மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்  டைரி  - 321

ஃபாரின் மாப்பிள்ளை... பரிதாப வாழ்க்கை!

##~##

'தனக்கு வரப்போகும் கணவர் அழகிலும், வசதியிலும் சிறப்பாக இருக்க வேண்டும்’ என்பது என் அக்காவின் விருப்பம். அவளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வரன் என்று சொல்லி, புரோக்கர் கொண்டுவந்து கொடுத்தார் ஒரு ஜாதகம். ''நல்ல வசதி, மாப்பிள்ளை வெளிநாட்டில் இருக்கார், கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்புதான் வருவார்'' என்று அவர் சொல்ல, மாப்பிள்ளையின் பெற்றோர் வந்து பெண் பார்த்து நாள் குறித்தனர். மாப்பிள்ளையின் புகைப்படம் ஒன்றைக் கொடுத்துச் சென்றனர்.

வெளிநாட்டில் இருந்து அவ்வப்போது அக்காவுக்கு போன் செய்வார் மாப்பிள்ளை. இடைப்பட்ட மூன்று மாதங்களில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. திருமணத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு, மாப்பிள்ளை ஊருக்கு வந்துவிட்டார் என்ற தகவல் சொன்னார்களே தவிர, நேரில் வந்து அக்காவைப் பார்க்கவில்லை. 'நேரமில்லை', 'பெரியவர்கள் தடுக்கின்றனர்' என்றெல்லாம் ஏதேதோ காரணம் சொன்னார் மாப்பிள்ளை.

ஒருவழியாக முகூர்த்த தேதியும் வந்தது. மாப்பிள்ளை அழைப்பின்போதுதான் அவரையே நேரில் பார்த்தோம்... அதிர்ந்து போய் நின்றோம். வழுக்கை விழுந்து, வயதானவராக தோற்றமளித்தார். செய்வதறியாமல், யாரை, என்ன கேட்பது என்று புரியாமல் நாங்கள் மறுகிக் கொண்டிருக்கும்போதே, அக்காவின் கழுத்தில் தாலி ஏறியது. பிறகுதான் தெரிந்தது அவர், 16 வயது மூத்தவர் என்று. 10 ஆண்டுகளுக்கு முன் எடுத்த போட்டோவைக் கொடுத்து ஏமாற்றிவிட்டனர்.

என்  டைரி  - 321

அழுது அரற்றிய அக்காவுக்கு, புகுந்த வீட்டில் காத்திருந்தன அடுத்தடுத்த அதிர்ச்சிகள்! அவர்கள் கூறியதுபோல வீட்டில் எந்த வசதியும் இல்லை. எங்களைவிட மிகவும் பின்தங்கிய பொருளாதாரமே இருந்தது. குடிப்பது, வீட்டுக்குத் தாமதமாக வருவது என்று மாப்பிள்ளையின் நடவடிக்கைகளும் சகித்துக்கொள்ள முடியவில்லை. 'எந்த சந்தோஷமுமே இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்' என்று நான்கே மாதத்தில் திரும்பிவிட்டாள் அக்கா. அக்காவின் வாழ்க்கை பாழாய்போனது ஒருபக்கமிருக்க... அடுத்தடுத்து திருமணத்துக்கு காத்திருக்கும் என்னையும், என் தங்கையையும் நினைத்து நினைத்து மனம் வெதும்பிப் போய் உள்ளனர் பெற்றோர்.

இப்படி மோசடி செய்து எங்கள் குடும்பத்தையே நிலை குலைய வைத்திருக்கும் அந்த மாப்பிள்ளை வீட்டாரை எப்படி தண்டிப்பது..? ''போலீஸ் கம்ப்ளெயின்ட்டுனு எல்லாம் போனா, என்னால் தாங்கிக்க முடியாது... வேண்டாம்'' என்று மறுகும் என் அக்காவின் வாழ்க்கை சீராக என்ன செய்வது?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 320  ன் சுருக்கம்

''திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றன. ஐந்து மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் ஆண், பெண் என இரண்டு குழந்தைகள். நானும் கணவரும் வேலையில் இருக்கிறோம். ஒட்டுமொத்த சம்பளம் நாற்பதாயிரம். வீட்டு வாடகை, படிப்பு, மளிகை, குடும்பம், கேளிக்கை என மாத தொடக்கத்திலேயே கையில் வெறும் ஆயிரங்களில் மட்டுமே மிஞ்சுகிறது. ஒவ்வொரு முறையும் வீட்டு ஓனர்களால் நாங்கள் படும் அவதியை நினைக்கும்போதெல்லாம், 'சொந்த வீடு வாங்க முடியலையே' என்ற ஏக்கம் எழுந்து, 'இதெல்லாம் ஒரு சம்பளமா, வீடு வாங்கக்கூட வக்கில்லாம...' என்று கணவரின் மீது கோப மாகத் திரும்பும். இப்போதெல்லாம் தினமும் எழுந்தவுடனேயே வீடு பற்றிய நினைவு எழுந்து மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. மனம் தெளிய வழி சொல்லுங்கள் தோழிகளே!''

என்  டைரி  - 321

வாசகிகள் ரியாக்ஷன்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என்  டைரி  - 321

100

ஹோம்லோன் போடு!

வாடகை வீட்டு உரிமையாளரின் தொல்லையிலிருந்து மீள, சொந்த வீடு அவசியமே. கையில் பணம் சேர்த்துக் கொண்டு எல்லோருமே வீடு வாங்குவதில்லை. ஹோம்லோன் போட்டுத்தான் பலரும் வாங்குகிறார்கள். வாடகைப் பணத்தை வைத்து உங்களுடைய லோன் தவணையை கட்டலாம். மேலும் ஹோட்டல், ஆடம்பர பண்டிகை, அதிக விலையில் துணி எடுத்தல், விலை உயர்ந்த ஃபர்னிச்சர் என்பதையெல்லாம் யோசிக்காமலிருந்தாலே... சிக்கனம் உங்கள் வசப்பட்டுவிடும். குழந்தைகளுக்கு லோன் மற்றும் சிக்கனத்தின் அத்யாவசியத்தை புரியவைத்தால், கடன் அடைக்கிற சுமை உங்கள் மனதை அழுத்தாது. அகலக் கால் வைக்காமல், சிறுவீடு கட்டி, நிம்மதியான வாழ்க்கைக்கு அஸ்திவாரமிடுங்கள்.

இந்துமதி தியாகராஜன், கோயம்புத்தூர்

சிக்கனம்... தேவை இக்கணம்!

அன்பு சகோதரியே, உங்கள் இருவர் சம்பளமும் சேர்த்து 40 ஆயிரம் என்கிறாய். அதில் வாடகை, மளிகை, குழந்தைகளின் படிப்புச் செலவு என எல்லாவற்றையும் 20 ஆயிரத்துக்குள் அடக்கிவிடு. ஒவ்வொரு மாதமும் இறுக்கி பிடித்து 15 ஆயிரம் சேமிப்பாக இருப்பது போல கட்டுக்குள் கொண்டு வா. முதல் இரண்டு மாதம் திணறித்தான் போவாய். மூன்றாவது மாதம், சிக்கனத்தின் வாசல் உனக்கு வழிகாட்டும்.  இப்படி சேமிக்கும் பணத்தைக் கொண்டு, நிச்சயம் வீடு வாங்க முடியும். சிக்கனம் மட்டுமே உயர்வைத் தரும் என்பதை கவனத்தில் கொள்!

ஏ.ஆர்.லெட்சுமி, தென்காசி