மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 317

காலனிடம் சென்றுவிட்ட காதல் கணவன்... மறுமணத்துக்கு காத்திருக்கும் மாமன் மகன்!

##~##

 'ஊர் கண்பட்டுவிடும்' என்று சொல்லி, திருஷ்டிப் பொட்டு வைக்காமல் என்னை வெளியே அனுப்பவே மாட்டார் அம்மா. என் அழகைப் பார்த்து, மாமன் மகன்கள் உண்மையாகவே வரிசைகட்டித்தான் நின்றார்கள். ஆனால், 'ப்ளஸ் டூ படிக்குற பொண்ணுக்கு... இப்ப எதுக்கு கல்யாணம்?’ என்று எல்லாவற்றையும் ஒதுக்கித்தள்ளிய அப்பா, மேற்படிப்புக்காக கல்லூரிக்கும் அனுப்பினார்.

படிப்பு நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில், பாழாய்ப் போன காதல்... என் வாழ்விலும் புகுந்தது. சக மாணவரைக் காதலித்த நான்... படிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக கவனத்தை இழந்தேன். மதிப்பெண்கள் குறையக் குறைய... தோழிகள் கேலி செய்ய ஆரம்பித்துவிட்டனர். பெற்றோருக்கும் சேதி தெரிந்து, கண்காணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஒருநாள் காதலனுடன் பேசிக் கொண்டிருந்ததை அப்பா நேரடியாகவே பார்த்துவிட்டார். குற்ற உணர்ச்சி என்னைக் குத்திக்கொண்டே இருந்தாலும், காதலனை விட்டு விலக முடியவில்லை. அப்பா, பலமுறை கண்டித்தும் திருட்டுத்தனமாக சந்தித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் கல்லூரிக்கு அனுப்பாமல், வீட்டிலேயே முடக்கிப் போட்டனர். செய்வதறியாமல் தவித்த நான், காதலனோடு வீட்டை விட்டே வெளியேறி திருமணம் செய்துகொண்டேன். அப்போது எனக்கு வயது 18.

மாமனார் வீட்டில் காட்டப்பட்ட ஆதரவில், பிறந்தகத்தை மறந்தேன். கல்லூரிப் படிப்பை தொடர்வதற்கு மாமனார் வீட்டில் பச்சைக் கொடி காட்டப்பட, அந்த சந்தோஷத்தில் நன்றாகப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், இது கொஞ்ச நாள்கூட நிலைக்கவில்லை. சாலை விபத்தில் கணவரின் உயிர் பறிபோக... 'ராசிஇல்லாதவள்’ என்று கரித்துக் கொட்டியதோடு... வீட்டை விட்டே வெளியேறும் நிலையையும் ஏற்படுத்திவிட்டனர் மாமனார் வீட்டினர்.

என் டைரி - 317

திக்கற்று திரிந்து கொண்டிருந்த என்னை நோக்கி, போனால் போகிறதென்று ஆதரவுக்கரம் நீண்டது அம்மா வீட்டிலிருந்து! இந்த நிலையில், என் சம்மதத்தைக் கேட்காமல், என் பெற்றோரி டம் மட்டும் சொல்லிவிட்டு... 'மறுமணம்' என்கிற பெயரில் பெண் கேட்டு குடும்பத் தோடு வந்தார் மாமன் மகன். திரும்பிச் செல்லும்போது, சாலை விபத்தில் அவருடைய வலது கை பறிபோக... 'ராசி இல்லாதவள்'  என்கிற முத்திரை, அழுத்த மாகப் பதிந்துவிட்டது.

கணவன் பலியான பெருஞ்சோகத்தில் இருந்தே மீள முடியாமல் தவித்து நிற்கும் நிலையில்... வலதுகையை இழந்த மாமன் மகன் வேறு என்னை  வேதனைப்படுத்துகிறார். 'நமக்காக வந்து சென்றபோது கையை இழந்திருக்கிறார்... அதனால், அவரை மறுமணம் செய்து கொள்ளலாம்' என்று ஒரு மனது சொல்கிறது. இன்னொரு மனதோ, 'உன் பாழாய்ப் போன ராசியால், அவர் உயிருக்கே ஆபத்து வந்துவிட்டால்...?' என்று மிரட்டுகிறது.

பெற்றோரிடம் சொன்னால், 'நீ உன் மாமனார் வீட்டுக்கே போய்விடு’ என்கிறார்கள். மாமனார் வீட்டிலோ, 'இங்கே வந்துவிடாதே’ என்று மிரட்டுகிறார்கள்.

இப்படியொரு துரதிர்ஷ்ட நிலைக்கு ஆளாகிவிட்ட எனக்கு... வழிகாட்டுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 316ன் சுருக்கம்

''பிறந்த நிமிடமே குப்பைத்தொட்டியில் வீசப்பட்டு, அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த நான், குழந்தையில்லாத தம்பதிக்கு, ஐந்து வயதில் தத்துப் பிள்ளையாகிப் போனேன். அதன்பிறகு, என் வளர்ப்பு பெற்றோருக்கு அழகான பெண் குழந்தை பிறக்க... அவளிடம் அளவில்லா அன்பைப் பொழிந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் நான் அனாதை என்பது தெரிந்து... அந்நியமாக பார்க்க ஆரம்பித்தவள், தொடர்ந்து வெறுப்பையே உமிழ்கிறாள். 'சொத்துக்காக நான் இங்க இருக்கல. உறவுனு சொல்ல உங்களைவிட்டா யார் இருக்கா...’ என்று தங்கையிடம் சொல்லிக் கதறியும், என்மீது இரக்கம் வரவில்லை. 'ஏன் தாயே... என்னை குப்பைத் தொட்டியில் வீசினாய்’ என்ற புலம்பல்களுடன்தான்  பெரும்பாலான இரவுகள் கரைகின்றன. வீட்டை விட்டு வெளியேறலாம் என்று நினைக்கும்போது அன்பு  காட்டி வளர்த்தெடுத்த தத்து பெற்றோரை உதறிச் செல்ல, மனசாட்சி தடுக்கிறது. அனலில் இட்ட புழுவாகத் துடிக்கும் நான், இனி என்ன செய்ய?''

என் டைரி - 317

வாசகிகள் ரியாக்ஷன்

 ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 317

100

நல்லதே நடக்கும்!

குப்பைத்தொட்டியில் சாகக்கிடந்த உன்னை, எப்போது ஒருவர் காப்பாற்றினாரோ... அப்போதே நீ சாதிக்கப் பிறந்தவள் என்பது உறுதியாகிவிட்டது. எனவே, உன்மீது  வெறுப்பை உமிழும் தங்கையின் குணத்துக்கு மதிப்பளிக்காமல், அன்பைப் பொழியும் வளர்ப்புப் பெற்றோரை நினைத்து, அவர்களுடனேயே இரு. ஒருபோதும் தன்னம்பிக்கையை கைவிடாதே. அதேபோல தங்கையிடம் காட்டும் பாசத்திலும் குறை வைக்காதே. அவள் ஒரு நாள் நிச்சயம் மாறு வாள். நடப்பவை எல்லாம் நல்லவையாகவே நடக்கும்!

- வசந்தி மதிவாணன், அரூர்

காத்திரு... காற்று திரும்பி அடிக்கும்!

ல்லூரியில் படிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்ட நீ, இனி எதற்காகவும் கலங்கத் தேவையில்லை. நல்லபடியாக படித்து முடித்து, அதற்கேற்ற ஒரு வேலையைத் தேடிப்பிடித்து அமர்ந்து கொள். அதன்மூலமாக நீ உன்னை மேலும் உயர்த்திக் கொண்டே இரு. ஒரு கட்டத்தில், 'அக்கா... எனக்கு சொந்தம்னு சொல்லிக்க உன்னை விட்டா யார் இருக்கா?’ என்று இந்த தங்கையே கதறித் தேடி ஓடி வரும் அளவுக்கு காற்று திரும்பி அடிக்கும். என்ன நான் சொன்னபடி நன்றாக படித்து முன்னேறுவாய் தானே!

- என்.சந்திரா, மெய்யம்புளி