மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி 322 - ஃபாலோ அப்...

புருஷன் வீட்டுல தின்னாதான் சுடுசோறு!

'ஏழாம் பொருத்தக் கணவன்... ஏங்கித் தவிக்கும் மனைவி’ என்ற தலைப்பில், 25.2.14 தேதியிட்ட இதழில் 'என் டைரி’ படித்தேன். கிட்டத்தட்ட அது அப்படியே என் பிரச்னை... 9 வருடங்களுக்கு முன்! என் அனுபவத்தை அந்தத் தோழியுடன் பகிர்ந்துகொள்கிறேன்...

சாஃப்ட்வேர் இன்ஜினீயரான அவரைத் திருமணம் செய்த கூட்டுக் குடும்பத்துப் பெண்ணான எனக்கு, திருமணமான புதிதில் அவருடன் சண்டைபோட காரணங்கள் போதவில்லை. சமையலில் இருந்து சீரியல் வரை கருத்து வேற்றுமைகள்தான். குறிப்பாக, (உன்னைப் போலவே) எப்போதும் என் உறவுகளைத் தூக்கி வைத்துப் பேசும் என்னை ஒரு கட்டத்தில், ''நீ பேசாம ஊருக்குப் போய் உங்க சொந்தக்காரங்க கூடயே இரு'' என்று அனுப்பிவிட்டார். எனக்கும் அன்றிருந்த மனநிலைக்கு அது விடுதலையாகவே தெரிந்தது.

என் டைரி 322 -  ஃபாலோ அப்...

தாய் வீடு சென்றுவிட்ட எனக்கு முதலில் கிடைத்தது என்னவோ பரிவும், பாசமும்தான். இரண்டு மாதங்கள் கடந்த பின்னர், நான் கோபத்தில் ஏதாவது பேசினால், ''இப்படித் தான் உன் வீட்டுக்காரர்கிட்டயும் பேசி அவரை டார்ச்சர் பண்ணியிருப்பே'' என்றான், உடன்பிறந்தவன். அக்கம்பக்கம், சொந்தங்கள் ஏதோ காட்சிப் பொருள் போல என்னைப் பார்த்தார்கள், பேசினார்கள். எந்த சொந்தங்களுக்காக என் கணவ ரிடம் சண்டை போட்டேனோ... அவர்கள் எல்லாம் திருமணம், திருவிழா என்று வந்த வேலை முடிந்தவுடன் தத்தம் குடும்பத்துடன் சென்றுவிட, நானும் என் குழந்தையும் மட்டும் தனியாக நின்றோம். இப்படி ஒரு வருடமாக எனக்குக் கிடைத்த சவுக்கடிகள் அனைத்தும், கணவரைத் தேட வைத்தன.

என்னவர் கோபக்காரர்தான், என் குணத்தில் இருந்து நேரெதிரான வர்தான். ஆனால், பாசமானவர் என்ற ஞானோதயம் தாமதமாகவே வர... பெரியவர்கள் அவருடன் பேசி என்னை புகுந்த வீடு அனுப்பி வைத்தார்கள். எட்டாண்டுகள் ஆன பின்னும் இன்றும் அவர் அவராகத்தான் இருக்கிறார், நானும் நானாகத்தான் இருக்கிறேன். ஆனால், ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டோம்.

நீயும், நானும் மட்டுமல்ல... கேட்டுப் பார்த்தால் இது பெரும்பாலான குடும்பங்களின் வாடிக்கை பிரச்னையாகத்தான் இருக்கும். எனவே தோழி, என் பாட்டி சொன்ன இந்தப் பழமொழிகளை என்னைப்போல் நீயும் பிடித்துக்கொள்...

''புருஷன் வீட்டுல தின்னாதான் சுடுசோறு; அண்ணன் தம்பி வீட்ல தின்னா ஆறின சோறு, இல்ல பழைய கஞ்சிதான்!''

''ரோசத்தோட அம்மா வீட்டுக்கு வந்தா, மறுபடியும் ரோசமில்லாமத்தான் புருஷன் வீட்டுக்குப் போவணும்!''

- பெயர் வெளியிட விரும்பாத 'அவள்’ வாசகி