மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்  டைரி  - 322

என்  டைரி  - 322

என்  டைரி  - 322

னக்கும் கணவருக்கும் மனதளவில் பொருந்தவில்லை என்பதே என் பிரச்னை!

 டிகிரி முடித்திருந்தாலும், கிராமத்துப் பெண்ணின் குணங்களே... என் இயல்பு. வீட்டு உறவுகள் தவிர வேறு யாரிடமும் முகம் கொடுத்துப் பேசமாட்டேன். கணவர், பெரிய நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கு நிறைய நண்பர்கள், தோழிகள். திருமணம் ஆன புதிதிலேயே அவரின் நட்பு வட்டத்தைச் சொல்லி, ''என்னுடைய லைஃப்ல இவங்க எல்லாருக்கும் இடமிருக்கு. ஆனா, அவங்களுக்கான மரியாதையும், நேரமும் உன்னைப் பாதிக்காது'' என்றபோது, என்னால் அதை புரிந்துகொள்ளவோ... ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.

ஆரம்ப நாட்களில் புதுப் பொண்டாட்டியைச் சுற்றி வருவது... தினமும் பூ, மாதம் ஒரு புடவை வாங்கித் தருவது... உறவினர்களின் வீட்டுக்கு விருந்துக்குச் செல்வது என்ற ஆசைகள் எனக்கிருந்தன. ஆனால், புத்தகங்கள் வாங்கி வருவது, எப்போதும் ஒரு நெளிவு சுளிவில்லாத நியாயத்துடனே எல்லா விஷயங்களையும் அணுகுவது, என்னை மேற்படிப்பு படிக்கச் சொன்னது என என் எதிர்பார்ப்புகளில் இருந்து வெகு தொலைவில் நின்றார் அவர். அதுபோன்ற சமயங்களில் நான் கோபித்துக்கொண்டு... அவர் என்னை வந்து தாங்குவார், சமாதானம் செய்வார்

என்  டைரி  - 322

என்று காத்திருப்பேன். அவரோ, ''அப்படி செய்தா... நான் சொன்னது தப்புனு ஆகிடும்'' என்று கடுப்பேற்றுவார்.

''என் பொறந்த வீட்டுல சொன்னா, உங்களை 'உண்டு... இல்லை’னு பண்ணிடுவாங்க'' என்று நான் விளையாட்டாக பேசினால்கூட, ''இந்த கெத்தெல்லாம் எரிச்சலா இருக்கு. இயல்பா இரு ப்ளீஸ்...'' என்பார். எங்களுக்கிடையில் சண்டை வந்தால், என் அம்மா மற்றும் சித்தியிடம் சொல்வது என் வழக்கம். ''நமக்குள்ள என்ன பிரச்னைனாலும் அதை என்கிட்ட பேசு. நான் விளக்கம் சொல்றேன். இனி உன் சொந்தக்காரங்க யாரும் நம்ம வீட்டுக்கு வரக்கூடாது'' என்று இறக்கினார் பெரிய இடியை. ''சொந்தமெல்லாம் இல்லாமல் எனக்கு வாழத் தெரியாது'' என்று அழுதேன் நான். நிமிடத்துக்கு நூறு வார்த்தை பேசும் எனக்கு, நூறு வார்த்தைகளுக்கும் ஒற்றை வார்த்தையில்தான் பதில் தருவார் அவர். இப்படி எங்களுக்குள் எந்த விஷயத்திலும் பொருத்தம் இல்லை என்பது போகப்போகத்தான் புரிந்தது.

ஒரு கட்டத்தில் ''நமக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் வர்றவரைக்கும் குழந்தை வேண்டாம்'' என்று அவர் சொன்னபோது, அதிர்ந்தேன். ஒரு வழியாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொண்டோம். இப்போதும் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. ''என் ஃப்ரெண்ட் போல இரு...'' என்கிறார். மனைவியைத் தோழியாக்கும் கல்ச்சர் எனக்குப் பிடிபடவில்லை... பிடிக்கவில்லை. எல்லோருக்கும் இருக்கும் கனவு போல, என்னைச் சுற்றி அவர் இயங்க வேண்டும் என்றே நான் ஏங்குகிறேன்.

நான் செய்வது சரி என்று புரிகிற அதேசமயம், அவருடைய பேச்சும் நடத்தையும் நியாயம்தான் என்பதையும் உணர்கிறேன். ஆனால், எங்களுக்குள் ஒத்துப்போகவில்லையே? ஒரே வீட்டில் கடமைக்கு வாழ்கிறோம். வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்ற வழி இருக்கிறதா தோழிகளே?!  

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என்  டைரி  - 322

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 321ன் சுருக்கம்

'நல்ல வசதி, வெளிநாட்டில் வேலை' என்றபடி மாப்பிள்ளையின் போட்டோவும் தரகர் மூலமாக வந்து சேர, இருவீட்டு சம்மதத்தின்பேரில் அக்காவுக்கு திருமணம் ஏற்பாடானது. முன்கூட்டியே ஊருக்கு வந்துவிட்டாலும், நேரில் தலைகாட்டாமலே இருந்தார் மாப்பிள்ளை. திருமணத்துக்கான மாப்பிள்ளை அழைப்பின்போது நேரில் பார்த்த நாங்கள் அதிர்ந்தேபோனோம். வழுக்கை விழுந்து, வயதானவராக தோற்றமளித்த அவர், 10 ஆண்டுக்கு முன்பு எடுத்த போட்டோவை தந்து ஏமாற்றியிருக்கிறார். 'என்ன செய்வது?' என்று யோசித்து முடிப்பதற்குள்ளாகவே தாலி ஏறிவிட்டது. அதுமட்டுமா... குடிப்பது, வீட்டுக்கு தாமதமாக வருவது என்ற மாப்பிள்ளையின் நடவடிக்கைகள் ஒருபுறம்... புகுந்த வீட்டு மனிதர்களின் இம்சைகள் மறுபுறம் என்று நான்கே மாதத்தில் பிறந்தகம் திரும்பிவிட்டாள் அக்கா. மோசடி செய்த அந்த மாப்பிள்ளை வீட்டாரை எப்படி தண்டிப்பது? 'போலீஸுக்கு போக வேண்டாம்' என்று சொல்லும் அக்காவின் வாழ்க்கை சீராக என்ன செய்வது?

வாசகிகள் ரியாக்ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என்  டைரி  - 322

100

கெட்ட கனவாக நினை!

ஃபாரின் மாப்பிள்ளை என்றதுமே, எதைப் பற்றியும் யோசிக்காமல் தலையாட்டுவது நம்முடைய முதல் பலவீனம். அவனுடைய பின்புலம் என்ன என்பதை, அவன் ஊருக்குள் சென்று விசாரிக்காதது அடுத்த தவறு. என்னதான் அவசரம் என்றாலும், மாப்பிள்ளையை நேரில் பார்க்காமல் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டது மூன்றாவது தவறு. இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால், நடந்ததை ஒரு கெட்ட கனவாக எண்ணி, முறைப்படி அவனிடம் விவாகரத்து வாங்குவதுதான். படித்திருந்தால், வேலைக்கு முயற்சி செய். படிப்பை பாதியில் விட்டிருந்தால், மீண்டும் தொடர்வதற்கான முயற்சியில் இறங்கு. காலம், உன் மனக்காயத்துக்கு மருந்து போடும். அதன்பிறகு, உன் நிலை உணர்ந்து உன்னை ஏற்றுக்கொள்ள வேறு ஒருவன் வருவான். திருமணம் செய்துகொண்டு வாழ்வை நல்லபடியாக நடத்து.

- டி.மலர்வேணி, வேலூர்

புது வாழ்வைத் தொடங்கு!

ருமை மாட்டை தண்ணீரில் இருக்கும்போது விலைபேசி வாங்கிய கதை போல இருக்கிறது நீங்கள் ஏமாந்த செயல். இப்படி பலபேர் மாப்பிள்ளை விஷயத்தில் பிறர் சொல்வதை நம்பி ஏமாறுகிறோம். உங்களை ஏமாற்றியவனை தண்டிக்க போதிய ஆதாரங்கள் வேண்டும். அந்த எத்தனிடமிருந்து டைவர்ஸ் வாங்கி, ஏற்றம் மிக்க புது வாழ்வை அக்காவுக்கு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும், அக்காவின் வாழ்க்கை சிக்கல், தங்கைகளின் திருமணத்துக்குத் தடையாக இருந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது என்பதையும் மனதில் கொண்டு நம்பிக்கையோடு முயற்சியுங்கள்.

- வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்