக்குவது உன் மகள் மீது நீ காட்டும் அன்பில்தான் இருக்கிறது!
- டி.சங்கீதா, பெங்களூரு