மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்  டைரி  - 320

கனவாகவே கருகிவிடுமோ சொந்த வீடு!!

##~##

ஐந்து மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் ஆண், பெண் என இரண்டு குழந்தைகள். சந்தோஷத்துக்குக் குறைவில்லாத குடும்பம். நானும் அவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால், இருவருடைய சம்பளமும் சேர்த்து மாதம் 40 ஆயிரம். கௌரவமான மிடில் கிளாஸ் வாழ்க்கை. பின் கவலை எதனால்? திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் சொந்த வீடு இல்லை என்பதுதான்.

இருவர் வீட்டிலுமே எங்களுக்காக சொத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை. சொந்த வீடுகூட இல்லாமல் காலத்தை ஓட்டிய பெற்றோர்களை நினைக்கும்போதெல்லாம், 'நாம நிச்சயமா சொந்த வீடு வாங்கணும்...’ என்கிற ஆசை, ஏக்கம், வெறி மனதுக்குள் ஏறும். ஆனால், வாடகை, மளிகை, குழந்தைகளின் படிப்புச் செலவு என்றே இருவரின் சம்பளமும் கரைவதாலும்... மீதம் ஐயாயிரம் ரூபாய் இருந்தால்கூட சொந்தங்களின் திருமணம், மருத்துவச் செலவு, பிள்ளைகளின் ஆசைக்கு ஹோட்டல், டூர் என்றே செலவு ஆகிவிடுவதாலும், 'சொந்த வீடு' என்பது கனவாகவே இருக்கிறது!

நான் அத்தனை பெரிய செலவாளியும் இல்லை, சிக்கனமும் இல்லை. ஆனால், ஏதோ ஒரு குற்ற உணர்வு உறுத்துகிறது. ஐந்து ரூபாய்க்குக்கூட கணக்குப் பார்க்கும் பெண்களைப் பார்த்தால், 'இத்தனை சிக்கனமாக இருந்திருந்தால், நிச்சயம் புழங்குவதற்கு ஏற்ற அளவில் ஒரு குட்டி வீடாவது வாங்கியிருக்கலாமோ..?’ என்று ஆற்றாமையாக வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை, வீட்டு உரிமையாளர்களின் தொல்லையால் வேறு வீடு தேடும் போதெல்லாம், 'என்ன பிழைப்பு பிழைக்கிறாய் நீ?’ என என் மீதே வெறுப்பு வருகிறது. 'இதெல்லாம் ஒரு சம்பளமா, வீடு வாங்கக்கூட வக்கில்லாம...’ என்று கணவரிடம் சண்டையும் போடுகிறேன்.

என்  டைரி  - 320

குழந்தைகளின் கல்லூரி செலவு வருவதற்குள்ளாகவாவது, சொந்த வீடு வாங்கிவிடலாம் என்றால், குறைந்தது 40 லட்சத்துக்கு மேல் தேவைப்படுகிறது. இருக்கும் நகையை அடகு வைத்து, மேற்கொண்டு லோன் போட்டு என்று எத்தனை திட்டமிட்டாலும் பணப் பற்றாக்குறையே மிஞ்சுகிறது.

இப்போதெல்லாம் தினமும் எழுந்தாலே சொந்த வீடு பற்றிய நினைப்பு பற்றிக்கொண்டு, மன உளைச்சலாகிறது. சொந்த வீடு என்பது கானல் நீராகவே போய்விடுமோ என்று மனம் பித்துப் பிடிக்கிறது. தெளிவதெப்படி தோழிகளே..?!

- கனவுகளுடன் காத்திருக்கும் 'அவள்’ வாசகி

என்  டைரி  - 320

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 319ன் சுருக்கம்

''எனக்கு 20 வயதில் திருமணமானது. சந்தேகப் புத்தியுள்ள கணவருடன், இந்த 10 ஆண்டுகளாக நான் வாழ்ந்த வாழ்வு, அத்தனை ரணமானது. 'இனி முடியவே முடியாது' என்ற நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரைப் பிரிந்து, ஐந்து வயது மகனோடு தனியாக வாழ்கிறேன். அரசு நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக என்னவர் திடீர் என்று இறந்துவிட்டார். அவருடைய வங்கிக் கணக்கில், வாரிசு என்கிற இடத்தில் அவருடைய அப்பாவின் பெயர் இருக்க... எனக்குத் தெரியாமல் பெரும் தொகையை எடுத்தும்விட்டார்கள். கஷ்ட ஜீவனத்திலிருக்கும் என் மீதும், அவர் மகன் மீதும் துளியும் கருணை காட்ட மறுக்கிறார்கள், அவருடைய குடும்பத்தார். சட்ட உதவியை நாடவும் பொருளாதார சூழல் இடம்கொடுக்கவில்லை. வழிகாட்டுங்கள் தோழிகளே!''

வாசகிகள் ரியாக்ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என்  டைரி  - 320

100

துவண்டு விடாதே!

உன்னைப் போன்று பல பெண்கள் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். உன்னைப் போன்றோருக்காகவே பெண்கள் அமைப்புகள், மாதர் சங்கம், இலவச சட்ட அமைப்புகள் இயங்குகின்றன. நம்பிக்கையான உறவினர் அல்லது தோழியுடன் நீ வசிக்கும் ஊரில் அவற்றை கண்டு பிடித்து நேரில் போய் பார். உங்களுடைய திருமண பத்திரிகை, உங்கள் இருவர் பெயர் கொண்ட ரேஷன் கார்டு போன்ற ஆதாரங்களை பத்திரப்படுத்தவும். அரசுப்பணியை தொடர்ந்து கொண்டே, இதையும் செய்து வாருங்கள். நிச்சயம் சாதகமான தீர்ப்பு கைகூடும்!

- மீனா, சென்னை

கவலை கொள்ளாதே!

மனைவியின் உரிமைகளை அத்தனை எளிதில் யாரும் பறித்துவிட முடியாது. பயப்படாதே. கணவரின் சொத்துக்கள் மனைவி மற்றும் வாரிசுகளுக்கு மட்டுமே சொந்தம். சட்டத்தின் உதவியை நாடு. நல்லதே நடக்கும்.

- பிரமிளா, மதுரை

என்  டைரி  - 320

இந்தத் தோழிக்கு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் சொல்லும் ஆலோசனைகள்...

''பிரிந்து வாழ்ந்தாலும், விவாகரத்து ஆகாத வரை, நீங்கள் அவருக்கு மனைவிதானே. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழும் போதும் (ஏன் விவாகரத்து ஆன பிறகும்), மனைவியையும் மைனர் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு கணவனுக்கு உண்டு. கணவனிடமிருந்தோ அல்லது அவரது சொத்துக்களிலிருந்தோ பராமரிப்புத் தொகையைப் பெற மனைவிக்கு உரிமை உண்டு.

கணவர் இறந்த பிறகு, அவர் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை 'நாமினி’ என்ற முறையில் அவரின் தந்தை பெற்றிருந்தாலும் அவருக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. வங்கியிலிருந்து பெற்ற பணத்தை வாரிசுகளுக்கு பிரித்துத் தர வேண்டிய கடமை 'நாமினி'க்கு இருக் கிறது. கடமை தவறியதால் அந்தப் பணத்தை ஒப்படைக்கக் கோரி அவர் மீது வழக்கு தொடரலாம்.

இந்து மதத்தைச் சேர்ந்த ஆணுடைய சொத்தில், தாய், மனைவி, குழந்தைகள் ஆகியோருக்கு தலா ஒரு பங்கு உரிமை உள்ளது. உங்கள் கணவர் பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் அவருக்கு சேர வேண்டிய சொத்துக்கள் விவரத்தை சேகரியுங்கள். உங்கள் கணவரின் சொத்தில் உங்களுக்கும், மகனுக்கும் உள்ள மூன்றில் இரண்டு பங்கு சொத்தை பிரித்து தர நீதிமன்றத்தை அணுகலாம். பொருளாதார சிக்கலில் உள்ளவர்களுக்கு உதவ எல்லா நீதிமன்றங்களிலும் 'இலவச சட்ட உதவி மையம்’ செயல்படுகிறது. தாராளமாக அணுகுங்கள்.''