மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 326

புகுந்த வீட்டு வேலைக்காரி..! வாசகிகள் பக்கம்

சிறுவயதில்  இருந்தே, 'வாழ்க்கையில் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் நிற்க வேண்டும்' என்கிற எண்ணம் விதைத்து வளர்ந்தவள் நான். ஆனால், பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவுடன் திருமணத்தை முடித்துவிட்டனர். இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் தாயாகிவிட்டேன்.

என் டைரி - 326

என் கணவர், 'மனைவியானவள், திருமணத்துக்குப் பிறகு படிக்கவோ, வேலைக்குச் செல்லவோ கூடாது' என்ற கொள்கை உடையவர் என்பதால், என்னுடைய 'சொந்தக் கால்' எண்ணம், கனவாகவே இருந்தது. குடும்பத் தேவைகள் அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார். ஆனால், பத்து ரூபாய்க்குக்கூட தன்னை எதிர்பார்த்தே இருக்க வேண்டும் என்று அவர் நினைத்ததால், என் கையில் ஒரு பைசாகூட கொடுத்து வைக்கமாட்டார். ஒரு பிளவுஸ் துணி வாங்கக்கூட அவரை கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சி, ஆயிரம் நினைவூட்டல் செய்தால் மட்டுமே எனக்குக் கிடைக்கும். 'அப்படி கைமீறாம வெச்சுக்கிட்டாதான் பொண்டாட்டி அடங்கி நடப்பா’ என்கிற எண்ணம் அவருக்கு. பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் என்கிற விஷயமெல்லாம் அவரின் அறிவுக்கு எட்டாததாகவே இருக்கிறது.

'நம் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட அவரை எதிர்பார்த்து இருக்கும் நிலை இனியும் வேண்டாம்' என்று, கிடைக்கும் நேரத்தில் நமக்குத் தெரிந்த தையலையே ஒரு தொழிலாக செய்யலாமென முடிவெடுத்தேன். என் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும், சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கிற எண்ணத்தை அது விதைக்கும் என்றும் நினைத்தேன். வீட்டில் இருந்த மெஷினில், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தைத்துக் கொடுத்தேன். சின்னச் சின்ன தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, என் கையில் காசு வந்தது. ஆனால், அது நீடிக்கவில்லை. என் கணவரின் உறவினர்கள் அனைவரும், தங்களுக்குத் தைத்துக் கொடுக்குமாறு துணிகளைக் கொண்டுவந்து சேர்த்தனர். ஆனால், ஒருவரும் அதற்கான பணம் கொடுப்பதில்லை. அவர்களிடம் வாய்விட்டு பணம் கேட்க முடியாத சங்கடம் எனக்கு.

கணவரிடம் அவர்களுக்கு உள்ள சலுகையை மனதில் வைத்து, 'இவ காசில்லாம தைச்சுக் கொடுத்தா என்ன..?’ என்ற மெத்தனம் அவர்களுக்கு. என் கணவருக்கும், வெளியில் தைத்துக் கொடுத்து நான் காசு பார்ப்பதற்குப் பதில், இப்படி உறவினர்களுக்கு இலவசமாக தைத்துக் கொடுப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தது. இப்படியாக, கடந்த ஒரு வருடமாக நான் தைத்துக்கொண்டிருக்கிறேன்... 100 ரூபாய் வருமானம்கூட இல்லாமல். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சொந்தங்களுக்கு தைத்துக் கொடுப்பதற்கே சரியாக இருப்பதால், வெளியாட்களிடமும் துணிகளை வாங்க முடியவில்லை.

இப்போது என் கணவருக்கு மட்டுமல்லாமல், அவர் உறவுகளுக்கும் வேலைக்காரியாகிவிட்டேன். இந்த துயரத்தில் இருந்து விடுபட்டு, உழைக்கும் காசு கையில் சேர வழி என்ன தோழிகளே?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 326

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 325- ன் சுருக்கம்

''சடசடவென்று எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னை, 19 வயதில் திருமணம் செய்துகொடுத்தனர். புகுந்த வீடு சென்ற அடுத்த நாளே... என் பெட்டியில் இருந்து, என் கொழுந்தன் பணம் திருடிச் சென்றது... அந்தப் பணத்தில் குடித்துவிட்டு வந்தது எனக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. கணவரிடம் சொன்னபோது, கண்டுகொள்ளவில்லை. மாமியாரோ, 'முதல்ல உங்க வீட்ல போட வேண்டிய மூணு பவுனை போடச் சொல்லு' என்று திருப்பித் தாக்கினார். அந்த நொடியிலிருந்தே புகுந்த வீடு நரகமாக மாற... ஐந்தாவது நாளே பிறந்த வீடு திரும்பிவிட்டேன். அவர், வேறொரு பெண்ணை திருமணமும் செய்துகொண்டுவிட்டார். இப்போது, 35 வயதான நிலையில் உடம்பிலும் மனதிலும் வலு குறைந்து வரும் சூழலில், 'டைவர்ஸ் வாங்காம இருக்கே... உன் கணவரிடம் ஜீவனாம்சம் கேளு’ என்று மற்றவர்கள் சொல்வதால் மனம் ஊசலாடுகிறது.

என்ன செய்யட்டும் தோழிகளே!''

வாசகிகள் ரியாக்ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 100

சட்டப்பூர்வமானதில்லை!

சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமலோ அல்லது முதல் மனைவியான உங்கள் எழுத்துப்பூர்வ சம்மதம் பெறாமலோ மறுமணம் செய்துகொண்டிருக்கிறார் கணவர். இது, சட்டப்பூர்வமானது இல்லை என்பது மட்டுமல்ல... குற்றமும் ஆகும். இதற்கென அவர்மீது வழக்குத்தொடுத்து நியாயமான தொகையை கோர்ட் மூலம் பெற்று, அதைக்கொண்டு உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுங்கள். மன உளைச்சலுடன் வாழ்ந்து, உரிமையை விட்டுக்கொடுப்பதால் எவ்வித பயனுமில்லை.

- சுலோசனா சம்பத், கோவை

ஆன்மிகத்தில் ஈடுபடு!

உனக்கு அநீதி இழைத்து... மறுமணம் செய்துகொண்ட கணவனிடம் சட்டப்படி விவாகரத்து வாங்குவதே சரி. இலவச சட்ட உதவி மையங்களை நாடினால் உனக்கு உதவுவார்கள். இதன்மூலம் கிடைக்கும் தொகை உன் பிற்கால வாழ்க்கைக்கு உதவும். கட்டிய மனைவியை விட்டுவிட்டு, மறுமணம் செய்தவரிடம் பாவ, புண்ணியம் பார்க்காதே! கிடைக்கும் தொகையைக் கொண்டு வாழு... இல்லையென்றால், ஆன்மிகத்தில் ஈடுபடு!

- எஸ்.சித்ரா, சிட்லபாக்கம்

வாழ்க்கையைத் தொடரலாமே...

அன்புச் சகோதரி, உன் வாழ்க்கை மிகவும் வேதனை அளிக்கிறது. ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பார்கள். ஐந்தாவது நாளே திரும்பி வந்துவிட்டாய். உன் வீட்டாரின் அறிவுரையையும் ஏற்க மறுத்துவிட்டாய். கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப்பிறகு திடீரென ஜீவனாம்சம் கேட்பதற்கு உடம்பிலும் மனதிலும் வலு குறைவதைக் காரணமாக சொல்கிறாய். ரத்தம் சூடாக இருக்கையில் நியாயங்கள் புரிவதில்லை. வீம்புக்காக விவாகரத்து கேட்டு இந்த வயதில் நீதிமன்றம் போவதைவிட, 35 வயதாகும் நீ, ஒரு நல்ல துணையைத் தேடிக்கொண்டு, வாழ்க்கையைத் தொடரலாமே!

- சியாமளா ரங்கன், மந்தைவெளி