பதற வைக்கும் பழைய காதல் !
வாசகிகள் பக்கம்

நான், என் கணவர், ஒரே மகள், மாமியார் என்று சென்று கொண்டிருந்த அமைதியான வாழ்க்கையில், இப்போது ஒரு புயல் வீசிவிடுமோ என்று பீதியடைந்து கிடக்கிறேன்... சில நாட்களாக. காரணம், பருவ வயதில் நான் செய்த தவறு.
அப்போது 20 வயது எனக்கு. கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருணத்தில்தான் அறிமுகமானான் அவன். படிப்பை முடித்த கையோடு 23 வயதில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பொறுப்பான இளைஞனாக என் மனதுக்குப்பட்ட அவனைக் காதலித்தேன். நிறைய பேசினோம்... பல இடங்களுக்குச் சென்றோம்... தனிமையில் சந்தித்துக் கொண்டோம். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அனுபவித் தோம். ஆனால், கல்யாணப்
##~## |
பேச்சை எடுத்தபோது, அவன் நழுவினான். என்னைக் கை கழுவினான். வாழ்க்கையே வெறுத்தது எனக்கு.
அந்நேரம் வீட்டில் எனக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்ய, நடந்தவற்றை கெட்ட கனவாக எண்ணி மறந்தேன், மீண்டேன். திருமணத்துக்குப் பின் கணவரின் ஊருக்கு வந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இடையில் பிறந்தகத்துக்குச் செல்லும்போது எல்லாம் அவனை சந்திக்காது இருக்க வேண்டுமே என்று மனம் பதறும். பிழைப்புக்காக எங்கோ கண் காணாமல் இடம் பெயர்ந்து விட்ட தகவல்கள் காதில் விழும். மனம் நிம்மதியடையும்.
இந்நிலையில்தான் சென்ற மாதம் இதே ஊரில் அவனைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் அவசரமாக ஓடி வந்து என்னிடம் பேச முயன்றவனை கவனிக்காததுபோல வந்துவிட்டேன். 'தப்பி வந்தேன்' என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், கடந்த வாரம் என் கணவருடன் வெளியில் சென்றிருந்தபோது, மீண்டும் என் கண்ணில் பட்டான். என்னை நோக்கி அவன் முன்னேற, பதற்றமாகி கணவருடன் அங்கிருந்து அவசரமாக நகர்ந்தேன்.
இப்போது இரண்டு, மூன்று நாட்களாக கோயிலுக்குச் சென்று திரும்பும் என் மாமியாரிடம் வீடு வரை அவன் பேசிக்கொண்டே வருகிறான். ''வீட்டுக்கு வந்துட்டுப் போப்பா...'' என்று அவர் அவனை அழைப்பதும், ''இன்னொரு நாள் வர்றேன்மா...'' எனும் அவன் என்னைப் பார்த்து வில்லத்தனமாகச் சிரித்தபடியே கிளம்புவதும் வாடிக்கையாகி உள்ளது. என் மாமியாரிடம் ஒருமுறை இதுபற்றிப் பேசினேன். அவர், ''தெரிந்த பையன் மாதிரி இருக்கான்'' என்று சொன்னாலும், மீண்டும் அதைப் பற்றியும், அவனைப் பற்றியும் அவரிடம் பேசினால், விஷயம் வேறுவிதமாகப் போய்விடுமோ என்று தயக்கமாக, பயமாக இருக்கிறது.
எங்கள் ஊர் ஆயிரம் வீடுகளே உள்ள சின்ன ஊர். அவன் இங்கு எதற்கு வந்திருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், மாமியார் மற்றும் கணவருடன் பேசிப் பழகி, 'நட்பு' என்ற போர்வையில் வீட்டுக்குள் அவன் நுழைவதற்கு எந்தச் சிரமமும் இருக்காது. ஒருவேளை அப்படி விஷமாக அவன் என் வாழ்க்கைக்குள் வருவதற்குள்... அவனிடமே, 'என் வழியில் வராதே’ என்று பேசுவதா, இல்லை என் கணவரிடம் பழைய கதையைச் சொல்லிவிடுவதா..?
தவிக்கிறேன்... தெளிவு கொடுங்கள் தோழிகளே!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 256-ன் சுருக்கம்
''எம்.டெக். பட்டதாரியான எனக்கு, ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது. 'ஒரே பையன். நானும் அவனும் உன்னை கண் போல பார்த்துப்போம்’ என்று பெண் பார்க்க வந்தபோது வந்துவிழுந்த மாமியாரின் வார்த்தைகளில் உருகித்தான், தலை நீட்டினேன். வேலைக்குப் போகும் எண்ணத்தையும் கைவிட்டு குடும்பத் தலைவியானேன். நான்கு மாதங்கள் ஆன நிலையில், எனக்கும் என் கணவருக்குமான இடைவெளியை அதிகரிக்கும் வேலையில் இறங்கிவிட்டார் என் மாமியார். பத்து நாட்கள் வெளியூர் சென்றிருந்த கணவரை ஆவலோடு நான் எதிர்பார்த்திருக்க... அவர் வந்து சேர்ந்த நொடியே... 'கால் வலிக்கிறது, கை குடைகிறது' என்று காரணம் சொல்லி, மருத்துவமனையில் தன்னை சேர்க்க வைத்ததோடு, மகனையும் தன்னுடனேயே தங்க வைத்துக் கொண்டுவிட்டார்.
ஊர் மெச்சும் மருமகளாக நடந்து கொள்ளவே நான் நினைக்கிறேன். ஆனால், மாமியாரின் இந்த தவறான போக்கால் 'டிபிக்கல்' மருமகள் போல ஆகிவிடுவேனோ என்று கவலையாக இருக்கிறது. இதிலிருந்து எப்படி மீள்வது?''
வாசகிகளின் ரியாக்ஷன்...
பொங்கி எழாதே... புரிந்து கொள்!

பொதுவாக மகனுக்குத் திருமணம் ஆனதுமே அம்மாக்களுக்கு வரும் பிரச்னைதான் இது. உன் மாமியார் விஷயத்தில் கொஞ்சம் ஓவராக இருக்கிறது. அதற்காக பதற்றப்பட்டு, நீயே காரியத்தை கெடுத்துக் கொண்டுவிடாதே!
இந்த விஷயத்தை எவ்வளவுதான் நான் எடுத்துச் சொன்னாலும், உன்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாதுதான். காரணம்... உன்னுடைய வயது அப்படி. இதுவே, என் வயதுக்கு (இப்போது எனக்கு வயது 45) வரும்போது நீயே புரிந்து கொள்வாய். நான் இப்படிச் சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.... அப்படி 45 வயதில் புரிந்து கொண்ட மருமகள்தான் நானும்!
நாம் பார்க்கும் சினிமாக்கள், ரசிக்கும் சீரியல்கள், படிக்கும் புத்தகங்கள் என்று எல்லாவற்றிலுமே 'நியாயம்... தர்மம்' என்பது உரக்கச் சொல்லப்படுகிறது. அது அத்தனையுமே நியாயம்தான். ஆனால், 'பிராக்டிகல் லைஃப்' என்று வரும்போது... 'அட்ஜெஸ்ட்மென்ட்' என்கிற ஒன்றையும் நாம் பார்க்க வேண்டும். அதைவிடுத்து, 'நேர்கோட்டிலேயேதான் பயணிப்பேன்' என்று அடம் பிடித்தால்... எதிரே தாறுமாறாக வண்டி ஓட்டி வருபவர்களால் நமக்கும் சேர்த்தேதான் ஆபத்து!
நிறைய படித்திருக்கும் நீ, முதிர்ந்த வயதில்இருக்கும் உன் மாமியார் அப்படி, இப்படி என்று தவறாகவே அடம்பிடித்தாலும், அதையெல்லாம் தந்திரமாக தாண்டிச் செல்வதில்தான் இருக்கிறது வாழ்க்கை. அப்படி இல்லாமல், 'எடுத்தேன்... கவிழ்த்தேன்’ என்று உடனடியாக ஏதாவது ஒரு முடிவை எடுத்தால்... அது உனக்கேதான் பாதகமாக வந்து சேரும். அதற்காக உன்னை அடிமையாக வாழ்க்கையை நடத்து என்று சொல்லவில்லை. கொஞ்சம் பிராக்டிகல் வாழ்க்கையை உணர்ந்து நடந்து கொள் என்றுதான் கூறுகிறேன்.
இதே மாமியார் ஒரு கொடுமைக்காரியாக நடைபோட்டால், அங்கே நீ உரிமைக்குரல் எழுப்புவதில் தவறே இல்லை. இங்கே உன் மாமியார், மகன் பாசத்தாலும்... பத்தாம்பசலித்தனத்தாலும்... கொஞ்சம் பழையவர் என்பதாலும் புரியாமல் நடந்து கொள்கிறார் என்பதுதான் உண்மை. இதற்காக நீ பொங்கியெழத் தேவைஇல்லை... புரிந்து கொண்டாலே போதும்!
எஸ்.பிரேமா, காஞ்சிபுரம்
மாமியார் புகழ் பாடு..!
உன் மாமியார், 'எடுப்பார் கைப்பிள்ளை' என்று இருக்கிறார் என நினைக்கிறேன். யாராவது உன்னைப் பற்றி அவரிடம் தேவையில்லாத துர்போதனை செய்திருப்பார்கள். அதன் விளைவுதான் மறைமுகமாக உன்னிடம் அப்படி நடந்து கொள்கிறார் என்றே தோன்றுகிறது. மாமியார் காதுபட, உன் கணவரிடம்... மாமியாரின் நல்ல செயல்களை எடுத்துச் சொல். அக்கம்பக்கத்தினரிடம் பேசும்போது வாய்க்கு வாய் மாமியார் புகழ் பாடு. இவையெல்லாம் தானாகவே உன் மாமியாரின் காதுகளுக்குச் சென்றுவிடும். அதுவே அவருக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தி, அவரை உன் வழிக்கு கொண்டுவந்துவிடும். மனம் தளராமல் முயற்சி செய். வாழ்த்துக்கள்!
- ஸ்ரீதேவிராஜன், திருவிடைமருதூர்