மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 323

வாசகிகள்

என் டைரி - 323
##~##

ந்திமத்தில் இருக்கும் நான், வாழப்போவது இன்னும் எத்தனை நாட்களோ..! ஆனால், 'இருக்கும் வரையில் சுதந்திரமாக சுவாசிப்போம்' என்று ஏங்குகிறது என் மனம்.

எனக்கு வயது 63. கௌரவமான அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவள். ஆனால், இத்தனை ஆண்டுகளில் ஒரு நாளும் நிம்மதியாக வாழ்ந்ததாக ஞாபகம் இல்லை. காரணம், புகுந்த வீடும் கணவரும்தான். மணமான நாள் முதலாக... மாமனார், மாமியார், நாத்தனார் கொடுமைகள் தொடங்கிவிட்டன. எந்தப் பிரச்னை என்றாலும், 'என்ன நடந்தது?' என்ற விசாரணைகூட இன்றி, தன் அப்பா, அம்மா, தங்கைகளை துளியும் விட்டுக்கொடுக்காமல், என்னையே குற்றவாளியாக்கி புண்படுத்துவார் கணவர்.

என்னுடன் பிறந்தவர்கள் 8 பேர். ஒருவேளை அவர்கள் எனக்கு ஆதரவாக புகுந்த வீட்டில் வந்து பேசினாலும், அச்சில் சொல்ல முடியாதபடி அவர்களை அசிங்கமான வார்த்தைகளால் புகுந்த வீட்டினர் அவமானப்படுத்த, 'எங்களுக்கு இது தேவையா..!’ என்று என்னை நிராதரவாக விட்டுவிட்டு ஒதுங்கிவிட்டனர். ஒருமுறை அவரைப் பிரிந்து சென்று தனியாக வாழ்ந்தபோது, காலில் விழுந்து அழைத்து வந்தார். ஆனால், மீண்டும் அன்பு துளியும் இல்லாத அடிமை வாழ்க்கையே தொடர்ந்தது.

என் டைரி - 323

'குழந்தை பிறந்தால், நம் வாழ்வுக்கு ஒரு பற்று கிடைத்துவிடும்' என்று பொறுமையாக இருந்தேன். ஆனால், அந்த பாக்கியம் எனக்கு வாய்க்காமலே போய்விட்டது. இந்தக் குறையைச் சொல்லிச் சொல்லி... புழுவினும் கேவலமாக அலட்சியப்படுத்தினர் புகுந்த வீட்டினர். ஆனால், குழந்தையின்மைக்கான பரிசோத னைக்கோ, சிகிச்சைக்கோ... என்னையும் அழைத்துப் போனதில்லை, தானும் வர நினைத்ததில்லை என் கணவர்.

'யாருக்குக் குறைனு டாக்டர்கிட்ட போனாதானே தெரியும்’ என்று பொறுமைஇழந்து சில சமயங்களில் நான் வெடித்தால்... அடி, உதை என காயப்படுத்துவார் என் அகம்பாவக் கணவர். இந்தக் கொடுமைகள் எல்லாம் போதாது என்று, இந்த அறுபது வயதிலும், இருபது வயதுபோல அவரின் சந்தேக புத்தி அவரை விட்டுப் போகவில்லை. நான் யாருடனும் பேசக்கூடாது... யாரும் வீட்டுக்கு வரக்கூடாது.

இதுவரை இல்லாத அந்த ஞானோதயம், இன்றுதான் எனக்கு வந்திருக்கிறது. ஆம்... விவாகரத்துக்கு துணிந்திருக்கிறேன். ஆனாலும், 'இந்த வயசுல கோர்ட், கேஸ் என்று அசிங்கப்படணுமா..?’ என்று சராசரி பெண் புத்தி என்னை பின் இழுக்கிறது.

என்ன செய்யட்டும் நான்..?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 323

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 322ன் சுருக்கம்

''கிராமத்துப் பெண் என்பதால் வீட்டு உறவுகள் தவிர யாரிடமும் பேசமாட்டேன். கணவருக்கோ நிறைய நண்பர்கள், தோழிகள்... அதை என்னால் ஏற்க முடியவில்லை. தினமும் பூ, மாதம் ஒரு புடவை என்பது போன்ற என் சராசரி எதிர்பார்ப்புகளில் இருந்து வெகுதொலைவிலேயே நின்றார் கணவர். 'எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல், இனி உன் உறவுகள் வீட்டுக்கு வரக்கூடாது' என்று தடை போட்டார். மேலும் 'நல்ல அண்டர்ஸ்டாண்டிங் வரும் வரை குழந்தை வேண்டாம்' என்றார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொண்டாலும் பிரச்னைகள் ஓயவில்லை. 'ஃப்ரெண்ட் போல் இரு' என்கிறார். மனைவியை தோழியாக்கும் கல்ச்சர், எனக்குப் பிடிக்கவில்லை. அதனால், ஒரே வீட்டில் கடமைக்குத்தான் வாழ்கிறோம். வாழ்க்கை சுவாரஸ்யமாக வழி உண்டா தோழிகளே?!'

வாசகிகள் ரியாக்ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 100

விட்டுக்கொடுங்கள்!

கோதரியே... உங்கள் கணவர் புலம்ப வேண்டியதற்குப் பதில், நீங்கள் புலம்புகிறீர்கள். ஒரே வட்டத்துக்குள் வளர்ந்த உங்களை, பரந்த இந்த உலகை காண வைப்பதற்காக படாதபாடு படுகிறார். எல்லாவற்றையும் எதார்த்தமாக எதிர்கொள்ள வேண்டும் என்கிற பாடத்தை உங்களுக்குக் கற்றுத்தர நினைக்கிறார். இதற்கான போராட் டங்களுக்கு நடுவே, அடிக்கடி மிரட்டும் உங்களை சமாளிக்க வேண்டிய வேலை வேறு அவருக்கு. தயவுசெய்து அவரைப் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழுங்கள்... வெற்றிகளைக் காணுங்கள்!

- வி.ஐஸ்வர்யா, பாபநாசம்

அன்பால் வாழ்வை சீரமை!

ணவர், உங்கள் எதிர்பார்ப்பின்படி நடந்து கொள்ளாவிட்டாலும், உங்கள்மீது அன்பில்லாமல் இல்லையே. சிலருக்கு மனைவியின் சின்னச் சின்ன ஆசைகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கத் தெரியாது. அதற்காக, அதையே ஒரு பெரிய குறையாக எடுத்துக்கொண்டால், அதைவிட பேராபத்து வேறு ஏதும் இல்லை. கணவரின் முற்போக்கான குணங்கள் பிடிக்கவில்லையா... குழந்தையின் வளர்ப்பில் கவனத்தைச் செலுத்துங்கள். 'குழந்தையே உலகம்' என்று மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். அதன்பிறகு பாருங்கள்... கணவரின் குறைகளாக நீங்கள் காண்பவையெல்லாம், கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தே போகும்!

- அகிலா பஞ்சாபகேசன், பெங்களூரு