என் டைரி - 318
##~## |
படிப்பு, தோற்றம் எல்லாவற்றிலும் நான் சுமார் ரகம்தான். கல்லூரி காலம் வரை, 'ஒன்றும் தெரியாத மக்கு' என்றே இருந்தேன். எம்.காம் முடித்த கையோடு சென்னைக்கு வந்து வேலையில் சேர்ந்து ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஓஹோ என்றில்லாவிட்டாலும், ஓரளவுக்கு நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறேன். பேங்கில் கொஞ்சம் சேமிப்பு இருக்கிறது. ஆனால், முப்பது வயதை அடுத்த வருடம் தொடவிருக்கும் என்னுடைய மிகப்பெரிய கவலையே... 'கல்யாணம்' என்கிற கொடிய வார்த்தைதான்.
''எப்போ கல்யாணம் பண்ணிக்க போறே?'’ என்று வீட்டில் பேச்செடுக்க, எல்லா பெண்களுக்கும் உரிய ஆசையோடு தலையசைத்து வைத்தேன். பலரையும் போலவே, 'நம் படிப்புக்கு ஏற்ற, நல்ல சம்பளத்தில் இருக்கக் கூடிய வரன் கிடைக்க வேண்டும்' என்றே என் மனதும் தேடியது. ஆனால், மார்க்கெட் நிலவரத்தில் எனக்கு அது கைகூடவில்லை. 'சாத்தூர்ல கடை வெச்சுருக்கான்... சொந்த வீடு இருக்கு', 'சூப்பர் மார்க்கெட் வெச்சுருக்கான். சொந்த வீடு, சொத்துனு ஏகப்பட்டது இருக்கு. ஆனா, படிக்கல... ஆளும் கொஞ்சம் கறுப்புதான்' என்பது போன்ற வரன்களே தேடி வந்தன.
ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும், இப்படியான வரன்களை கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்த ஆரம்பித்தனர் பெற்றோர். ''நான் எம்.காம் படிச்சுருக்கேன். ஆனா, படிக்காத ஒருத்தரை கல்யாணம் செய்துக்க சொல்றீங்களே... உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?’' என்று சண்டை போட்டே ஒவ்வொரு முறையும் அதை தடுத்து நிறுத்தி, சென்னைக்குத் திரும்பி வருவேன்.

கடந்த தடவையும் இதேபோன்றதொரு சண்டை வர, ''உன்னோட மொகரைக்கு இவன் கிடைக்கிறதே பெரிய விஷயம். பேசாம கல்யாணம் பண்ணிட்டு போவியா... ரொம்ப பேசுறே'’ என்று பெற்றோரே சொல்லிவிட, மொத்தமாக நொறுங்கிப் போனேன். இத்தனை நாளாக என்னுள் பாதுகாத்து வைத்திருந்த தன்னம்பிக்கை எல்லாம் சுக்குநூறாக உடைந்து போனது. அதன் பிறகு, சொந்த ஊருக்குப் போவ தையே நிறுத்திவிட்டேன். ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், பெற்றோரால் ஏற்பட்ட மனக்காயம், ஆறவேயில்லை. தங்கள் மகளுக்கு ஏற்ற வரனைத் தேடிப் பிடித்து திருமணம் செய்துவைக்கும் என் தோழிகளின் பெற்றோரைப் பார்க்கும் போதெல்லாம் கண்ணீரை அடக்க முடிய வில்லை.
ஏகப்பட்ட வசதிகளோடு வாழ விரும்பவில்லை. ஆனால், எனக்கென்றும் ஒரு சில ஆசைகள் இருக்கும்தானே. அதனால் தான், குறைந்தபட்ச நியாயம் என் பக்கம் இருப்பதாக உணர்கிறேன். படித்த மாப்பிள்ளையாகக் கேட்டது அத்தனை குற்றமா? சென்னை மாதிரியான சூழலில் எனக்கு இணையாக என்னவர் வேலை பார்த்து சம்பாதித்தால் மட்டுமே உயர முடியும் என்று நினைப்பது தவறா?
அதற்காக கடை வைத்திருப்பவர்களைஎல்லாம், நான் இளக்காரமாக நினைக்கவில்லை. வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதே என் முடிவு. இதுவே, நானாக தேடிக் கொண்ட வரனாக இருந்திருந்தால், கடை வைத்திருக் கும் என்னவருடன் இணைந்து உழைத்து அவரை முன்னுக்கு கொண்டுவர பாடுபட் டிருப்பேன். ஆனால், 'யாராவது ஒருவர் தலையில் கட்டிவிட்டால்... நம் கடமை முடிந்தது' என்ற நினைப்போடு என்னை தள்ளிவிட பார்க்கிறார்களே எனும்போது கோபம் பொங்குகிறது.
இத்தகைய சூழலில், 'கசப்போடு ஒரு வரின் கைபிடிப்பதைவிட, திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்துவிடலாம்' என்கிற முடிவுக்கு இப்போது வந்துவிட்டேன். இப்போது நான் நிம்மதியாக இருப்பதாகவும் உணர்கிறேன். நான் செய்தது சரியா... தவறா..? சொல்லுங்கள் தோழிகளே!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 317ன் சுருக்கம்
'மாமன் மகன்கள் வரிசைகட்டி நிற்க... ப்ளஸ் டூ முடித்து, கல்லூரியில் சேர்ந்த நான், அங்கே சக மாணவரை காதலித்து கைபிடித்து, மாமனார் வீட்டு ஆதரவோடு வாழ்க்கையைத் துவக்கினேன். ஆனால், சாலை விபத்தில் கணவர் உயிரிழக்க, 'ராசியில்லாதவள்’ என்கிற முத்திரை யோடு வீட்டைவிட்டு வெளியேறினேன். திக்கற்று நின்ற என்னை, பெற்றோர் மறுபடியும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் 'மறுமணம்’ செய்துகொள்கிறேன் என்று வீடு தேடி வந்து தன் விருப்பத்தைச் சொல்லிச் சென்ற மாமன் மகன், வழியிலேயே விபத்தில் சிக்கி வலது கையை பறிகொடுக்க... 'ராசியில்லாதவள்’ முத்திரை மேலும் அழுத்த மாகிவிட்டது. 'மறுமணம் செய்துகொள்’ என்று ஒரு மனம் சொல்கிறது. இன்னொரு மனமோ, 'பாழாய்ப்போன ராசி யால் அவர் உயிருக்கே ஆபத்து வந்துவிட்டால்...’ என்று மிரட்டுகிறது. எனக்கு வழிகாட்டுங்கள் தோழிகளே!''
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
புது வாழ்க்கைக்குத் தயாராகு!
இன்றைய அவசர உலகத்தில் அன்றாடம் விபத்துக்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 'உன் ராசியால்தான் விபத்துக்கள் நிகழ்ந்தன’ என்று மற்றவர்கள் அறியாமையால் கூறினால், நீயும் அதையே நினைத்து, வருத்திக் கொள்ளாதே! மாமன் மகனுக்கு உன் மேல் உண்மையான அன்பு என்றால், தாராளமாக மணம் செய்துகொள்ளலாம். பழையனவற்றை மறந்து, புதிய வாழ்க்கைக்குத் தயாராகு!
- கே.ஜெயலஷ்மி, போரூர்
காரியம் யாவிலும் கை கொடு!
நீ மிகவும் ராசியானவள். அதனால்தான் மாமன் மகன் உயிருக்கு ஆபத்து வராமல், தப்பியிருக்கிறார். பழைய வாழ்க்கையைப் பற்றி தெரிந்தும் மாமன் மகன் மணக்க முன் வந்துள்ளதால், உன் மேல் மிகவும் ஆசையோடு கண்ணின் மணி போல பார்த்துக் கொள்வார். எனவே, அவரை மணந்து... அவர் காரியம் யாவிலும் கை கொடுத்து, வாழ்க்கையில் முன்னேறு!
- என்.விசாலாட்சி, விருகம்பாக்கம்
ராசி என்பது மாயை!
இளையராஜா, முதன்முதலில் இசை அமைக்க ஆரம்பித்தபோது 'கரன்ட் கட்’ ஆனதாம். 'ராசியில்லாதவன்' என்று அவரை ஒதுக்கியிருந்தால்... இத்தனை பேரும் புகழும் பெற்றிருக்க முடியுமா? 'உன் மாமன் மகன், உனக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையா...?’ என்பதை மட்டுமே யோசி... மற்றவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளு!
- ஸ்வர்ணா திருமூர்த்தி, திருக்கானூர்பட்டி