குணம் கெட்டது... குடும்பம் குலைந்தது! வாசகிகள் பக்கம்
முரட்டுக் கோபத்தால் முத்தான வாழ்க்கையைச் சிக்கலாக்கியவள் நான்!
எட்டு வயதிலேயே விடுதியில் சேர்த்துவிட்டார்கள் என் வீட்டில். பள்ளி, கல்லூரி வாழ்க்கை மொத்தத்தையும் கைதி போல் சிறைப்படுத்திய விடுதி வாழ்க்கை, என் வீட்டினர் மேல் எனக்கு வெறுப்பைக் கொடுத்தது. ஒரு கட்டத்துக்கு மேல், சகிக்கப் பழகி, என் தனிவழிச் சாலையில் பயணிக்க ஆரம்பித்தேன். குடும்ப உறவுகளுடனான அரவணைப்பில் இருந்து வெகுதூரத்தில் இருந்த எனக்கு, ஆறுதலாக வந்தான் அவன். தனிமையில் இருந்த என்னை, தன் அன்பால் மீட்டான். இரு வீட்டிலும் அதிக எதிர்ப்பில்லாமல் எங்கள் காதலை ஏற்க, திருமண வாழ்வில் இணைந்தோம்.
இதுவரை சபிக்கப்பட்ட நான், இனி உலகத்திலேயே அதிர்ஷ்டசாலி நான்தான் என சந்தோஷமாக மண வாழ்க்கையை ஆரம்பித் தேன். மென்மையான குணம், குடி, மது என்று எந்த கெட்டபழக்கமும் இல்லாதது, என்னிடம் அன்பைப் பொழிந்தது என... அவர் என் வாழ்வில் நான் கண்டிராத வசந்தத்தைக் கொண்டுவந்தார். ஆனால், இருவரின் வேலை நேரம், வாழ்க்கையின் திசையை மாற்றியது. அவருக்கு டே ஷிஃப்ட், எனக்கு நைட் ஷிஃப்ட். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் ஒன்றாக இருப்போம். அன்றும் அலுவல் நிமித்த தொலைபேசிகள் அவரை சில மணி நேரங்கள் விழுங்கிவிட, மீண்டும் தனிமையாக உணர்ந்தேன். எதிலும் பிடிப்பில்லை. எதற்கெடுத்தாலும் கோபம். அதை அவரிடம்தான் கொட்டினேன்.

எனக்கு அழுகையும், ஆத்திரமும் வந்ததே தவிர, பிரச்னைக்கான தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அவர் அதைச் சொன்னார்... ''உன் நிலைமை எனக்குப் புரியுதும்மா. உன்னோட வாழ்க்கையில ஒரு பகுதி விடுதியிலேயே தொலைச்சுட்டே. இனிமே நான் அதை எல்லாம் சரி செய்திடுவேன்னு நினைச்சப்போ, வேலை நேரம் நம்மைப் பிரிக்குது. நீ பேசாம உன் வேலையை விட்டுடு. என்கூட ரிலாக்ஸ்டா, சந்தோஷமா இருக்கலாம்'' என்றார். ஒரு மனசு சரி என்றாலும், மற்றொரு மனசு, 'இத்தனை வருஷமா சுதந்திரப் பறவையா இருந்த உன்னை, இந்த ஒரு காரணத்தைச் சொல்லி அடிமையாக்கப் பார்க்கிறார் கணவர்’ என்று கூவியது. இரண்டாவது மனசுதான் இறுதியில் ஜெயித்தது. என் சுதந்திரத்தைப் பறிப்பதாக மீண்டும் கோபத்தில் கத்தித் தீர்த்துவிட்டு, வேலைக்குச் சென்றேன்.
என் கோபம் ஆத்திரமாக, ஆத்திரம் அகங்காரமாக வளர்ந்துகொண்டே போனது. ஒரு கட்டத்தில் கணவரை குத்திக்கிழித்து ரணப்படுத்த... ''தனிமையிலேயே இருந்த உனக்கு, பேசிச் சிரிக்க, சந்தோஷமா இருக்க தெரியலையா, பிடிக்கலையானு உன் மனசையே கேட்டுப்பார். என்னை விட்டுரு'' என்றவர், அன்றிலிருந்து என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இன்றோடு 10 வருடங்கள் ஓடிவிட்டன.
அவரும் நானும் ஒரே வீட்டிலேயே ஒட்டுறவில்லாமல் வசிக்கிறோம்... எல்லாம் என் குணங்கெட்ட கோபத்தால்! இப்போது என் வேலையையும் விட்டுவிட்டேன். வரும் காலத்திலாவது நாங்கள் சேர்ந்து வாழ, அவரை சமாதானப்படுத்த வழியிருக்கிறதா தோழிகளே?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100

என் டைரி 326-ன் சுருக்கம்
''சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் வளர்ந்தவள் நான். ஆனால், 12-ம் வகுப்பு முடித்ததும் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டேன். கணவரோ... திருமணத்துக்குப் பிறகு படிக்க அனுமதிக்காததோடு, எதற்கும் அவரை எதிர்பார்த்தே இருக்க வேண்டும் என்கிற நிலையை உருவாக்கிவிட்டார். இதனால், என் 'சொந்தக்கால்’ எண்ணம் கனவானது.
அத்தியாவசிய தேவைகளுக்காகவும், என்னுடைய பெண் குழந்தைகளுக்கு சொந்தக்காலில் நிற்கும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காகவும்... எனக்குத் தெரிந்த தையல் தொழிலில் இறங்கி, கிடைத்த பணத்தில் சின்னச் சின்ன தேவைகளை நிறைவேற்றிக்கொண்டேன். இந்நிலையில் கணவரின் உறவுகள், தங்களுடைய துணிகளைக் கொடுத்து, இலவசமாகவே தைத்துச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்போது கணவரின் உறவுகளுக்கும் வேலைக்காரியாகிவிட்டேன். இதிலிருந்து விடுபட்டு, நான் உழைக்கும் காசு என் கையில் சேர வழி சொல்லுங்கள் தோழிகளே!''
வாசகிகள் ரியாக்ஷன்
அன்பு சாதிக்கும்..!
கணவரின் உறவினர்கள், தங்களின் துணிகளைத் தைக்கச் சொல்லி பணம் கொடுக்காமல் போனாலும்கூட, வேறு யாருடைய துணிகளையும் தைக்கக்கூடாது என்று யாரும் சொல்லவில்லையே! நீ சம்பாதிக்கக்கூடாது என்று யாரும் சொல்லவில்லையே! ஆகவே, அந்த உறவினர்களையே கருவியாக பயன்படுத்தி, அவர்கள் மூலம் அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி, துணிகளை வாங்கித் தைத்து வருமானம் ஈட்டலாமே..! ஆயுதம் சாதிக்காததை அன்பு சாதிக்கும்!
- ம.அக்ஷயா, அரூர்
'என்ன கொண்டு வருவாய்?’
திருமணத்துக்குப்பின் சின்னச் சின்ன செலவுகளுக்கும் கணவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் சொந்தக்காலில் நின்று சம்பாதிக்க வேண்டும் என்று நீ எடுத்த முடிவு அருமை. இதில், 'உறவினர்களுக்கு இலவசமாக துணி தைத்துக் கொடுக்க வேண்டி உள்ளதே' என்று வருந்துவது, தேவையற்றது. இந்த உலகம், 'உங்க வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்? எங்க வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்?' என்றுதான் எதிர்பார்க்கும் என்பதை மனதில் கொள். நீ வேலைக்காரியல்ல... ஒரு நிறுவனத்தின் முதலாளி என்பதை உணர்ந்துகொள். இதையே மனதில் இருத்தி, உறவினர்கள் உணரும்படிச் செய்து, அவர்களிடமும் பணத்தைக் கேட்டு வாங்கத் தயாங்காதே! 'கணவர் என்ன சொல்வாரோ?' என்றும் மறுகாதே!
- யோ.ஜெயந்தி, குனியமுத்தூர்
விழலுக்கு இறைத்த நீராக..!
உன் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகப் போவதை ஏன் அனுமதிக்கிறாய்..? இதுவரை இலவசமாக தைத்துத் தந்ததுபோதும். முதலில், பிற டெய்லர்கள் வாங்குவதில் பாதி கூலியாவது உறவுகளிடம் கேட்டு வாங்கு. உழைப்புக்கு ஊதியம் பெறுவதில் தயக்கமும், வெட்கமும் தேவைஇல்லை. இதை உன் கணவரிடமும் ஆணித்தரமாக, தைரியமாக எடுத்துச் சொல். வெற்றி உன் பக்கமே!
- விஜயலஷ்மி ரவீந்திரன், ஈரோடு