மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 325

கேட்கட்டுமா ஜீவனாம்சம்..?

டசடவென அத்தனை கெட்டவைகளும் நடந்து முடிந்துவிட்டன என் வாழ்வில்!

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த    நான்... அம்மா, அப்பாவுடன் 15 வயதிலேயே கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். 19 வயதில் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கு சென்ற மறுநாள், என் பெட்டியில் இருந்த 400 ரூபாயைக் காணவில்லை. இதைக் கேட்டால், ஏதாவது பிரச்னையாகிவிடும் என்று அமைதியாக இருந்தேன்.

என் டைரி - 325

இரண்டாம் நாள், நான் இல்லாத நேரம் என் கொழுந்தன் அவசரமாக, என் பெட்டியைத் திறந்து பணம் எடுத்துச் சென்றதைப் பார்த்த எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. இதை கணவரிடம் கூறியபோது, பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. என்னால் அப்படி இருக்க முடியவில்லை. அந்தப் பணத்தில் குடித்துவிட்டு வேறு வந்தது... என் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. நான்கு நாட்களுக்குமேல் பொறுக்காத நான்... மாமியாரிடம் போய்ச் சொன்னேன். 'யாரைப் பத்தி என்ன சொன்னே... அவன் குடிப்பானே தவிர, திருடற புத்தியெல்லாம் கெடையாது. மொதல்ல உங்க வீட்ல போடவேண்டிய மூணு பவுன் நகையைப் போடச் சொல்லு. அதை விட்டுட்டு இங்க இருக்கறவங்க மேல பழி போடாதே...’ என்று ஆட்டமாக ஆடிவிட்டார்.

அந்த நொடியிலிருந்தே அந்த வீடு எனக்கு நரகமாக... ஐந்தாவது நாள், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டேன். என் வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. என்னை அழைக்க வந்த கணவரிடம், 'தனிக்குடித்தனம் வைக்கிறதா இருந்தா வர்றேன்’ என்றேன். அவரோ, சில மாதங்களில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அந்த நிமிடத்தில், 'இனி யார் கையையும் எதிர்பார்க்காமல் உழைத்துப் பிழைப்பது' என்கிற முடிவை எடுத்தேன். இந்த 35 வயது வரை அப்படியே வாழ்கிறேன்.

உடம்பிலும் மனதிலும் வலு குறைந்துவரும் இந்த வயதில், 'டைவர்ஸ் வாங்காம இருக்கே. அதனால, உன் வீட்டுக்காரர்கிட்ட ஜீவனாம்சம் கேளு’ என்று மற்றவர்கள் கூறுவதில் ஊசலாடு கிறது மனம். என் மீதோ, அவர் மீதோ தவறென்று கூற முடியாமல், யாரோ செய்த தவறும், இருவரின் பொறுமை யின்மையும் பிரித்த வாழ்க்கை எங்களுடையது. இப்போது குடும்பம், குழந்தை என்றிருக்கும் அவரைத் தொந்தரவு செய்ய மனதுக்கு நெருடலாக இருக்கிறது. இருந்தாலும், ஆண் என்பதால் அவர் சுலபமாக மறுமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். பெண்ணாக போனதால், ஜென்மமே வீணாகிக் கிடக்கும் எனக்கு என்னதான் வழி?

சொல்லுங்கள் தோழிகளே..!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 325

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 324ன் சுருக்கம்

''காதல் திருமணம் செய்தவள் நான். புகுந்த வீட்டுக்கு சென்ற சில நாட்களிலேயே வேலைக்குச் செல்ல தொடங்கினேன். புதுப்பெண் என்பதால் வளையல், புதுப்புடவை அணிந்து சென்ற என்னைப் பற்றி, 'வேலைக்குப் போகும்போது எதுக்கு இத்தனை அலங்காரம்; புதுப்புடவை அணிந்து செல்லக்கூடாது; அடிக்கடி சிரிக்கக்கூடாது; அதிர்ந்து பேசக்கூடாது' என்று புதுப்புது தடை உத்தரவுகளாக போட்டவர்கள், கடைசியில் வேலைக்கே தடை போட்டார்கள். இது எதையுமே தட்டிக் கேட்கவில்லை என் கணவர். இவையெல்லாம் போதாதென்று தொடர் தொல்லைகள் வேறு.

ஏற்கெனவே, என் அம்மா அனாதையாக விட்டுச் செல்லப்பட்டதால், அப்பா மீதிருந்த என் கோபம், ஒட்டுமொத்த ஆண்களின் மீதானதாகவும் மாறிப்போனது... கணவரின் செய்கைகளால். அன்பற்ற, நம்பிக்கையற்ற அவரிடமிருந்து விவாகரத்து வாங்கிக்கொண்டு, ஒரேயொரு குழந்தையுடன் தனித்து வாழ்கிறேன். ஆனால், இப்போது தனிமை வாட்டுகிறது. எனக்காக அழ, இன்ப துன்பங்களில் பங்கெடுக்க யாருமில்லை என்பது ரணமாக உறுத்துகிறது. என் நிலை அறிந்து வாழ்க்கை தரும் ஒருவரை தேடலாம் என்றால், அவர் என் அப்பா, முன்னாள் கணவர் போலவே இருந்துவிட்டால் என்னாவது என்று அஞ்சுகிறேன். என்ன செய்யட்டும் தோழிகளே..?''

வாசகிகள் ரியாக்ஷன்    

ஒவ்வொன்றுக்கும்   பரிசு:  

என் டைரி - 325

  100

மனச்சலனங்களை அடக்கி...

விவாகரத்து பெற்ற உன் கையில் குழந்தை. பிறந்த வீட்டு ஆதரவும் இல்லை. ஆக, என்ன கொடுமை நேர்ந்தாலும் தட்டிக்கேட்க ஆளில்லை. இந்த மாதிரி நிலைமையில், எந்த ஆணும் உங்கள் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்து உங்களுக்கு நல்ல வாழ்க்கை கொடுப்பான் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. மீண்டும் ஒரு தோல்வி ஏற்பட்டால் சமாளிக்க முடியுமா என்பதை விருப்பு வெறுப்பின்றி யோசியுங்கள். முடியுமென்று தோன்றினால்... இன்னொரு வாழ்க்கை பற்றி யோசியுங்கள். இல்லையென்றால் மனச்சலனங்களை அடக்கி, குழந்தையை நல்லபடியாக வளர்ப்பதில் முழு கவனம் செலுத்துங்கள்.

- விஜயலஷ்மி, மதுரை

சிந்தித்து செயல்படு!

டந்தது நடந்துவிட்டது. இனியாவது எடுக்கும் முடிவை தெளிவோடு நல்ல சிந்தனையோடு அலசி ஆராய்ந்து எடுக்க வேண்டும். உங்களுக்கு இருப்பது இரண்டு வழிகள்... ஒன்று தங்கள் பிள்ளையின் வளர்ச்சி, முன்னேற்றம் என்று அதில் கவனம் செலுத்துவது. அடுத்தது அது பாதிக்காமலும் தனக்காகவே என்று ஒரு துணையை தேடிக்கொள்வது. முக்கியமாக முந்தைய திருமணத்தில் நடந்த உண்மைகளைக் கூறி, அதற்கேற்றாற்போல் ஒருவரைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

- த.சாந்தி, திருவாரூர்

சமூகமே போதும்!

பெண்களாகிய நாம், இன்று எல்லா துறைகளிலும் முன்னேறி வருகிறோம். நீங்கள் உங்களுடைய பணியில் மட்டுமல்லாது, சமூக வாழ்க்கையிலும் ஆர்வம் காட்டலாம். பெண்களுக்கான எவ்வளவோ சமூக விழிப்பு உணர்வு அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் நீங்கள் உங்களை இணைத்துக் கொண்டால், உங்களுடைய வாழ்வே அழகாக, அர்த்தமுள்ளதாக மாறும். உங்களைப் போன்று நல்ல எண்ணமுடைய, சிந்தனைகளுடைய எத்தனையோ சகோதரிகளின் நட்பு உங்களுக்கு புத்துணர்ச்சியை தரும். உங்களுடைய குழந்தைக்கு நீங்கள் ஒரு வழிகாட்டியாக இருப்பீர்கள். சமூகத்துக்கு உங்களுடைய பங்களிப்பை தருவதன் மூலமே மட்டற்ற மகிழ்ச்சியை பெறமுடியும்!

கோ.சவிதா, வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், சென்னை